சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் ‘உலா’ பேருந்து என்கிற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. ரூபாய் ஐம்பது கட்டணம் செலுத்தினால் ஒரு நாள் முழுவதும் இதில் பயணிக்கலாம். இதன் சிறப்பு என்னவென்றால், இது நிற்கும் எந்த இடத்திலும் இறங்கலாம்; நம் வேலை அங்கே முடிந்தவுடன் மீண்டும் அங்கேயே ஏறலாம், அல்லது வேறு நிறுத்தங்களிலும் ஏறிக் கொள்ளலாம். முப்பது நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு பேருந்து வரும்.
இதன் வழித்தடம் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் தொடங்கி, மீண்டும் அங்கேயே வந்து முடியும். வழியில் எழும்பூர் இரயில் நிலையம், பூங்கா இரயில் நிலையம், வள்ளுவர் கோட்டம், எழும்பூர் அருங்காட்சியகம், செம்மொழிப் பூங்கா, மயிலாப்பூர் லஸ் கார்னர், சாந்தோம் தேவாலயம், மெரினா கடற்கரை, கண்ணகி சிலை எனப் பதினெட்டு இடங்களில் நின்று செல்லும். ஊர் சுற்றிப் பார்க்க வருபவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட சேவை இது. இத்தகைய ‘ஹாப்-ஆன் ஹாப்-ஆப்’ (Hop-On Hop-Off) சேவைகள் மேலை நாடுகளில் மிகப் பிரபலம்.
பழைய பேருந்துகளை வீணாக்காமல் பொலிவுபடுத்தி, கண்ணில் அடிக்கும் சிகப்பு வண்ணத்தில் உலாவிட்டுள்ளது போக்குவரத்துத் துறை. அவர்களுக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றி. பல ஆண்டுகளுக்கு முன்னர் இத்தகைய ஹாப்-ஆன் ஹாப்-ஆப் சேவை சென்னை அடையார் இந்திரா நகரில் தொடங்கி, மாமல்லபுரம் வரை சென்றதாக எனக்கு நினைவு; இப்பொழுது இல்லை என நினைக்கிறேன். இதே தடத்தில் புதிதாக வாங்கியுள்ள மாடிப் பேருந்து ஓடப் போகிறது எனப் படித்தேன்.


சென்னைக்குச் சுற்றுலா வருவோர் தவறாமல் இந்தச் சேவையைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.


Nice, good to know on vintage service.