நம்மில் பலரும் நம் ஃபேஸ்புக் பக்கத்தில் பல விஷயங்களை, முக்கிய விஷயங்களை, அதிக நேரம் செலவு செய்து எழுதுகிறோம். படங்களைப் பகிர்கிறோம். பின்னாளில் ஏதாவது ஒரு காரணத்தால் அந்த ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டாலோ அல்லது வேறு சிக்கலால் முன்பு நாம் எழுதிய பதிவுகளைப் பார்க்க முடியவில்லை என்றால் அது பெரும் இழப்பு, வருத்தமாகவும் இருக்கும். இதைத் தவிர்க்க அவ்வப்பொழுது ஃபேஸ்புக்கில் நாம் எழுதிய பதிவுகளை, பகிர்ந்த படங்களை வேறு ஓர் இடத்தில் சேமித்து வைத்துக் கொள்வது நல்லது. இதைப்பற்றி முன்பே நான் சில முறை இங்கே எழுதியிருக்கிறேன்.
கடந்த சில ஆண்டுகளாக இப்படிச் செய்வதை மிக எளிதாக்கி இருக்கிறது மெட்டா நிறுவனம். ஃபேஸ்புக்கில் உங்கள் “அக்கௌன்ட் செண்டர்” (Account Centre) பக்கத்துக்குச் சென்று, “Your information and permissions” பகுதியில் “Transfer a copy of your information” என்கிற பக்கத்திற்குப் போகவும். அங்கே “படங்களும் வீடியோக்களும்” மட்டுமா அல்லது பதிவுகளும் வேண்டுமா என்கிற கேள்வி உங்களின் தேர்வைச் செய்யவும். அடுத்து அவற்றை எங்கே சேமிக்க வேண்டும் என்ற கேள்விக்குக் கூகுள் போட்டோஸ் அல்லது டிராப்பாக்ஸ் அல்லது உங்களுக்கு வேறு எங்கு மேகச் சேமிப்புக் கணக்கு இருக்கிறதோ அதைச் சுட்டிக்காட்டி இணைக்கவும். அடுத்து எந்தக் கால இடைவெளியில் இந்தச் சேமிப்பு நடக்க வேண்டும், அதாவது தினம்தோறுமா, மாதத்திற்கு ஒரு முறையா, வருடத்திற்கு ஒரு முறையா என்று தேர்வு செய்யவும். அந்த இடைவெளியில் ஃபேஸ்புக் தானியங்கி முறையில் உங்களுடைய பதிவுகள் அனைத்தையும் நீங்கள் குறிப்பிடும் இடத்தில் சேமித்து உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பும்.
இந்தப் பதிவை இன்று நான் எழுதக் காரணம், நான் ஏற்கனவே இயக்கி இருந்த இந்த வசதியை இன்று மெட்டா செய்துமுடித்து அனுப்பியிருந்த மின்னஞ்சல். வருடத்திற்கு ஒருமுறை எனது எல்லா ஃபேஸ்புக் பதிவுகளையும் படங்களையும் எனது டிராப்பாக்ஸ் கணக்கில் சேமிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். அதை ஒழுங்காகத் தானாகவே ஃபேஸ்புக் செய்து எனக்கு இன்றைக்கு அனுப்பிய மின்னஞ்சலை நீங்கள் முதல் படத்தில் பார்க்கிறீர்கள். அடுத்த சேமிப்பு ஓட்டம் அடுத்த ஆண்டில் நடக்கும் என்றும் அந்த மின்னஞ்சல் தெரிவிக்கிறது.
தயவுசெய்து எல்லோரும், உங்களது ஃபேஸ்புக் பதிவுகள் முக்கியம் என்றால் இந்த வசதியைத் தேர்வு செய்து இயக்கிக்கொள்ளவும். இதற்குக் கட்டணம் எதுவும் கிடையாது. இலவசம். உங்கள் மேகக் கணினி சேமிப்புக்கு (Google Photos, Dropbox, Google Drive) நீங்கள் சந்தா எடுத்திருக்க வேண்டும். நன்றி.
குறிப்பு: இதே வசதி இன்ஸ்டாகிராம் (Instagram) கணக்குக்கும் கிடைக்கிறது. ட்விட்டரிலும் இருக்கிறது, ஆனால் ஒவ்வொரு முறையும் நீங்கள் போய் இயக்க வேண்டும், அதுவாகவே கால இடைவெளியில் இயங்காது. கூகுள் கணக்கில் (Gmail, Calendar, Drive, Youtube) போன்றவற்றிலிருந்து நாம் சொல்லும் கால இடைவெளியில் தானியங்கியாகவே வேறு இடத்தில் சேமிக்கும் வசதி இருக்கிறது.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.


வழியெல்லாம் சரி. ஆனால் கூகுள் டாக்கில் சேமிக்கிறேன் பேர்வழி என்று ஒவ்வொரு போஸ்டையும் தனித்தனி டாகுமெண்ட்டாக்கி, என் கூகுள் டாக் பக்கம் முழுவதையும் ஃபைல்களால் நிரப்பிவிட்டான். மொத்தமாக ஒரே டாகுமெண்ட்டாகக் கொடுத்தால் குறைந்தா போய்விடுவான்? இதில் ஒன்றைத் தேடி எடுக்கக்கூட முடியாது.
அப்படியா, எனக்கு Dropboxஇல் சேமிக்கும் போது மொத்தமாக ஒரே HTML பைலாக, சேர்த்து வந்தது.