செயற்கை நுண்ணறிவு மாதிரிகளில் புதிய முயற்சி: Google Gemini Diffusion

சமீபத்தில் கூகுள் அவர்களின் ஐ/ஒ 2025 (I/O 2025) கருத்தரங்கத்தில் பல தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தார்கள். அவற்றில் முக்கியமான ஒரு நுட்பத்தைப் பயன்படுத்திப் பார்க்க இன்று எனக்கு அனுமதி கிடைத்தது.

அது, கூகுளின் ஜெமினி டிஃபியூஷன் (Google’s Gemini Diffusion) என்கிற சோதனை முயற்சி தளம். இப்போதிருக்கும் கூகுள் ஜெமினி போன்ற இதுவும் ஓர் இயற்றறிவு (Generative AI) மாதிரி. அதாவது நாம் கேட்கும் கேள்விகளுக்கு (பிராம்ப்ட்), தனக்குத் தெரிந்ததையும் இணையத்தில் தேடி எடுக்கப்பட்ட தகவல்களையும் வைத்து பதில் அளிக்கும்.

சாட்-ஜிபிடி, ‘கூகுள் ஜெமினி’ போன்றவை செய்வதை விட ‘ஜெமினி டிஃபியூஷன்’ பத்திலிருந்து பதினைந்து சதவிகிதம் வேகமாகப் பதில் சொல்லும் என்கிறது கூகுள். சோதனை செய்து பார்த்ததில் உண்மையிலேயே வேகமாக இருக்கிறது. இது தமிழ் கேள்விகளையும் புரிந்து கொண்டு, தமிழிலேயே பதிலும் சொல்கிறது. இதை இணைப்பிலிருக்கும் காணொலிகளில் நீங்களே பார்க்கலாம்.

சரி, வேகத்தைத் தவிர இது இன்னும் சரியான விடைகளை அளிக்கும் என்கிறார்கள் கூகுள் பொறியாளர்கள். டிஃபியூஷன் முறை ஏதோ புதியதில்லை. இந்த முறையைச் செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் படங்களை வரைய ஏற்கனவே பயன்படுத்தப்படுத்துகிறது. இப்போது அதே முறை ‘உரை’ உருவாக்கத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.

நாம் கேட்கும் கேள்விகளுக்கு வார்த்தைகளாகப் பதிலளிக்க, சாட்-ஜிபிடி பயன்படுத்தும் கணிநெறி முறைக்குப் பெயர் டிரான்ஸ்ஃபார்மர் (Transformer). இந்த முறையில் விடையளிக்க ஒவ்வொரு வார்த்தையையும் முந்தைய வார்த்தைகளின் அடிப்படையில் வரிசையாக (ஒவ்வொன்றாக) உருவாக்கப்படுகிறது (கணிக்கப்படுகிறது).

டிஃபியூஷன் முறை முழு உரையை ஒரே நேரத்தில் உருவாக்குகிறது. இது முதலில் முழு உரையைப் பரப்பப்பட்ட “தூசிகளாக” (தகவல் சிதறல்கள்) உருவாக்கிவிடும். இது விடையல்ல. பிறகு படிப்படியாக இதைச் சுத்திகரித்து (மெருக்கெற்றி) தெளிவான உரையாக (எழுத்துகளாக, வார்த்தைகளாக) மாற்றப்படுகிறது. இந்த முறையில், முன்னதாக உருவாக்கப்பட்ட உரையைத் திருத்தவும் முடியும்.

கடந்த சில ஆண்டுகளாகவே டிஃபியூஷன் மாதிரிகளைக் கொண்டு உரைகளை எழுதும் முறைகள் ஆராயப்பட்டுவருகிறது. இப்போது வந்திருக்கும் “கூகுளின் ஜெமினி டிஃபியூஷன்” தளம், இதைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியிட்டிருக்கிறது. இன்னொரு விசயம் டிஃபியூஷன் மாதிரிகள், டிரான்ஸ்ஃபார்மர் மாதிரிகளுக்கு மாற்றில்லை, இரண்டு முறையையும் நுணுக்கமாக இணைத்தே “ஜெமினி டிஃபியூஷன்” தளம் வேலை செய்கிறது. இது மாற்றம் இல்லை, இணைப்பு.

சரி, இதனால் எனக்கு என்ன பயன் என்றா கேட்கிறீர்கள்? பெரும் நிறுவனங்கள் மொழி மாதிரிகளில் தொடர்ந்து செய்யும் ஆராய்ச்சிகளை இது காட்டுகிறது. இந்த மாதிரிகள் இன்னும் வேகமாக விடையளிக்கும். இவற்றைப் பயன்படுத்த ஆகும் செலவு குறையும், அதனால் பயன்பாடு அதிகரிக்கும். இந்த மாதிரிகள் அளிக்கும் விடைகளில் இருக்கும் மதி மயக்கங்கள் (பிழைகள்) குறையும், பதில் உரையில் வரிகள் கோர்வையாக வரும். மேலும் கணினி நிரலிகளை எழுத, கணித வினாக்களுக்குப் பதிலளிக்க இந்த முறை சிறப்பாக இருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading