கணினி உலகில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் நடக்கும் ஆப்பிள் WWDC நிரலர்கள் மாநாடு ஒரு முக்கிய நிகழ்வு. வரும் ஆண்டில் நம் அன்றாடச் செல்பேசி, கணினி பயன்பாடுகள் எப்படி இருக்கும் என்பதற்கான வழிகாட்டி இந்த நிகழ்ச்சி.
இன்றைக்கு ஆப்பிள், கூகுள் இரு நிறுவனங்கள் மட்டுமே செல்பேசிகளின் தலையெழுத்தை எழுதுகிறார்கள். இதில் கூகுள் பல வசதிகளைக் கண்டுபிடித்து அறிமுகம் செய்தாலும், அதையே ஆப்பிள் சாயம் பூசி, பெயர் வைத்து வெளியிடும் போது மட்டுமே பொது வெளியில் அவை பிரபலம் ஆகிறது. அந்த வகையில் ஆப்பிள் மாநாடு நம் எல்லோர் (ஐ-போன் பயனரல்லாதவர்கள் உட்பட) வாழ்விலும் ஒரு முக்கிய நிகழ்வு.
ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் அந்த ஆண்டு அறிமுகம் செய்யும் வசதிகளில் சில நம்மைக் கவரும். ஆனால் இந்த ஆண்டு அப்படி ஒன்று கூடயில்லை. இது பெரிய ஏமாற்றம். சென்ற ஆண்டு அவர்கள் அறிமுகம் செய்த செயற்கை நுண்ணறிவு வசதிகளே இன்னும் முழுமையாக வராத போது, புதிதாக எதிர்பார்க்க முடியாது.
இந்த ஆண்டு WWDC 2025இல்: இடைமுகங்களுக்கு ‘திரவக் கண்ணாடி’ சாயம் அடித்து வெளியிடுகிறார்கள்; இயங்குதளங்களின் பதிப்பு எண்களை, ஆண்டாக மாற்றுகிறார்கள், அவ்வளவே. அதோடு போன் செயலியில் சில மாறுதல்களாம், நாம் செய்த/வந்த கடைசி 100 அழைப்புகள் மட்டுமே இன்னும் போன் செயலியில் இருக்கும் என்று நினைக்கிறேன் – அப்படி இருக்கையில் எதற்கு இந்த புதுச் சாயம்?. இதெல்லாம் நிறுவனத்தின் துறைகளைப் படைப்பாளர்களையும் பொறியாளர்களையும் தவிர்த்துவிட்டு வணிக மேலாண்மை (MBA) படித்த மேலாளர்கள் மட்டுமே நடத்துகிறார்கள் என்று எண்ண வைக்கிறது. இந்த வருத்தமான கதையைப் பல ஆண்டுகள் முன்பே நாம் மைக்ரோசாப்டிலும், ஐ.பி.எம்.மிலும் பார்த்திருக்கிறோம். இதிலிருந்து தப்பித்து வெளிவந்து இன்று மேகக் கணிமையைக் கலக்கிக் கொண்டுள்ள மைக்ரோசாப்ட் ஒரு விதிவிலக்கு – அதிசயங்கள் அபூர்வம்.
புத்தாக்கம் செய்யாத எந்த நிறுவனமும் நிலைத்திருக்காது. இதையே The Economist தங்களின் சமீபத்திய இதழில் “நோக்கியாவாக மாறுகிறதா ஆப்பிள்?” என்று எச்சரித்தது உண்மை நிலவரம் என்றுப்படுகிறது. உலகின் முதல் ஐந்து மதிப்புமிக்க நிறுவனங்களில் பட்டியலில் இருக்கும் ஆப்பிளால் வெறும் சாயத்தை மட்டுமே அடிக்க முடியும் என்பது தொழில்நுட்ப ஒட்டு மொத்தத் துறைக்குமே வெட்கம். ‘ஸ்டீவ் ஜாப்ஸ்’ தனது கல்லறையில் புரண்டு கொண்டிருப்பார் என்பது நிச்சயம்.
அடிக்குறிப்பு: நேற்று அறிமுகம் செய்ததில் என்னைக் கவர்ந்தது macOS Shortcuts செயலியில் வரும் வசதிகளும், ஐ-பேட்டில் வரப் போகும் “Local Capture” (Podcast செய்பவர்களுக்கு உதவும்) வசதியும். ஆனால் Shortcuts செயலியைப் பயன்படுத்த என்னிடம் ஆப்பிள் கணினி கிடையாது, நான் ஒரு விண்டோஸ் பயனர்/விசிறி!. அதைத் தவிர என்னிடம் ஐ-போன் மற்றும் ஐ-பேட் இருக்கிறது, அந்த வகையில் WWDC அறிவிப்புகள் எனக்கும் முக்கியம். கணினி உலகில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் நடக்கும் ஆப்பிள் WWDC நிரலர்கள் மாநாடு ஒரு முக்கிய நிகழ்வு. வரும் ஆண்டில் நம் அன்றாடச் செல்பேசி, கணினி பயன்பாடுகள் எப்படி இருக்கும் என்பதற்கான வழிகாட்டி இந்த நிகழ்ச்சி.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

