நேற்று “மூர் மார்க்கெட்” என்ற அந்தப் பெயரைப் பார்த்தவுடன் ஒரு நிமிடம் நின்றுவிட்டேன்.
மேல் தளத்தில் இருக்கும் பி.வி.ஆர். கிரண்ட் மாலில் ‘மார்கன்’ படத்திற்குப் போக நேரமாகிவிட்டதால் சென்றுவிட்டேன். அடுத்த படமும் முடிந்து கீழேயிரங்கும் போது தரைதளத்தில் இருந்த கடைக்குள் சென்று பார்த்தேன். அது ஏற்கனவே ‘படிக்கப்பட்ட’ அல்லது ‘ரசிக்கப்பட்ட’ புத்தகக்கடை (Pre-loved bookshop). Moore Market என்கிற பெயரின் ஈர்ப்பின் காரணமாக ஓரிரு நிமிடங்கள் பார்த்தேன். அழகான உள் வடிவமைப்பு. முழுவதும் மரத்தினால் ‘ஹாரி பாட்டர்’ காலச் சாயலில் செய்திருந்தார்கள். பல புத்தகங்களும் ரூபாய் 99 இருந்து கிடைக்கிறது. கடை முதலாளியிடம் (நினைக்கிறேன்) சலுகை என்னவென்று கேட்டேன், ஐந்து புத்தகங்கள் எடுத்தால் ஒன்றை இலவசமாகத் தருவதாகவும், நூலைப் பொருத்து மேலும் விலையில் சலுகைக் கொடுக்கவும் தயார் என்றார். புத்தகங்களைத் தவிரப் பழைய கிராமபோன் வட்டுகளும் (ரெக்கார்ட்) கிடைக்கிறது. நேற்று இரவு உணவிற்கு நேரமாகிவிட்டதால் பொறுமையாகப் புத்தகங்களின் தலைப்புகளைப் பார்க்க முடியவில்லை. அடுத்த முறை செல்லும் போது பார்க்க விருப்பம்.
இந்த ‘கிரண்ட்’ மால் இருப்பது சென்னை வேளச்சேரி விஜயநகர்ச் சந்திப்பில். அங்கே முன்பிருந்த சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கும் சென்னை சில்க்ஸ் கடைக்கும் நடுவில் இருக்கிறது இந்த அங்காடி. வேளச்சேரி பறக்கும் இரயில் நிலையத்திலிருந்து 650 மீட்டர், சுமார் பத்து நிமிட நடை என்கிறது கூகுள் மேப்ஸ்.
வார நாட்களில் அங்காடியின் கீழ்த்தளத்தில் தேவையான வாகன நிறுத்தக இடங்கள் கிடைக்கிறது. புத்தகக் கடையையும் பி.வி.ஆர். திரையரங்கையும் தாண்டி நிறைய உணவுக் கடைகள் மால் கட்டிடத்தின் வெளிப்புறத்தில் இருக்கிறது. அதோடு சென்னை ஸ்பென்சர் அங்காடியில் இருந்தது போல, பல நினைவுப் பரிசுகள் அலங்காரப் பொருட்கள் விற்கும் கடைகளும் இருக்கிறது. இந்தப் பக்கம் போனால் சென்று பாருங்கள்.
குறிப்பு: அது என்னது, “மூர் மார்க்கெட்” என்று கேட்டால் – 1980களிலும் அதற்கு முன்னரும் சென்னைவாசிகள் அனைவரின் உணர்வு அந்த அங்காடி. சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தின் அருகில் இருந்தது இந்த அங்காடி. எந்தப் பழைய பொருள் வேண்டுமானாலும் உலகில் எங்கிருந்து வந்திருந்தாலும் என்றாலும் இங்கே கிடைக்கும். பழைய புத்தகங்களுக்கும் ரெக்கார்ட்களுக்கும் பிரபலம். 1985யில் பெரும் தீ விபத்தில் இந்த அங்காடி அழிந்து போனது. அங்கே இருந்த கடைகளில் சில இப்போது இருக்கும் அல்லிக் குளம் (Lilly Pond) அங்காடியில் தொடர்கிறது.



பொறுப்பு துறப்பு: இந்தப் பதிவில் எந்த விளம்பரமோ, நிதியுதவியோ பெறப்படவில்லை. முழுக்க நான் காசுக் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் பொருட்களை அல்லது சேவையைப் பற்றியது. இவை என் தனிப்பட்ட அனுபவம், இதன் பயனைப் பற்றி எந்தவித உத்தரவாதமும் நான் அளிக்கவில்லை. நன்றி.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.


Good to know interesting. When it was part of Grand Mall