Delicious

என் சிறு வயதில் நான் திரும்பத் திரும்பப் பார்த்த படம் ரஜினியின் அபார நடிப்பில் வெளிவந்த பொழுதுபோக்கு (மசாலா) படங்களில் தமிழ் ரசிகர்களால் என்றுமே மறக்கமுடியாத மூன்று முகம் (1982). படம் வெளிவந்து நாற்பத்திரண்டு ஆண்டுகள் ஆனாலும் இன்றும் என் நினைவில் அந்தப் படத்தில் வந்த முக்கிய கத்தாபாத்திரங்களையும், அவர்களின் பெயர்களையும், வசனங்களையும், காட்சிகளையும் சொல்ல முடியும். மேங்கோ-இடியட்ஸ் தளம் இந்தப் படத்திற்கு அதன் உயர்ந்த ‘சுவையானது’ என்கிற மதிப்பீட்டை மகிழ்ச்சியாகக் கொடுக்கிறது.

கணினித் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்றைக்கு ஒரு கதாநாயகன் பல்வேறு பாத்திரங்களைத் திரையில் செய்வது சுலபம், ஆனால் அது எதுவுமே இல்லாத காலத்தில், ரஜினி இதில் வழங்கியுள்ள மூன்று பாத்திரங்களும் தனித்துவமாக வந்திருக்கும். அது அலெக்ஸ்-பாண்டியன் ஆகட்டும், ஜான் ஆகட்டும், அருண் ஆகட்டும் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான நடை-உடை-பாவனை மூலமாகக் கலக்கியிருப்பார் ரஜினி. இயக்குநர் ஏ.ஜகன்நாதன், அவர் பங்கிற்குக் கதையில் இருவரைச் சில இடங்களிலேயே திரையில் ஒன்றாகக் கொண்டு வந்திருப்பார், ஆனால் மூன்று பேரும் நம் நினைவில் படம் முழுக்க இருக்கும்படி செய்திருப்பார் – படம் தொடங்கியதிலிருந்து இறுதிவரை விறுவிறுப்புக்குக் குறைவே இருக்காது. கப்பலில் எடுக்கப்பட்டிருந்த காட்சிகள் அந்தக் காலத்தில் ஒரு புதுமை.

தமிழ் சினிமாவில் இன்றும் கூட கடமை தவறாத காவல் அதிகாரி பாத்திரம் என்றால் யாருமே அலெக்ஸ்-பாண்டியன் பாத்திரத்தின் பாதிப்பு இல்லாமல் படைக்கமுடியாது. இதை ரஜினியின் சமீபத்திய ஜெய்லர் (2023) படத்தில் கூட பார்க்கலாம். அதே போல, வேலையில் இருக்கும் போது கடுமையாக இருப்பவர், வீட்டில் மனைவியிடம் எப்படி மென்னையாக இருப்பார், அன்பாகக் காதல் கொள்வார் என்பதற்கு இன்றும் தங்கத்தரம் “அலெக்ஸ் பாண்டியன்” மற்றும் “ஷீலா” பாத்திரங்கள். ஷீலாவாக ராஜ்யலக்ஷ்மியும் பார்வையாளர்களைக் கவர்ந்திருப்பார். சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்த சேதுபதி (2016) படத்தில் கூட இந்த ஜோடியின் சாயலைப் பார்க்கலாம். வில்லன் பாத்திரம், அதுவும் உள்ளூர் ரவுடி, சாராய அதிபர் என்றால் அதற்கு இன்றும் உதாரணம் ஏகாம்பரம் பாத்திரம், அந்தக் கொடூரமானவனைத் திரையில் ரத்தமும் சதையுமாகக் கொண்டுவந்து நிறுத்தியிருப்பார் மறைந்த நடிகர் செந்தாமரை. அவர் மீசையை அலட்சியமாகத் தடவும் முறையைப் பார்த்துக் கவராத மீசை அரும்பிய பதின்ம வயதினர்களே இல்லை எனலாம். அலெக்ஸ்ஸும் ஏகாம்பரமும் பேசிக் கொள்ளும் வசனங்கள் – “தீப்பெட்டிக்கு இரண்டு பக்கம் உரசினா தீப்பிடிக்கும், ஆனா இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்தப் பக்கம் உரசினாலும் தீப்பிடிக்கும்”, “வயத்திலிருக்கும் அதே குழந்தைக்கிட்ட அலெக்ஸ் பாண்டியன் பெயரைச் சொன்ன அது தன் அம்மா வாயையும் சேர்த்து மூடும்”. அலக்ஸ்ஸின் வட்ட வடிவக் கண்ணாடி, அவர் நடக்கும் தோரணை, சிகரெட்டைத் தூக்கிப் போடுவதாகட்டும் எல்லாமே சிறப்பு.

Moondru Mugam (1982), Tamil Movie starring Rajinikanth
Moondru Mugam (1982), Tamil Movie starring Rajinikanth

அருண் பாத்திரத்தின் காதலியாக 80களின் இளைஞிகளைக் கண்முன் கொண்டுவந்திருப்பார் ரேகா என்கிற பாத்திரத்தில் ராதிகா. இருவரும் மிக யதார்த்தமாக, ரசித்துச் செய்திருப்பார்கள். சாமியாராக இருக்கும் இளைஞர் அருணை, மாற்ற ரேகா செய்யும் பல முயற்சிகள் சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் கதையோடு ஒட்டிப் போனதால் ரசிக்கும்படி, நகைச்சுவையாக இருக்கும். இதே மாதிரியான ஒரு கதைக்கரு இந்தாண்டு வந்த ஜெனிபர் லாரன்ஸ் நடிப்பில் வந்த “நோ ஹார்டு ஃபீலிங்க்ஸ்” ஆங்கிலப்படத்தில் பார்த்தேன். சில்க் ஸ்மிதாவும், ஆஷாவாக நன்றாகச் செய்திருப்பார்.

விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த மகனைக் காவி உடையில் பார்த்து அதிர்ந்த தேங்காய் ஸ்ரீநிவாசன் அவர்களின் முகபாவம், அவரால் மட்டுமே அந்தளவு சிறப்பாக அதைச் செய்யமுடியும். அடுத்த சில நிமிடங்களில் வரும் ரஜினி-ராதிகா குளியல் அறை காட்சியும் நினைவுக்கு வருகிறதா என்றெல்லாம் பொதுச் சபையில் கேட்கக் கூடாது. அதற்குப் பின்னர் வரும் கடற்கரையில் ஆடும் “தேவாமிர்தம் ஜீவாமிர்தம்” பாடல் தேவையில்லாத ஆணி, அந்தக் காலத்துச் சினிமாவின் கட்டாயம் அது. நீதிமன்றக் காட்சியில் ஏமாற்ற எப்படி விரல் ரேகையை ரப்பர் உறைக் கொண்டு செய்தான் என்று ஜான் காட்டும் காட்சிகள் அந்தக் காலங்களில் எனக்குப் பிரமிப்பாக இருந்தது.

படத்தில் வரும் துணை நடிகர்களும், கமலா காமேஷ், சங்கிலி முருகன், டெல்லி கணேஷ் என எல்லோருமே அவர்களின் கதாபாத்திரங்களை உணர்ந்து நன்றாகச் செய்திருப்பார்கள். எம்.ஜி.ஆரின் வாழ்த்தோடு சத்யா ஸ்டுடியோஸின் படமான இதில் இசை சங்கர்-கணேஷ், பின்னணி இசையை இருவரும் அடித்து தூள் கிளப்பியிருப்பார்கள்.

மூன்று முகம் (1982) - தேங்காய் ஸ்ரீநிவாசன்
மூன்று முகம் (1982) – தேங்காய் ஸ்ரீநிவாசன்

குறிப்பு: மூன்று முகம் வெளிவந்தது 1982ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி, இன்றைக்கு நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னால்.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

One thought on “மூன்று முகம் (1982): என்றும் நினைவில்”

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading