எல்.கே.ஜி.யில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை நான் படித்தது, சென்னை தி.நகரில் இருக்கும் ஷ்ரைன் வேளாங்கன்னி சீனியர் செகண்டரி பள்ளியில். படிப்பு முடித்து முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்த மாதம் பள்ளியின் அறுபதாம் ஆண்டு விழாக் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி சமூக வலைத்தளங்களுக்காக ஒரு குறும்படம் எடுக்கிறார்கள். அதில், முன்னால் மாணவன் என்கிற முறையில் இரண்டு நிமிடம் பேச என்னை அழைத்திருந்தார், பள்ளியின் தற்போதைய முதல்வர் திருமதி மானஸா பிள்ளை, இவர் பொறியியல் கல்லூரியில் என் வகுப்பில் படித்தவர், என் நண்பர் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கும் தொடர்பு.
நான் போனவுடன் பள்ளியைச் சுற்றிப் பார்த்தேன். எனது கற்பனையும் சரி, நடந்த விசயங்களைப் பற்றிய நினைவும் சரி ஓரளவுக்குத் தான் நினைவில் இருக்கும், மறந்துவிடுவேன். அப்படி இருந்தாலும், பள்ளியின் வெவ்வேறு இடங்களுக்குப் போகப் போக அந்தப் பள்ளிப் பருவ உணர்வுகள் எப்படியோ என்னைத் தாக்கிச் சென்றது போல உணர்ந்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் இன்றைக்கு மேடைகளில் ஆங்கிலத்திலும், தமிழிலும் பயமின்றிப் புரியுமளவு பேசுகிறேன், எழுதுகிறேன், மற்றும் நிர்வாகத் திறன்களில் ஓரளவு வளர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு ஷ்ரைன் வேளாங்கன்னி ஒரு முக்கிய காரணம். இதைப் பற்றி ஒரு கட்டுரையைப் பள்ளியின் வைர விழா மலரில் எழுதியிருக்கிறேன் – வெளிவந்தவுடன் பகிர்கிறேன். என்னை செதுக்கிய சுழலை வழங்கிய பள்ளியில் எனக்கு கற்றுக் கொடுத்த எல்லா ஆசிரியர்களுக்கும், பள்ளியின் நிறுவனர் மறைந்த திருமதி மாலதி பனிக்கர் மற்றும் மறைந்த திரு பனிக்கர், அவர்களின் மகளான தற்போதைய தாளாளர் திருமதி பகுலா பிள்ளை அவர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
பிறகு காபி குடித்துவிட்டு, வந்த வேலையான ஒளிப்பதிவை முடித்தேன். என் பேச்சைக் கேட்டு மகிழ்ந்த ஒளிப்பதிவாளர் “சார், அப்படியே கொஞ்சம் நேரம் பள்ளியின் சில துறைகளை வெளியில் பழைய நினைவுகளில் மூழ்கியவாறே நீங்கள் பார்த்துக் கொண்டு நடந்து போங்கள், நான் பதிவு செய்து கொண்டு, ஒரு நல்ல இசையோடு வெளியிடுகிறேன் என்றார். என்னை வைத்துக் கிண்டல் செய்யப் போகிறாரா இல்லை ஓர் ஆட்டோகிராப் கதாநாயகன் அளவுக்கு என்னைக் காட்டப் போகிறாரா என்று பதிவு வந்தவுடன் தெரிந்துவிடும்.
என் பள்ளி நாட்களின் நினைவில் மூழ்கிய படியே எல்லோருக்கும் நன்றி சொல்லி விடை பெற்றேன்.
குறிப்பு: படத்தில் நடுவில் பார்ப்பது எங்கள் பள்ளியில் இருக்கும் அன்னை வேளாங்கன்னிக்கான ஆலயம். நாங்கள் ஓரளவு படித்து பரீட்சைகளை எழுதினோம் என்றாலும், ஒவ்வொரு தேர்வுக்கு முன் வரும் பயத்தைப் போக்கியது அன்னை தான் – அந்த வயதில் அன்னையை வேண்டிக் கொண்டு தேர்வு எழுதப் போனால் தோற்க மாட்டோம் என்கிற நம்பிக்கை தான். பள்ளியில் ‘ஹைல் மேரி’ பாடலும் பாடப்படும், கண்ணன் பாடல்களும் உண்டு, தேவியைப் புகழ்ந்து பாடிய பாடல்களும் உண்டு – இன்றைக்கும் நினைவில் எல்லாமே இருக்கிறது.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

