11 நாட்களில் 30 லட்சம் ஆபாசப் படங்கள்! எலோன் மஸ்க்கின் ‘கிராக் ஏ.ஐ.’ (Grok AI) கிளப்பியிருக்கும் விபரீதங்கள் பற்றி ஒரு அதிரடிக் காணொலி!
தொழில்நுட்பம் கையில் கிடைத்தால் அதை வைத்து மனிதர்கள் எதைச் செய்வார்கள் என்பதற்குச் சிறந்த உதாரணம் எக்ஸ்-ஏ.ஐ. (xAI) நிறுவனத்தின் கிராக் ஏ.ஐ. (Grok AI). வெறும் 11 நாட்களில் இந்த இயற்றறிவு (Generative AI) மாதிரியைக் கொண்டு சுமார் 30 லட்சம் ஆபாசப் படங்களை விடியோக்களை உருவாக்கியிருப்பதாக ஓர் இணையப் பாதுகாப்பு ஆய்வு கூறுகிறது. இதில் உச்சகட்டக் கொடுமை என்னவென்றால், பெண்கள் பொதுவெளியில் பகிர்ந்துள்ள சாதாரணப் படங்களைக் கூட, அவர்களின் அனுமதி இல்லாமல் “மெய்ப்புனைவு” (Deepfakes) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமாக மாற்றியதுதான்.
ஐரோப்பிய ஒன்றியம் (EU) முதல் இந்தியா வரை பல நாடுகள் இப்போது எலோன் மஸ்க்கைக் கேள்விகளால் துளைக்கத் தொடங்கிவிட்டன. மஸ்க் என்னவோ தனது ஏ.ஐ.-யில் “காரம் முறையை” (Spicy Mode) தடுத்துவிட்டதாகச் சொல்கிறார். ஆனால் பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடுமா என்ன? இந்தப் பாதுகாப்பை எப்படி எளிதாக உடைப்பது என்பதற்கான விடைகள் இணையத்தில் மலிந்து கிடக்கின்றன.
நானும் எனது நண்பர் ஷான் கருப்புசாமியும் இணைந்து “சேப்பியன் ஜீனோ” (Sapien Geno) யு-ட்யூப் சேனலுக்காக இந்தப் “ஆபாச செயற்கை நுண்ணறிவு” (Porn AI) சர்ச்சையை ஆழமாக அலசியுள்ளோம்.
இந்த உரையாடலில் நாங்கள் விவாதித்தவை:
➡️ தடையை மீறும் தொழில்நுட்பம்: கிராக் தடுத்தாலும் இதே தொழில்நுட்பம் இலவசமாக உங்கள் செல்பேசியிலேயே கிடைக்கிறது. அந்த ஆபத்தைப் பற்றி இதில் கொடிட்டுக் காட்டியுள்ளோம் (விளக்கமான காணொலி விரைவில்).
➡️ 3 மில்லியன் சர்ச்சை: இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை படங்கள் உருவானது எப்படி?
➡️ மெய்ப்புனைவின் ஆபத்து: ஹாலிவுட் நடிகைகள் முதல் சாமானியப் பெண்கள் வரை இந்தப் படங்களால் சந்திக்கும் சவால்கள்.
➡️ கருத்துச் சுதந்திரமும் தணிக்கையும்: எலோன் மஸ்க்கின் “கருத்துச் சுதந்திரம்” எங்கே எல்லை மீறுகிறது?
➡️ சட்ட ரீதியான விசாரணைகள்: அரசுகள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன?
நமது தனிப்பட்ட அகவுரிமையும் (Privacy), இணையப் பாதுகாப்பும் ஒரு நூலிழையில் தொங்கிக்கொண்டிருப்பதை உணர்த்தும் மிக முக்கியமான விவாதம் இது. மென்பொருள் துறையில் இருப்பவர்கள் மட்டுமல்ல, இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய பதிவு இது.
காணொலியைப் பார்த்துவிட்டு, செய்யறிவின் இந்தப் போக்கு பற்றி உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

