நம் வீட்டில் இருக்கும் நபர்களைவிட நாம் வைத்திருக்கும் மின்சாரச் சாதனங்கள் அதிகம். அதைப் போல நம்மிடம் இருக்கும் மின்னணு சாதனங்களைவிட ஒவ்வொன்றோடு வரும் ரிமோட் கண்ட்ரோல்கள் அதிகம். இப்பொழுதெல்லாம் பல சாதனங்களை அதன் ரிமோட் இல்லாமல் இயக்கவே முடியாது. சாதனத்தைவிட ரிமோட் முக்கியம். ஆனால் அப்படியான ரிமோட்டை நிறுவனங்கள் வேண்டும் என்றே நொய்தானாக வடிவமைக்கிறார்கள். வாங்கி ஒரு மாதத்தில் சரியாக வேலை செய்யாது, புதிய பேட்டரி போட்டாலும், தினம் ஒரு தட்டு தட்ட வேண்டும் – என் அப்பா ரிமோட் வேலை செய்யவில்லை என்றால் கோபத்தில் தன் வழுக்கைத் தலையில் பட்டாரென்று ரிமோட்டை அடிப்பார், உடனே வேலை செய்யும், பார்க்கும் நமக்கு வலிக்கும், ஆனால் அவர் கவலைப்பட மாட்டார். நிறுவனத்திடம் ரிமோட் ஏன் வேலை செய்யவில்லை என்று வாராண்டியைக் காட்டிக் கேட்டால் ரிமோட் உத்தரவாதத்தில் வராது என்று பொறுப்பைத் துறப்பார்கள், இல்லை நீங்கள் கீழே போட்டுவிட்டீர்கள் என்று சொல்வார்கள், ஒவ்வொரு ரிமோட்டுக்கும் 24×7 மணி நேரக் கண்காணிப்பு பதிவு இருந்தாலும் நம்மால் நிரூபிக்க முடியாது. தொலைக்காட்சியைத் தயாரித்த நிறுவனத்திடமே புதிதாக ரிமோட்டு கேட்டால், சரக்கு இருப்பில்லை என்பார்கள் அல்லது தொலைக்காட்சியின் விலையில் பாதி சொல்வார்கள் – வேறு வழி இல்லாமல் உள்ளூர் (அதாவது சீனாவிலிருந்து வரும் மலிவான) வகை ரிமோட்டை வாங்கி பயன்படுத்த வேண்டும் – இது எப்படி என்றால், என்ன தான் ஒரு கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும் டி.நகர் உஸ்மான் சாலையில் மணிக்கு இரண்டு கிலோ மீட்டர் வேகத்தில் போவது போன்ற அனுபவத்தைத் தான் இத்தகைய மூன்றாம் நபர் ரிமோட்டுகள் கொடுக்கும். இதனால் கைக் குழந்தையைப் போல இந்த ரிமோட்களைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது நம் பொறுப்பு, நாம் விழுந்தாலும் ரிமோட் விழாமல் காக்க வேண்டும். அதோடு மழைக்காலத்தில் நாம் மாட்டிக் கொள்ளும் மழைக் கோட் போல நம்மிடம் இருக்கும் ரிமோட்களுக்கு உறை வாங்கிப் போடுவது நலம். அமேசான் தளத்தில் இதற்காகவே ஒவ்வொரு நிறுவனத்தின் ஒவ்வொரு மாதிரிக்கும் ஏற்ற வகையில் சிலிகோன் உறைகள் கிடைக்கிறது. போன வாரம் ஒரு மணி நேரம் செலவழித்து என்னிடம் இருந்த மூன்று (சோனி டிவி, ஜீயோ செட்-டாப் பாக்ஸ், அமேசான் ஃபயர்டிவி ஸ்டிக்) சாதனங்களுக்குச் சரியான உறைகளை வாங்கினேன் – சோனி ஒலிபெருக்கியின் ரிமோட்டுக்கான மாடல் கிடைக்கவில்லை, அதற்கு மட்டும் ஜிப்-லாக் மாட்டிவிட்டேன். பொதுவாகக் கணினிக்கு, மேடை அச்சுப்பொறிக்கு (ப்ரிண்டர்) துணி உறைப் போடுவது எனக்குப் பிடிக்காது, போடவும் கூடாது – அவற்றின் உள்ளே உருவாகும் சூடு எளிதாக வெளியேர வேண்டும் – இருந்தும் இந்த ரிமோட்டுகளுக்கு மட்டும் இத்தகைய பாதுகாப்பு வலையங்கள் தேவை என்பதால் பொறுத்துக் கொள்கிறேன். இணைப்பில் இருக்கும் படம் நான் வாங்கி ரிமோட்களுக்குக்கான உறைகள். சிலிகோன் உறைகள் என்றால் விலை அதிகம், சுமார் ஐந்நூறு அல்லது அறநூறு. ரெக்ஸின் உறைகள் என்றால் விலை மட்டு, சுமார் இருநூறு. குறிப்பு: இதையெல்லாம் தவிர்க்க ஸ்மார்ட் ஹோம் செயலிகள் பற்றியோ யூனிவர்சல் ரிமோட் கண்ட்ரோல்களைப் பற்றியோ பதில் இடுவோர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது – இவை எதுவுமே நம்மூரில் சரிப்படாது மற்றும் நாம் ஓய்வாக டிவிப் பார்க்கும் நேரமே குறைவு அப்போது இவற்றை இயக்குவது மிகக் கடினமானது என்பது என் கருத்து.
ரிமோட் கண்ட்ரோல் உறைகள்

ரிமோட் கண்ட்ரோல் உறைகள்

Disclosure: I write reviews about products and services that I have bought for my usage and paid in full. There were no sponsorship or advertisement, or commission of any sort involved in this post.

Discover more from Venkatarangan blog

Subscribe to get the latest posts to your email.

Categorized in:

Tagged in: