என் மேஜைக் கணினிக்கு நான் வாங்கிய ஒலிபெருக்கி

எனக்குக் காதினுள் மாட்டிக் கொள்ளும் இயர்போன்களையோ (செவிகேளி) அல்லது காதுக்கு மேல் மாட்டும் ஹெட்செட்களையோ (தலைகேளி) அதிக நேரம் பயன்படுத்தப் பிடிக்காது. தினம் நடைப்பயிற்சியின் போதும் நீண்ட தொலைப்பேசி அழைப்புகளுக்கு மட்டும் இவற்றைப் பயன்படுத்துவேன். எந்தக் காலத்திலும் நான் திறந்தமுறை அலுவலக அமைப்பில் வேலை செய்தது கிடையாது. எனக்கென்று எப்போதும் ஓர் அறை தனியாக இருந்து பழகிவிட்டது, அது வீட்டிலிருந்து வேலை செய்வதாகட்டும், அலுவலகங்களில் வேலையாகட்டும் எப்போதுமே ஒலிபெருக்கியில் தான் இசையைக் கேட்டுக் கொண்டு வேலை செய்வேன். அதே போல காணொலி அழைப்புகளுக்கும் மேஜை ஒலிவாங்கியைத் தான் பயன்படுத்துவேன்.

முப்பது ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாக நான் வாங்கிய மேஜைக் கணினியில் இணைக்க அப்பொழுதெல்லாம் நேரடி பொருந்துக்குழிகள் கிடையாது, தனியாக ஒரு கிரேயிடிவ் சவுண்டு ப்ளாஸ்டர் (Creative Soundblaster) கார்டு மற்றும் அவர்களின் ஒலிபெருக்கிகளையும் வாங்கி இணைத்துப் பயன்படுத்தி வந்தேன். அடுத்த பத்தாண்டுகள் அல்டக் லன்ஸிங்க் (Altec Lansing BXR1221) நிறுவனத்தின் ஒலிபெருக்கிகளை உபயோகப்படுத்தினேன் – இவை இரண்டு கையடக்கக் குழாய் வடிவ ஒலிபெருக்கிகள் மற்றும் தரையில் வைக்க வேண்டிய பெரிய டப்பா வடிவ ஒலிபெருக்கி கொண்டவை. அதற்கு அடுத்த பத்தாண்டுகள் ஹார்மேன் கார்டன் ஒனிக்ஸ் ஸ்டுடியோ 4 ஸ்பீக்கார் – இது ஒரே ஓர் உருப்படி, இருக்கும் நான்கு ஒலிபெருக்கிகளும் இந்த ஒரு பெட்டியிலேயே இருக்கும் – தனியாகக் கணினியையும் இதையும் இணைக்கக் கம்பிவடம் தேவையில்லை, புளூடூத் தொடர்பினால் இணைக்கக் கூடியது – மின் இணைப்பு கொடுத்தால் போதும். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஒலிபெருக்கியில் பிரச்சனை அதனால் புதிதாக ஒன்றை வாங்கத் தேடினேன்.

அதிக விலை கொடுத்து வாங்க விரும்பவில்லை. அதனால் வீட்டுத் திரையரங்கு வகை விலையுயர்ந்த ஒலிபெருக்கிகளைத் தவிர்த்தேன். இவற்றைக் கணினி மேஜையில் வைப்பதும் கடினம். சிறியதாக ஆனால் இசைக்குப் பெயர் பெற்ற நிறுவனத்தின் தயாரிப்பாகத் தேடினேன். அதோடு கம்பியில்லா தொடர்போடு கம்பிவடத்தைக் கொண்டும் இணைக்கும் வழியிருக்கும் வகைகளைத் தேடினேன்.

Edifier D12 Integrated Stereo Speakers
Edifier D12 Integrated Stereo Speakers

அப்படித் தேடி நான் கண்டுபிடித்தது, எடிஃபையர் டி12 (Edifier D12 integrated speaker). இதுவும் பிரிப்பிசை (ஸ்டீரியோ) கொண்டது, இதனுள் இரண்டு அதிரொலிபெருக்கிகளும் (ஊஃபர்), இரண்டு மட்டக்குரல் ஒலிபெருக்கிகளும் இருக்கிறது, சுமார் 20+20 வாட்கள் திறன் கொண்டவை இதில் இருக்கும் ஸ்பீக்கார்கள். இதில் புளூடூத் 5.0 முறை தொடர்பு இருக்கிறது, இருந்தாலும் தடங்கல் இல்லா ஒலிக்காக நான் இதைக் கணினியோடு கம்பிவடத்தைக் கொண்டு இணைத்திருக்கிறேன். அமேசான் இந்தியாவிலிருந்து நான் வாங்கிய விலை ரூபாய் 10,500. சுமார் ஓர் அடி அளவு அகலம் இருப்பதால் மேஜையில் இது எடுக்கும் இடம் குறைவு, இதை இயக்க தொலையியக்கியும் வருகிறது – மேஜை கணினி பயன்பாடு என்பதால் எனக்கு தொலையியக்கியால் பயனில்லை. இந்த எடிஃபையர் ஒலிபெருக்கியை நான் வாங்கி சில மாதங்கள் ஆகிவிட்டது. எடிஃபையர் டி12, மேஜை கணினியோடு இணைத்து இசை கேட்க, அழைப்புகளைக் கேட்க, யூடியூப் காணொலிகளைப் பார்க்க என்று எனது எல்லாத் தேவைகளுக்கும் நன்றாக இருக்கிறது.

Edifier D12 Integrated Stereo Speakers with the front grill removed
Edifier D12 Integrated Stereo Speakers with the front grill removed
Edifier D12 Integrated Stereo Speakers – Remote, Controls and Ports
Edifier D12 Integrated Stereo Speakers – Remote, Controls and Ports

அதிகமான ஒலி சக்தி வேண்டுவோருக்கு இது சரியான தேர்வாக இருக்காது, அதற்கு எடிஃபையர்யின் புத்தக நிலைப்பெட்டி வகை ஒலிபெருக்கிகள் (Edifier R1280DBs Bookshelf Speakers) பத்தொன்பதாயிரம் ரூபாயிலிருந்து கிடைக்கிறது.

நீங்கள் உங்களின் கணினியில் எப்படி இசையைக் கேட்கிறீர்கள், கீழே கருத்தில் பகிரவும்.

பொறுப்பு துறப்பு: இந்தப் பதிவில் எந்த விளம்பரமோ, நிதியுதவியோ பெறப்படவில்லை. முழுக்க நான் காசுக் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் பொருட்களை அல்லது சேவையைப் பற்றியது. இவை என் தனிப்பட்ட அனுபவம், இதன் பயனைப் பற்றி எந்தவித உத்தரவாதமும் நான் அளிக்கவில்லை. நன்றி.


Discover more from Mangoidiots.com

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading