கடந்த ஐம்பது ஆண்டுகளாக சென்னையின் அடையாளங்களில் முக்கியமானதாக விளங்குவது நுங்கம்பாக்கத்தில் இருக்கும் வள்ளுவர் கோட்டம். 1970களில் கலைஞர் திரு கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்த போது அடிக்கல் நாட்டப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் அப்போதைய குடியரசுத் தலைவரால் திறந்து வைக்கப்பட்டது. ஒவ்வொரு முறை திமுக ஆட்சிக்கு வரும் பொழுதும் இதைப் புதுப்பித்துப் பொலிவாக்கி வைப்பார்கள். திருவள்ளுவரையும் திருக்குறளைப் படிப்பதைக் காட்டிலும் மக்கள் அதிகமாக அங்கே இருக்கும் கண்காட்சி அரங்கிற்கு வருவார்கள் என்பது நிதர்சனம் என்றாலும் இந்த இடம் சென்னையின் பெருமை என்பதில் சந்தேகமில்லை.
தற்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டு முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களால் ஒரு வாரம் முன்பாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிதாக வண்ணம் பூசப்பட்டுத் தொலைவில் இருந்தே ஜொலிக்கிறது வள்ளுவர் கோட்டம். ஞாயிறு என்பதால் நல்ல கூட்டம்: பிள்ளைகளுடன், பெற்றோருடன் குடும்பம் குடும்பமாகப் பலரும் வந்திருந்தார்கள். இப்படி வெளியில் வர சென்னைக்கு மத்தியில் இப்படியான இடம் இருப்பது நல்ல விசயம். வளாகங்களைப் புதுப்பிப்பது எளிது, நன்றாக நிர்வகிக்க வேண்டும், பொது மக்களும் சேதப்படுத்தாமல் இருத்தல் வேண்டும். மாலை ஐந்து மணிக்கு நான் போன நேரம் கார் நிறுத்தகம் திறக்கப்படவில்லை. சாலை ஓரமாக நிறுத்திவிட்டுச் சென்றேன். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வந்த போது, நுழைவாயில் மூன்றில் இருந்த வாகன நிறுத்தகம் திறந்திருந்தது.
இங்கே 1980களில் பள்ளியில் படித்த காலங்களில் சுற்றுலா என்று சில முறை சென்றிருக்கிறேன். பிறகு 1990களில் கண்காட்சிகளுக்குச் சென்றுள்ளேன். 2006ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் அவர்களின் ஆபிஸ் மற்றும் விண்டோஸ் வெளியீடுகள் தெரியும்படி மடிக்கணினியில் (அப்போது திறன்பேசிகள் கிடையாது) திறந்து வைத்துக் கொண்டு ஒவ்வொரு கௌரவ மண்டல இயக்குநரும் அவர்கள் நகரின் அடையாளத்தின் முன் நிற்க வேண்டும். நான் தேர்வு செய்து படம் எடுத்தது வள்ளுவர் கோட்டத்தின் தேர் முன்னர் மற்றும் சாந்தோம் தேவாலயத்தில் – படங்கள் இங்கே. அதற்குப் பிறகு ஓரிரு முறை கண்காட்சிகளுக்கு வந்திருப்பேன் என்று நினைவு.
முன்பு இருந்தது போலவே தேர், அதற்கு நடுவில் திருவள்ளுவர் உருவச் சிலை. மோட்டை மாடியின் நடுவில் திருவள்ளுவர் உருவப் படம். புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள ஆயிரம் பேர் உள்-அரங்கம் முடியிருந்தது, நல்ல விசயம், இல்லையென்றால் பொது மக்கள் நாசம் செய்துவிடுவார்கள். ஆனால், ஏனோ திருக்குறள் பொறிக்கப்பட்டிருக்கும் அறையும், ஒவ்வொரு குறளின் பொருளைச் சொல்லும் படக்கதை ஓவியங்கள் இருக்கும் அறையும் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. ஏன் என்று தெரியவில்லை. சீக்கிரம் திறக்கப்படும் என நம்புகிறேன்.
















சுற்றி வந்ததில் பசித்தது. உள்ளேயே திறக்கப்பட்டிருந்த ‘அன்னம்’ என்கிற உணவகத்தில் ரூபாய் நாற்பதிற்கு இரண்டு இட்லி சாப்பிட்டேன். சுத்தமாக இருப்பதாகத் தோன்றியது. அருகில் திருக்குறள் நூல்களையும், பரிசுப் பொருட்களையும் விற்கும் கடையான ‘குறளங்காடி’ இருந்தது, அதைப் பார்த்து இறங்கினேன். மாலை ஏழு மணிக்கு வண்ண விளக்குகளுடன் செயற்கை நீரூற்று அசைவூட்டக் காட்சி என்று அறிவித்தார்கள். மிகப் புழுக்கமாக இருந்ததால், ஆறு மணிக்குக் கிளம்பி விடு திரும்பிவிட்டேன். ஒரு சில மாதங்கள் கழித்து அந்தப் பக்கம் போகும் போது மீண்டும் போய் குறள் மணிமாடத்தைப் பார்க்க ஆசை.


அடிக்குறிப்பு: காரை எடுக்கும் போது, அடுத்திருந்த அன்னை தெரேசா பெண்கள் வளாகத்தின் வெளியில் இருந்த மதி எங்கள் கைவினைப் பொருட்கள் கடைக்குள் போய் வந்தேன்.


Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

