திருமதி மற்றும் திரு பார்த்திபன், சாரதி
திருமதி மற்றும் திரு பார்த்திபன், சாரதி

பார்வையாளர்கள் முட்டாள்கள் என்று நம்பி எடுக்கப்படும் பெரிய பட்ஜெட் தமிழ்ப் படங்களைப் பார்த்துச் சலித்த எனக்கு இந்த நாடகம் வித்தியாசமான அனுபவம். எளிமையான ஒரு வரி கதை. ஆனால் அருமையான வசனங்கள், எதார்த்தமான பாத்திரங்கள், நல்ல நடிப்பு இவையெல்லாவற்றையும் சேர்த்த ஒரு தமிழ் நாடகம். பெயர் மட்டும் வாயில் நுழையாத சமஸ்கிருதப் பெயர் “கபித்வஜா”. இது பகவான் ஶ்ரீகிருஷ்ணன் பார்த்தசாரதியாக இருந்து ஓட்டிய அர்ஜுனனுடைய தேர். கதையும் ஓர் ஓட்டுநரை (சாரதி) முன்னிலைப் படுத்தியது என்பதால் இந்தப் பெயர்.

திரு பார்த்திபன், சென்னையில் ஒரு பெரிய தொழில் அதிபர். சுயமாக உழைத்து ரூபாய் முந்நூறு கோடி வருவாய் ஈட்டும் தொழிலைத் தொடங்கி நடத்திவருபவர். தொழிலில் நேர்மைக்குப் பெயர் போனவர். ஒரு முறை மட்டும் கொஞ்சமாக அவர்களது தயாரிப்பின் தரம் (மொத்த ஆளவில்) சற்று குறைந்து விடுகிறது. இருந்தும் பொதுவெளியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தரம். நிறுவனத்தைத் தற்போது நடத்தும் தலைமை அதிகாரி இதை நியாயப்படுத்துகிறார். அவர் யாரையும் ஏமாற்றவில்லை, யாருக்கும் லஞ்சம் கொடுக்கவில்லை, குற்றம் எதுவும் செய்யவில்லை. இருந்தும் இதைப் பார்த்திபனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வீட்டிற்கு வந்து மனைவியிடம் வருந்துகிறார். வளர்ந்த பிள்ளைகள் மூவரும் மூன்று திசையில் செல்கிறார்கள், யாரும் இவரின் தொழிலைப் பார்த்துக் கொள்ள முன்வரவில்லை.

தான் சொல்வதை வீட்டிலும் யாரும் கேட்பதில்லை, அலுவலகத்திலும் யாரும் கேட்பதில்லை என்ற விரக்தியில் வீட்டை விட்டு, மனைவியிடம் மட்டும் சொல்லிவிட்டு காரில் கிளம்புகிறார். காரை ஓட்டிச் செல்லப் புதிதாக ஓர் ஒட்டுநரை அழைத்துக் கொண்டு செல்கிறார். தமிழ் நாட்டில் உள்ள புகழ் பெற்ற சிவன் கோயில் அனைத்துக்கும் செல்கிறார் பார்த்திபன். காரை ஓட்டி வரும் இளைஞரின் பெயர் சாரதி. ஒழுங்காகக் காரை ஓட்ட வேண்டும், ஐயாவிடம் தேவையில்லாமல் பேசக் கூடாது என்று சாரதியிடம் சொல்லி அனுப்புகிறார் திருமதி பார்த்திபன். முதலில் பேசாமல் போகும் இருவரும், ஒவ்வொரு கோயிலாகப் போகப் போக எப்படிப் பேசுகிறார்கள் என்பதே கதை. அனுபவம் நிறைந்த பார்த்திபன் வாழ்க்கையைச் சிக்கலாகப் பார்க்கிறார். வாழ்க்கையைத் தொடங்கும் இளைஞரான சாரதியோ எளிமையாக எதார்த்தமாகப் பார்க்கிறார். எப்படி அந்த பார்த்தசாரதி திறமையான ஆர்ஜூனனுக்கு கீதையை உபதேசம் செய்து கண்களைத் திறந்தாரோ, அது போல இந்தச் சாரதி இந்தப் பார்த்திபனுக்கு செய்கிறார். ஓர் இடத்திலும் போதனைகள் இல்லை. நாம் வாழ்வில் அன்றாடம் பார்க்கும், நம் வீடுகளில் பேசும் வசனங்கள், இதுவே இந்த நாடகத்தின் பலம்.

Kapidhwaja from Dummies Drama - Ethical Business leader award for Mr Partheeban
Kapidhwaja from Dummies Drama – Ethical Business leader award for Mr Partheeban
திரு பார்த்திபன் மற்றும் குடும்பத்தினர்
திரு பார்த்திபன் மற்றும் குடும்பத்தினர்
சிவத் திருத்தலங்கள், கோயில் கோபுரம்
சிவத் திருத்தலங்கள், கோயில் கோபுரம்
சாலையில் ஓடும் கார் போன்ற திரை அமைப்பு
சாலையில் ஓடும் கார் போன்ற திரை அமைப்பு

பெற்றோராகப் பார்த்திபன் வருத்தப்பட்டுப் பேசும் இடத்தில் நான் சிறிது அழுதது உண்மை. நன்றாக எழுதப்பட்ட நாடகங்களில் இந்த அளவு உணர்வுகள் (அழுகை என்றில்லை, சிரிப்பும் தான்) நம்மை எளிதாகத் தாக்குகிறது.

சாரதி, பார்த்திபனைத் தாண்டி இன்னொரு பாத்திரம் வருகிறது. இறுதியில் கொஞ்சம் மிகைப்படுத்தல் என்றாலும் சாதாரணச் சிவப் பக்தனாக வரும் அந்தப் பாத்திரமும் நன்றாகவே வடிவமைக்கப்பட்டிருந்தது. சாரதியாக வந்த இளைஞர் அமைதியாக ஆனால் அற்புதமாகச் செய்திருந்தார். சிவப் பக்தனாக வரும் திரு ஶ்ரீதர், இயக்குநர் மற்றும் கதாநாயகனாகத் திரு ஶ்ரீவத்ஸன் இருவரும் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். மேடையில் ஒரு பேன்ஸ் (mercedes-benz) காரை எளிதாகக் கண் முன்னே கொண்டுவந்திருக்கிறார்கள், அதோடு பின்னால் இருக்கும் திரையில் சாலையில் வண்டி செல்வது போன்ற பிம்பத்தை ஒளியிட்டு நம்மை கவர்ந்துவிடுகிறார்கள் டம்மிஸ் குழுவினர். குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

வளர்ந்த பிள்ளைகள் வீட்டை விட்டுப் போக ஆசைப்படும் போது கோபப்பட்டு சண்டை போடாமல் “அசையாக அனுப்பி வைத்தால் பாசமாகத் திரும்ப வருவார்கள்” என்ற வசனம் நம் நினைவில் நின்றுவிடுகிறது. இன்னொரு உதாரணம் “As CEO you have the Right to take any decision, but is it the Right decision?”.

Sri Krishna Gana Sabha, T Nagar, Chennai
Sri Krishna Gana Sabha, T Nagar, Chennai
சென்னை தி.நகர் கிருஷ்ண கானச் சபா
சென்னை தி.நகர் கிருஷ்ண கானச் சபா
சென்னை தி.நகர் கிருஷ்ண கானச் சபா அரங்கம்
சென்னை தி.நகர் கிருஷ்ண கானச் சபா அரங்கம்

குறிப்பு: சென்னை தி.நகர் கிருஷ்ண கானச் சபாவில் நடந்த நாடகத்திற்கு வற்புறுத்தி அழைத்துச் சென்ற நண்பருக்கு நன்றி.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading