“செயலிகளின் கதை”, எனக்கு மிகவும் நிறைவைக் கொடுத்த நூல். உலகம் முழுவதிலும் இருந்து, மென்பொருள் துறையில் அதிகம் அறியப்படாத ‘கசகஸ்தான்’ போன்ற நாடுகளில் இருந்தும் வந்த பல்வேறு செயலிகளின் (Apps) கதையைச் சொல்லும் நூல் இது. எங்களின் இந்த நூல் விரைவில் உங்கள் கையில் இருக்கும். படிக்கச் சுவையாகவும் எளிமையாகவும் இருக்கும் என நம்புகிறேன். படித்துப் பார்த்து உங்களின் கருத்துகளைப் பகிரவும்.
நூலை வாங்குவதற்கான விவரங்கள், ஜீரோ டிகிரி பக்கத்தில் உள்ளன.
என்னாலேயே நம்ப முடியவில்லை. இன்று தொடங்கும் 2026 சென்னை புத்தகக் கண்காட்சியில் எனது இரண்டாவது தமிழ் நூலான “செயலிகளின் கதை” வெளிவரவிருக்கிறது. நினைத்தாலே மகிழ்ச்சியாக இருக்கிறது.
இதில் சொல்லியுள்ள ஐம்பத்திரண்டு செயலிகளும் அந்தந்தப் பிரிவுகளில் வெற்றி பெற்றவை. அவற்றை உருவாக்கியவர்களின் வாழ்க்கை பின்னணியை, படிப்பை, கதையைச் சுருக்கமாகச் சொல்லியுள்ளேன். பெரும்பாலும் இவர்களின் கதைகளை இணையத்தில் தேடினால் கிடைப்பதில்லை; ஏ.ஐ.யும் திணறுகிறது. ஒவ்வொரு செயலியின் அதிகாரப்பூர்வ தளங்களிலும் விக்கிப் பக்கங்களிலும் அவர்களின் நிறுவனர்களின் பளபளக்கும் தன்விவரங்களே கிடைக்கின்றன – துடைத்து மெழுகிய அந்த விவரங்களில் எந்தச் சுவாரசியமும் இருக்கவில்லை.
அதனால் லிங்க்டின் தளத்தில் அவர்களின் பெயரைத் தேடத் தொடங்கி, அவர்களோடு தொடர்புடைய முக்கிய நபர்களின் விவரங்களை ஆராய்ந்து, அவற்றிலிருந்து கிடைத்த தகவல்களைச் சரிபார்த்து, பிறகு எல்லாவற்றையும் கோர்த்து எழுத வேண்டி இருந்தது. இதைத் தாண்டி எனக்கு மிகவும் உதவியது யு-ட்யூப். ஆரம்பக் காலங்களில், அதாவது நிறுவனம் பெரியதாக வளர்வதற்கு முன்னர் நிறுவனர்கள் எதார்த்தமாக அளித்த பேட்டிகளை, மேடைப் பேச்சுகளைக் கேட்டேன். அவற்றிலிருந்தே எனக்கு ஒவ்வொரு செயலியின் முழுப் பயணமும் புரிந்தது. உதாரணமாக, பில் கேட்ஸின் இளைய மகள் ஃபோபி கேட்ஸ் தொடங்கியுள்ள ஃபியா (Phia) ஃபேஷன் செயலியின் தயாரிப்பு குறித்தும், அவரின் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் வரவேற்பாளரின் பின்னணியைக் கூடத் தெரிந்து கொள்ள முடிந்தது.
கதைகளை, நிறுவனர்களைத் தாண்டிப் பல செயலிகளை இயக்கும் தொழில்நுட்பத்தையும் தமிழிலேயே அங்கங்கே சொல்லியுள்ளேன். புத்தகத்தைப் படிக்கும் வாசகர்களிடமிருந்து வரும் கருத்துகளைப் பொறுத்து, இந்தத் தொழில்நுட்ப முறைகளை வருங்காலங்களில் விரிவாக எழுத வேண்டும் என விரும்புகிறேன்.
கடந்த ஓர் ஆண்டாக மெட்ராஸ் பேப்பர் இணைய இதழில் இதைத் தொடராக எழுத வாய்ப்பளித்த நண்பர், வழிகாட்டி, ஆசிரியர் திரு பா.ராகவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. முக்கியமாக வாராவாரம் வந்த கட்டுரைகளைச் சரிபார்த்துக் கொடுத்த கோகிலாவிற்கும் பாலாஜி அவர்களுக்கும் நன்றி. விரைவாக நான் எழுதியதைப் படித்து எனக்குக் கருத்துகளையும் குறைகளையும் சுட்டிக்காட்டிய எனது நண்பர்களுக்கும் நன்றி.
நூலை வாங்குவதற்கான விவரங்கள், ஜீரோ டிகிரி பக்கத்தில் உள்ளன.
மேலே இருப்பது, மெட்ராஸ் பேப்பர் (Madras Paper) ஆசிரியர் திரு. பா. ராகவன் அவர்கள், எனது ‘செயலிகளின் கதை’ நூலைப் பரிந்துரைக்கும் காணொலி.
நூலைப் பற்றிய கூடுதல் விவரங்கள்
வாட்ஸ்அப், நெட்பிளிக்ஸ், சோமாட்டோ, ட்ரூகாலர், டெலிகிராம், டிக்டாக், டீப்சீக் உள்ளிட்ட புகழ்பெற்ற 52 செயலிகளின் (Mobile Apps) வெற்றி வரலாறுகளை இந்நூல் ஆராய்கிறது. நிறுவனங்களின் அறிக்கைகளைப் பகுப்பாய்ந்து, நிறுவனர்களின் கதைகளை இணையத்தின் மூலைமுடுக்குகளில் தேடி, பல நூறு மணி நேரப் பேட்டிகளைக் கேட்டு, ஒவ்வொரு தகவலையும் சரிபார்த்து எவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சுவையாக எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
இலவச மளிகைப் பொருட்களுக்காகக் காத்திருந்த அகதி எப்படி வாட்ஸ்அப் நிறுவனத்தைத் தொடங்கினார், 48 வயதில் தனது உயர்பதவியைத் துறந்துவிட்டு நைகாவை (Nykaa) ஒரு பெண்மணி எப்படி உருவாக்கினார், தனது 14 வயதிலேயே மென்பொருள் எழுதிச் சம்பாதித்த சிறுவன் (Spotify) எனப் பல வியக்கத்தக்க செய்திகள் இதில் உள்ளன.
இந்தத் தொகுப்பு வெறும் சிலிக்கான் பள்ளத்தாக்கு நிறுவனங்களை மட்டும் பேசாமல், இந்தியா, கசகஸ்தான், இஸ்ரேல், ஆஸ்திரேலியா, உக்ரைன் என உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து வந்த வெற்றிக் கதைகளை உள்ளடக்கியுள்ளது. ஒரு செயலி உருவாகும் சூழல், அதன் நிதி மேலாண்மை மற்றும் அது அசுர வளர்ச்சி அடைந்த முறை ஆகியவற்றை ஆசிரியர் துல்லியமாகப் பதிவு செய்துள்ளார்.
ஒவ்வொரு பயனரும் படிக்க வேண்டிய நூல் இது. இதனைத் துளிர்த்தொழில் (Startup) நிறுவனர்களின் கையேடு என்றும் சொல்லலாம். மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் தொடராக வெளிவந்து ஏராளமான வாசகர்களின் பாராட்டைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.


வாழ்த்துகள்