எனது யாழ்ப்பாணப் பயணக் குறிப்புகள்: பாகம் 2, உணவகங்கள்.
யாழ்ப்பாணப் பயணக் குறிப்புகள் முதல் பாகம் இங்கே. யாழ் சென்றவுடன் எங்கள் ஓட்டுநர் சொன்னதும், பல யு-ட்யூப் வீடியோக்களிலும் கட்டாயம் செல்ல வேண்டும் என்று சொன்ன இடம் ரீயோ ஐஸ்-கிரிம் கடை. அங்கே போன அனுபவத்தைக் கட்டாயம் கீழே படியுங்கள்.
நாங்கள் இருந்த மூன்று நாட்களில் நான் கவனித்தது, யாழ் மக்கள் தேவைக்காகவே வெளியில் சாப்பிடுகிறார்கள். சுவைக்காக பொழுதுபோக்குக்காக உணவகங்கள் செல்வதில்லை என்று தோன்றியது.
விமான நிலையத்திலிருந்து முதலாவதாக நாங்கள் சென்றது, காங்கேசன்துறை கடற்கரை. மாலை வேளை என்பதால் வெயில் அதிகமாக இருந்தது, சில்லென்று ஏதாவது பருக விரும்பி அங்கே இருந்த கலங்கரை உணவகத்திற்குச் சென்றோம். சிறிய கடை, இலங்கை பாதுகாப்புத் துறை நடத்துகிறது என்று நினைக்கிறேன். கடையில் வேலை செய்தவர்களுக்குத் தமிழ் புரியவில்லை – அல்லது எனது ஆங்கிலம் கலந்த தமிழ்நாட்டு ‘தமிழ்’ புரியவில்லை. எப்படியோ பேசி, கோக் அல்லது பேப்ஸி கேட்கப் போய் நேக்டோ (NECTO) என்கிற திராட்சைப் பானத்தை கொடுத்தார்கள், வாங்கிப் பருகினோம். விலை இலங்கை ரூபாய் 170 என்று நினைவு. இந்த நேக்டோ வெறும் சர்க்கரைப் பாகு.
அதோடு ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கினோம். ஒன்றரை லிட்டர் தண்ணீர் பாட்டில் இலங்கை ரூபாய் 160 (சுமாராக இந்திய ரூபாய் 46). யாழ் முழுவதுமே ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீர் இல்லை, ஒன்றரை லிட்டர் தான், தூக்கிச் செல்லச் சிரமமாகவே இருந்தது.

சிறிய நேரம் கடற்கரையைச் சுற்றிப் பார்த்து, அடுத்து ஒரு கோயிலுக்குப் போன பிறகு நாங்கள் தங்கிய விடுதியான ஃபாக்ஸ்-ஜாவ்னாவிற்கு சென்றோம். காபி குடித்து, கொஞ்ச நேர ஒய்வேடுத்தோம். மாலை உணவிற்கு அதே யாழ்-காங்கேசன்துறை சாலையில், சிறிது தூரத்தில் இருந்த சரவண-பவன் சைவ உணவகத்திற்குச் சென்றோம். இது ஓர் எளிமையான கடை, சென்னை சரவண-பவன் குழுவிற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நுழைந்தவுடனேயே டங்கு-டங்கு என்று சப்தத்தோடு தோசைக் கல்லில் அவர்கள் போட்டு அடித்துக் கொண்டிருந்த பரோட்டா வாசனை தூக்க, முதலில் ஒரு பன்னீர் கொத்து பரோட்டா (இலங்கை ரூபாய் 600) வாங்கினோம். நன்றாகப் பிய்த்துப் போட்ட பரோட்டா துண்டுகள், அதற்கு மேல் சுடச் சுட கொண்டைக்கடலை (சென்னா) சால்னா (மசாலா சாம்பார்) கொடுத்தார்கள், சுவையாக இருந்தது. அடுத்தது ஒரு வெங்காய ஊத்தப்பம் (இலங்கை ரூபாய் 360). நாம் சாப்பிட்ட வாழை இலையை நாமே குப்பைத் தொட்டியில் போட வேண்டும், இது எங்களுக்கு தெரியாததால் உணவு பரிமாறியவர் (சர்வர்) சொன்னவுடன் அப்படியே செய்துவிட்டோம். யாழ் நகரில் பல இடங்களிலும் இப்படி என்று பின்னர் கேட்டுத் தெரிந்து கொண்டோம்.

சாப்பிட்டு முடித்து தண்ணீர் பாட்டில் வாங்க எதிரில் இருந்த மளிகைக் கடைக்குப் போனேன். என் பேச்சைக் கேட்டவுடன் ‘இந்தியாவா?’ என்றார் கடைக்காரர், ஆமாம் ‘சென்னை’ என்றேன். ‘வியாபாரமா, விடுமுறையா?’ என்றார், ‘விடுமுறை’ என்றேன். ‘வரும்போது துணிகள் வாங்கிவந்து இங்கே விற்றிருக்கலாமே, இங்கே அவை விலை அதிகம்’ என்றார். அது ‘என் தொழில் இல்லையே’ என்றேன். புரியவில்லை அவருக்கு. ‘ரஜினி தனது படத்தில் சொல்லியிருக்கிறாரே, தெரியாத தொழிலைச் செய்து உருப்பட்டவர் இல்லை’ என்றேன். இப்பொழுது அவருக்குச் சுலபமாக விளங்கியது.


அடுத்த நாள் காலை உணவு எங்கள் விடுதியில் சாப்பிட்டோம். இடியாப்பத்தோடு தொட்டுக் கொள்ள இலங்கையின் பாரம்பரிய உணவான ‘போல் சம்போல்’ (தேங்காய் சட்டினி) வைத்திருந்தார்கள். போல் சம்போல் அதிகக் காரமாக இருந்தது.
அடுத்து நயினா தீவுக்குப் போய் திரும்பியவுடன், மதிய உணவிற்கு நல்லூர் பவன் உயர்தரச் சைவ உணவகத்திற்கு வந்தோம். இது கோயில் தெருவில், நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு அருகில் இருக்கிறது. மதிய வேளை என்றாலும் ஓரிருவர் மட்டுமே இருந்தார்கள். ரைஸ் அண்டு கறி (Rice and Curry) சாப்பாடு மட்டும் இருக்கிறது என்றார்கள். கேரளாவில் புழங்கும் குண்டு அரிசி மற்றும் பூசனிக்காய் , வாழைக்காய் வறுவல், கூட்டு, புளி சாம்பார், பூண்டு ரசம், அப்பளம், மோர் மிளகாய் கொடுத்தார்கள். சாதம் மற்றும் பொரியல் எல்லாமே ஆரிப் போய், சூடாகவே இல்லை, இருந்தும் பசிக்கு ருசித் தெரியாது என்பதால் சாப்பிட்டு முடித்தோம். தயிர் கிடைக்குமா என்றால், சிறிய டப்பா சர்க்கரை தயிர் கொடுத்தார்கள்.



அரை குறையாகச் சாப்பிட்டதை நிறைவு செய்ய யாழ் நகரில் கட்டாயம் செல்ல வேண்டிய ரீயோ ஐஸ்-கிரிம் கடைக்குச் சென்றோம். இதுவும் அருகிலேயே இருக்கிறது. மதிய வேளை என்றாலும் ஓரளவு கூட்டமிருந்தது. குடும்பம் குடும்பமாகவும், ஜோடி ஜோடியாகவும் வந்திருந்தார்கள் வாடிக்கையாளர்கள். நான் ஒரு Rio Special (LKR 400) , என் நண்பன் Ice Cream Sizzler (LKR 700) சாப்பிட்டோம். இரண்டுமே சுவையாகவே இருந்தது. மற்ற ஊர்களில் கிடைப்பது போன்ற அதே பனிக்கூழ் தான், இருந்தாலும் பல ஆண்டுகளாக இருப்பதாலும் தரமாக இருப்பதாலும் இந்த உணவகம் பிரபலமாக இருக்கிறது.



அடுத்ததாக யாழ் கோட்டை மற்றும் மந்திரி மனைகளைப் பார்த்துவிட்டு விடுதிக்குத் திரும்பினோம். இரவு உணவிற்கு யாழ் நகர நண்பர் ஒருவர் எங்களை அக்’ஷதை சைவ விருந்து உணவகத்திற்கு அழைத்து போனார். இது ஸ்டான்லி சாலையில் இருக்கிறது. பெரிய பாரம்பரிய உணவகம் போலத் தோன்றியது. அரிசி, தோசை, சப்பாத்தி உணவு வகைகளும் நூடுல்ஸ் போன்ற சில சீன உணவு வகைகளும் கிடைக்கும் என்று நண்பர் சொன்னார். நாங்கள் நூடுல்ஸ் வாங்கி பகிர்ந்து கொண்டோம், பிறகு தோசை மற்றும் தயிர்ச் சாதம் சாப்பிட்டோம். எல்லாமே நன்றாக இருந்தது. பழச்சாறு கேட்டோம், இயந்திரம் பழுதாகிவிட்டதால் இல்லை என்றார்கள்.


அடுத்த நாள் காலை உணவை நாங்கள் தங்கியிருந்த விடுதியிலேயே சாப்பிட்டு விட்டு யாழ் நகரை விட்டுக் கிளம்பினோம்.
யாழ் நகரில் தயவு செய்து காபி குடிக்க வேண்டாம். தேநீர் பலவாயில்லை, ஆனால் அதிலும் சர்க்கரையை அள்ளிக் கொட்டிவிடுகிறார்கள். யாருக்குமே காபி வடிசாறு போடத் தெரியவில்லை. பல இடங்களிலும் நெஸ்கபே உடனடி தூள், சுவையே இல்லை. என்னைச் சமையல்கட்டுக்குள் விட்டிருந்தால் நானே காபி பொடிப் போட்டு நல்ல மெட்ராஸ் பில்டர் காபி கலந்து கொடுத்திருப்பேன்.

அடிக் குறிப்பு: யாழ் நகரில் கடல் உணவுகள் நிறையக் கிடைக்கும் என்றாலும், நான் சுத்த-சைவம் என்பதால் அவற்றை மட்டுமே இங்கே பார்த்தோம்.
என் யாழ்ப்பாணப் பதிவுகள்
- எனது யாழ்ப்பாணப் பயணக் குறிப்புகள்: பாகம் 1, விமான நிலையம்.
- எனது யாழ்ப்பாணப் பயணக் குறிப்புகள்: பாகம் 3, யாழ்ப்பாணக் கோட்டை.
- எனது யாழ்ப்பாணப் பயணக் குறிப்புகள்: பாகம் 4, யாழ்ப்பாணக் கோயில்கள்.
- எனது யாழ்ப்பாணப் பயணக் குறிப்புகள்: பாகம் 5, யாழ்ப்பாண சுற்றுலாத் தளங்கள்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.
