கொழுப்பு இருப்பவர்கள் மட்டும் படிக்கவும். மன்னிக்கவும். இனிப்பானவர்கள் மட்டும் படிக்கவும். இன்னொரு முறை மன்னிக்கவும். முதலிலிருந்து வருகிறேன். கொழுப்புள்ள இனிப்புகளை விரும்புபவர்கள் மட்டும் பார்க்கவும். மற்றவர்கள் உடம்பிற்கு இது ஏன் கெடுதல், “இது எவ்வளவு கலோரி இருக்கும்” என்று நினைப்பவர்கள் இந்தப் பதிவைத் தவிர்த்துவிடவும். நன்றி.
ஐதராபாத்திலிருந்து வந்த உறவினர், “இப்படியும் சிலர் இன்னும் இருக்கிறார்கள்”, கொண்டு வந்த கொடுத்த இனிப்பைப் படத்தில் பார்க்கிறீர்கள். இது அந்த நகரில் புகழ்பெற்ற இனிப்பு வகை என்றும் சொன்னார்.
இதன் பெயர் காஜூ பாக். 58% முழு முந்திரிப்பருப்பும், 35% வெல்லம், இவை போதாதென்று நெய், சர்க்கரை மற்றும் ஏலக்காய் மட்டுமே கலந்து செய்யப்பட்ட இனிப்பு இது. கிடைக்கும் இடம் ஆல்மண்ட் ஹவுஸ் (Almond House). கால் கிலோ பெட்டியின் விலை ரூபாய் 550.
சுவை எப்படியென்றா கேட்கிறீர்கள்? அருமை, வாயில் போட்டவுடன் கரைகிறது. வியப்பான விசயம்: நான் நினைத்த அளவு இனிப்பில்லை, அதாவது திகட்டும் அளவு சர்க்கரை தெரியவில்லை, நெய்யும் முந்திரியும் வெல்லத்தைக் கட்டுப்படுத்திவிடுகிறது என்று நினைக்கிறேன்.
அடுத்த முறை யாராவது ஐதராபாத்திலிருந்து இந்த ஸ்வீட்பாக்ஸ் கொண்டுவராமல் வந்தால் அவர்களை உங்களின் நட்பு, உறவு வட்டத்தினில் இருந்து நீக்கிவிடுங்கள்.


குறிப்பு: இது தமிழ்நாட்டுத் திருமணச் சீர் வரிசையில் வைக்கப்படும் இனிப்பான நோக்கோல் போன்றது. நோக்கோலில் பெரும்பாலும் வெள்ளை சர்க்கரை பொடி இருக்கும், ஒரு வாய்க்கு மேல் திகட்டும், இது அப்படியில்லை.
முக்கிய குறிப்பு: இதில் இரண்டு வாய் சாப்பிட்டுவிட்டு அரைமணி நடந்துவிட்டேன் என்று சொன்னால் மகிழ்வீர்கள் என்றால், ஆம் நடந்தேன்.
பொறுப்பு துறப்பு: இந்தப் பதிவில் எந்த விளம்பரமோ, நிதியுதவியோ பெறப்படவில்லை. முழுக்க நான் காசுக் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் பொருட்களை அல்லது சேவையைப் பற்றியது. இவை என் தனிப்பட்ட அனுபவம், இதன் பயனைப் பற்றி எந்தவித உத்தரவாதமும் நான் அளிக்கவில்லை. நன்றி.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

