பொதுவாக சென்னையில் சைவம் என்றால் இட்லி, தோசை, சாம்பார், ரசம், சாத வகைகள், காய்கறி என்று மட்டுமே நினைத்திருப்போம். இதற்குக் காரணம் சைவம் என்றால் இங்கே இருப்பது சரவண பவன், சங்கீதா, ஏ2பி உணவகங்களே. இவற்றைத் தாண்டி ஒன்றிரண்டு ஜைன உணவுகளையும் வழங்கும் சில வட இந்தியா உணவகங்களும் சென்னையில் உண்டு.
ஆனால் உலகின் பல பாகங்களிலிருந்து அவர்களின் சைவ உணவுகளை மட்டுமே வழங்கும் உணவகங்கள் குறைவு. இந்தக் குறையைத் தீர்க்க வசந்தப் பவன் அவர்களின் விபி வோர்ல்டு (VB World) என்கிற நட்சத்திரத் தர உணவகங்களை வழங்குகிறார்கள். அவர்களின் புதிய வேளச்சேரி விபி வோர்ல்டுக்கு நேற்று காலைச் சிற்றுண்டி சாப்பிடச் சென்றேன். சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட கிளை இது. குருநானக் கல்லூரிக்கு இரண்டு கட்டிடங்கள் தாண்டி, வேஸ்டின் ஹோட்டலுக்கு எதிரில் இருக்கிறது. வெளியிலிருந்து பார்க்கவே அழகாக இருக்கிறது விபி வோர்ல்டு.
இங்கே மரக்கறி உண்பவர்களுக்கு வேண்டிய பல உணவு வகைகள் கிடைக்கிறது. தென் இந்திய இட்லி, தோசையில் தொடங்கி, வட இந்திய நாண், ரொட்டி, சாட், ஐரோப்பாவின் பேஸ்ட்ரிஸ், பர்கர், இத்தாலியின் பிச்சா, பாஸ்தா, தெற்காசிய நூடுல்ஸ் வகைகள், சீன உணவுகள் என எல்லாமே கிடைக்கிறது. ஆப்பிரிக்க வகைகளும் மெக்சிகோ உணவுகளும் இல்லையென்றே நினைக்கிறேன். இதைத் தவிர வித விதமான பனிக் கூழ்களும் (ஐஸ் கிரிம்) கிடைக்கிறது.
விபி வோர்ல்டு உட்புறச் சூழல் உயர்தரமாகவும் சேவையும் சிறப்பாக இருந்தது. உணவுகளின் விலை ஏற்புடையதாகவே இருந்தது.
காலை எட்டு மணி என்பதால் வெளியூர் உணவுகளைத் தவிர்த்து நானும் நண்பரும் பொங்கல் (1/2), இடியாப்பம், தோசையும் காபியும் சாப்பிட்டோம். எல்லாமே நன்றாக இருந்தது. பில்டர் காபி அபாரமாக இருந்தது. பொதுவாக என் பதிவுகளில் நான் உண்ட உணவு வகைகளின் படங்களைப் பகிர்ந்து ‘கடுப்பு’ ஏற்றுகிறேன் என்று சிலர் வருத்தப்படுவதால் இந்த ஒரு பதிவில் பொங்கல்/இடியாப்பம்/தோசை படங்கள் எதுவும் கிடையாது. நன்றி.






திருப்தியாகச் சாப்பிட்டுவிட்டு வெளிவந்து, எதிரில் இருக்கும் பீனிக்ஸ் மாலில் “இட்லிக் கடை” திரைப்படத்தைப் பார்க்கப் போனோம்.
சைவச் சாப்பாட்டாளர்களுக்காகவே வந்திருக்கும் வேளச்சேரி விபி வோர்ல்டுக்கு குடும்பத்தோடு சென்று சாப்பிட்டு மகிழவும்.
பொறுப்பு துறப்பு: இந்தப் பதிவில் எந்த விளம்பரமோ, நிதியுதவியோ பெறப்படவில்லை. முழுக்க நான் காசுக் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் பொருட்களை அல்லது சேவையைப் பற்றியது. இவை என் தனிப்பட்ட அனுபவம், இதன் பயனைப் பற்றி எந்தவித உத்தரவாதமும் நான் அளிக்கவில்லை. நன்றி.
நன்றி.
பின்குறிப்பு: இதற்கு அடுத்த மாதம், நவம்பர் 2025இல் மீண்டும் போன போது படங்களுடன் எழுதிய பதிவு இங்கே.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.
