படிக்கத் தொடங்கும் முன்னர் தயவுசெய்து இரண்டு மூன்று ஸ்வெட்டர்களைப் போட்டுக் கொண்டு வாருங்கள், உலகிலேயே மிகவும் குளிரான நகரமான ரஷ்யாவின் சகா குடியரசில் இருக்கும் யாகுட்ஸிக் (Yakutsk) போகலாம். இங்கே ஒவ்வொரு நாளும் வெப்பநிலை, தண்ணீர் உறையும் பூஜ்ஜியம் செல்சியஸ்ஸுக்கும் கீழே மைனஸ் இருபது டிகிரி செல்சியஸ்ஸில் தொடங்கி, மைனஸ் அறுபது செல்சியஸ் வரை போகும். இந்த நகரில் 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது இன்-டிரைவ் (InDrive) செயலி.
டிசம்பர் 2012இல் நடந்த உண்மைச் சம்பவம் இது. யாகுட்ஸிக்கின் கடும் குளிரில் வெளியில் போகவே டாக்சி வேண்டும். அந்தச் சூழ்நிலையில், ஊரில் இருந்த நான்கைந்து டாக்சி நிறுவனங்கள் சேர்ந்து ஒரே நாளில் தங்களின் சேவைக் கட்டணங்களைப் பாதிக்கும் அதிகமாக உயர்த்தினார்கள். இதைப் பார்த்துக் கோபம் கொண்ட அலெக்சாண்டர் பாவ்லோவ் என்கிற மாணவர், ரஷ்யாவில் பிரபலமான சமூக வலைத்தளத்தளமான ‘விகே’வில் ஒரு சுயேச்சைக் குழுவைத் தொடங்கினார்.
யாருக்காவது டாக்சி வேண்டுமென்று இந்தக் குழுவில் செய்தி அனுப்பினால், உடனே குழுவில் இருக்கும் வேறு யாராவது ‘நான் அந்த இடத்தில் உங்களைக் கொண்டு சென்று விடுகிறேன்’ என்று அவருடைய காரோடு முன்வருவார். இருவரும் தங்களுக்கு உகந்த கட்டணத்தை முடிவு செய்து பயணத்தை மேற்கொள்வார்கள். வெறும் மூன்று லட்சம் பேர் வசிக்கும் யாகுட்ஸிக் நகரில் தொடங்கிய இந்தக் குழுவில் சில நாட்களிலேயே சுமார் ஐம்பதாயிரம் பேர் இணைந்தார்கள்.
இதன் வெற்றியைப் பார்த்த ஆர்சன் தோம்ஸ்கி (Arsen Tomsky), அலெக்சாண்டரைத் தொடர்பு கொண்டு பத்தாயிரம் அமெரிக்க டாலர்களுக்கு இந்தக் குழுவை வாங்கினார். அடுத்த பல மாதங்கள் ஆர்சனும் மூன்று பொறியாளர்களும் கடுமையாக வேலை செய்து, இக்குழுவில் கிடைத்த அதே மாதிரியான டாக்சி சேவையைச் செயலி வடிவில் உருவாக்கினார்கள். இப்படி உருவாக்கிய செயலிக்கு ‘இன்-டிரைவ்’ எனப் பெயர் வைத்து 2013ஆம் ஆண்டு நவம்பரில் வெளியிட்டார் ஆர்சன். சுயாதீன ஓட்டுநர்கள் (Independent Drivers) என்பதன் சுருக்கமே இன்-டிரைவ்.
தொடர்ந்து படிக்க, மெட்ராஸ் பேப்பர் முகவரியைத் தொடரவும்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

