எப்ஸ்டீன் கோப்புகளும் இணையத்தில் அம்பலமான ரகசியங்களும்

இணையம் ஒரு ஆச்சரியமான விஷயம், அதைவிட ஆச்சரியம் இணையத்தில் ஆர்வமுள்ளவர்கள் உருவாக்கி வெளியிடும் மென்பொருட்கள்.

கடந்த சில நாட்களாக இணையத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருவது, அமெரிக்காவிலிருந்து வெளியிடப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) கோப்புகள். மொத்தம் சுமார் 60 இலட்சத்திற்கும் அதிகமான மின்னஞ்சல்கள், கோப்புகள், படங்கள் என அந்தச் சமூகக் குற்றவாளியிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட தரவுகளை அமெரிக்க அரசாங்கம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.

அரசாங்கம் 60 இலட்சக் கோப்புகளை வெளியிட்டாலும், அதில் யார் யாரின் பெயர்கள் வந்துள்ளன, எந்த மாதிரி குற்றங்களைப் பற்றி எப்ஸ்டீன் விவரித்துள்ளார் என்பதை உலகம் முழுவதும் இருக்கும் ஆர்வலர்களும், ஊடகவியல் ஆய்வாளர்களும் ஆராய்ந்து வருகிறார்கள். இதற்குச் சமீப காலங்களில் வளர்ந்துள்ள செயற்கை நுண்ணறிவு (AI) பெரிதும் உதவுகிறது. என்றாலும், ஒரு புலனாய்வு ஆர்வலராக அந்தச் செய்திகளை மின்னஞ்சல்களாகவே பார்ப்பதற்காக, ஒருவர் இந்தத் தரவுகள் அனைத்தையும் பதிவேற்றி இணையத்தில் ஒரு மென்பொருளை வெளியிட்டுள்ளார்.

நீங்கள் jmail dot world என்ற இணைய முகவரிக்குச் சென்றால், நாம் அன்றாடம் பயன்படுத்தும் கூகுள் ஜிமெயில் (Gmail) தளத்தைப் போலவே ஒன்று செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளதைக் காணலாம். அதில் அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள 60 இலட்சக் கோப்புகளைப் பதிவேற்றி, ஜெப்ரி எப்ஸ்டீன் உயிரோடு இருந்து தன் ஜிமெயில் கணக்கைப் பயன்படுத்தினால் எப்படி இருக்குமோ, அத்தகைய ஒரு தோற்றம் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கை எப்படிப் பயன்படுத்துவீர்களோ, அதைப் போலவே இந்தச் செயற்கை ஜிமெயில் கணக்கைப் பயன்படுத்தி, வெளியிடப்பட்டுள்ள கோப்புகளைத் தேடிப் படிக்கலாம். இதை மென்பொருளாகத் தயாரிப்பது எளிதுதான், ஆனால் இப்படி ஒன்றை ஒருவர் சிந்தித்து இலவசமாக வெளியிட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

Jmail World - A Gmail clone
Jmail World – A Gmail clone

இந்தத் தரவுகளை ஆராயும்போதுதான் ஒரு பேரதிர்ச்சி தரும் தகவல் வெளிவந்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ‘விண்டோஸ்’ பிரிவுக்குத் தலைவராக 2012இல் இருந்தவர் ஸ்டீவன் சினோஃப்ஸ்கி. அப்போது நிறுவனத்தின் ரகசிய மின்னஞ்சல்களை ஜெப்ரி எப்ஸ்டீனிடம் அவர் பகிர்ந்து கொண்ட செய்தி இப்போது அம்பலமாகியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தை வெளியில் இருந்து முப்பது ஆண்டுகளாகப் பார்த்து வரும் எனக்கு இந்தச் செய்தி மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது.

2012இல் வெளிவந்த உடனேயே சர்பேஸ் ஆர்.டி (Surface RT) விண்டோஸ் மடிக்கணினிகள் சந்தையில் பலத்த தோல்வியைச் சந்தித்தன. அப்போது நிறுவனத்திற்குள் நடந்த குழப்பங்களையும், தான் வேலையை விட்டு விலகும்போது பெற வேண்டிய சலுகைகளைப் பற்றியும் எப்ஸ்டீனிடம் இவர் ஆலோசனை கேட்டுள்ளார்.

கம்பெனி போட்ட முதலீட்டில் கிட்டத்தட்ட 900 மில்லியன் டாலர் (அப்போது சுமார் 6000 கோடி ரூபாய்) காலி! உலகத்துக்கே மென்பொருட்களை விற்கும் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரி, ஒரு கேடுக்கெட்டவரிடம் போய் யோசனை கேட்டதை என்னவென்று சொல்வது?

சினோப்ஸ்கி பயத்தில் “விஷயம் வெளியே தெரிந்தால் மானம் போய்விடும்” என்று நிறுவனத்தின் தலைவர் பால்மரிடம் மின்னஞ்சலில் கதறுகிறார். ஆனால் இன்னொரு அதிகாரியான கெவின் டர்னர், “அதெல்லாம் ஒன்றுமில்லை, ‘நாங்கள் புதிதாகக் கற்றுக்கொள்கிறோம்’ என்று சொல்லிச் சமாளித்துவிடலாம்” என்று மிகச் சாதாரணமாக ஒரு யோசனையைத் தருகிறார். ஆக மொத்தம், கம்பெனிக்குள்ளேயே எல்லாரும் ஆளுக்கொரு பக்கமாக இழுத்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.

சினோப்ஸ்கி எப்ஸ்டீனிடம் ஏன் மின்னஞ்சலில் இதையெல்லாம் பகிர்ந்துகொண்டார் என்பது இப்போதும் மர்மமாகவே இருக்கிறது.

குறிப்பு: ஜெப்ரி எப்ஸ்டீன் என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெரும் பணக்காரர்; இவர் சிறுமிகளைப் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கிய குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டவர். 2019-இல் இது தொடர்பான வழக்கில் அவர் சிறையில் இருந்தபோது, மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார்.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading