இரண்டு வாரங்களுக்கு முன்னர் இங்கிருந்து ஸ்விகி மூலமாக வாங்கியிருந்த உணவு வகைகள் பிடித்திருந்தன. அதனால் போன ஞாயிறு மாலை நண்பர்கள் நால்வராக மயிலாப்பூர் கேளீர் கேண்டீன் (Kaylir Canteen) சென்றோம்.
உணவகம் இருப்பது மைலாப்பூர் சி.ஐ.டி. காலனியின் முதல் பிரதான (முக்கிய) சாலையில். இந்தச் சாலைக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை ஹோட்டல் சவேராவிற்கு எதிரில் உள்ள பாலத்திற்கு அந்தப் புறமாகச் செல்லலாம்; அல்லது மைலாப்பூர் ஆலிவர் சாலையில் ஈசபல் மருத்துவமனைக்கு எதிராகவும் செல்லலாம். எளிதாக அடையாளம் காண, இந்த உணவகம் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர், கலைஞரின் மகளான திருமதி கனிமொழி அவர்களின் இல்லத்திற்கு எதிரில் இருக்கிறது.
மாலை நேரத்தில் சாப்பிடவென்றே கேளீர் கேண்டீனில் பற்பல பலகாரங்கள் வைத்திருந்தார்கள். நாங்கள் சாப்பிட்டது: குழிப்பணியாரம், பஜ்ஜி, சென்னா சுண்டல், மிளகாய் பொடி சாண்ட்விச், காபி, மற்றும் ஏ.பி.சி. ஜூஸ் (Apple, Beetroot, Carrot Juice) 🥤. ஆர்டர் செய்யச் செய்ய, புதிதாக எல்லாவற்றையும் சமைத்துக் கொடுத்தார்கள். உணவின் சுவை நன்றாகவே இருந்தது, காரமில்லை.
கூட்டமில்லை, அமைதியான இடம். வெளியில் உட்கார்ந்து பொறுமையாகச் சாப்பிடலாம். உள்ளே ஏ.சி. வசதியும் உள்ளது. ஞாயிறு மாலை என்பதால் காரை 🚗 நிறுத்த நிறைய இடம் இருந்தது – கூட்டமாக இருந்தால் வண்டியை நிறுத்த அவர்களே ஓட்டுநர் (Valet) வசதி வழங்குகிறார்கள்.
இந்தப் பக்கம் போனால் சாப்பிட்டுப் பார்க்கவும்.






Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

