கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆப்பிள் ஐ-போன் (12 Pro & 16e) பயன்படுத்துகிறேன். அவை ஓரிரு முறை மட்டுமே செயலிழந்து, மறுஇயக்கம் (ரீபூட்) ஆகி இருக்கிறது. இன்றைக்கு என் நடைப்பயிற்சியின் போது யு-ட்யூப்பில் பாடல் கேட்டுக் கொண்டிருந்தேன். வேறு ஒரு வீடியோவை யு-ட்யூப்பில் தேடினேன். திடீரென்று எனது ஐ-போன் 16E செயலிழந்து ரீபூட் ஆனது. அடுத்து சில நிமிடங்களில் வேறு ஒரு செயலியை இயக்கினேன், அப்போதும் பாடல் ஓடிக் கொண்டிருந்தது, மீண்டும் மறுஇயக்கம். அதற்குப் பிறகு கடந்த சில மணிநேரமாகச் சரியாக இருக்கிறது.
வாங்கி நான்கு மாதங்கள் ஆகிறது, ஆப்பிளின் புகழ்பெற்ற தொழில்நுட்ப உதவி வசதியைப் பெறும் காலம் இருப்பதால், Apple Support செயலியின் மூலம் அவர்களுக்கு மேசேஜ் செய்தேன். உதவிக்கு உடனே வந்தார்கள். அதுவல்ல விசயம். நான் கேட்டுக் கொண்டதில் என் செல்பேசியின் நிலையை என் அனுமதியைப் பெற்று அவர்களே சோதனை செய்தார்கள். இந்த சோதனை முழுவதும் தானியங்கி முறையில் ஓரிரு நொடிகளில் முடிந்தது. அதைத் தொடர்ந்து எல்லாம் சரியாக இருக்கிறது என்று சொன்னார்கள்.
எதற்கும் இருக்கட்டும் என்று இந்த “உதவி அழைப்புக்கான” எண்ணை (டிக்கெட் நம்பர்) வாங்கிக் கொண்டேன் – நான் கேட்டவுடன் எனக்கு வசதியாக அதை மின்-அஞ்சலாகவும் அனுப்பினார்கள். சோதனை முடிந்தவுடன் அவர்கள் எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை இணைப்பில் பார்க்கவும்.
நான் அவர்களின் தயாரிப்பில் குறை சொல்லப் போக, அவர்கள் சோதனை செய்து எல்லாம் சரியாக இருப்பதாகச் சொன்னதோடு நிற்காமல், என் செல்பேசியை நான் நன்றாகப் பராமரிப்பதாக என்னைப் பாராட்டுகிறார்கள். நான் ஏதோ சாதனை செய்தது போல என்னைப் புகழ்ந்து, அவர்கள் நிறுவனத்தின் மேல் எனக்கு ஏதாவது மனக்கசப்பு இருந்தால் அதை மறக்க வைக்கிறார்கள். என் மனதை எப்படிக் குறையிலிருந்து மாற்றி, மகிழ்ச்சியடையச் செய்கிறார்கள் பாருங்கள். அறிவியல் பூர்வமான புத்திசாலித்தனமான மார்க்கேட்டிங் இது.
அதோடு வரிக்கு வரி இந்தப் பிரச்சனையைத் தவிர உங்களது இந்த நாள் நன்றாக இருந்திருக்கும் என்றும் சொல்கிறார்கள். இது ஒருவித நேர்மறை வலுவூட்டல் (பாஸிடிவ் ரீ-என்வோர்ஸ்மண்ட்) மனோவியல் முறை என்று தோன்றுகிறது.
இது தான் ஆப்பிள் நிறுவனத்தின் அடையாளம் (பிரண்டு). ஆப்பிள் தயாரிப்புகளைச் சந்தையில் பல மடங்கு விலை கொடுத்து மக்கள் வாங்குவதன் ரகசியமும் இதுவே.


#applesupport #iphone #Awesome #positivereinforcement
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

