வாழ்வில் எவ்வளவு நேரத்தைக் காணொளியிலும், சமூக வலைத்தளத்தளங்களிலும் செலவழித்து கூகுளுக்கும், பேஸ்புக்குக்கும் சம்பாதித்துக் கொடுக்கிறோம் என்று டேட் சொற்பொழிவில் இந்தப் படத்தைப் பார்த்தவுடன் உரைத்தது.

இந்தப் படத்தில் இருப்பது, அமெரிக்காவில் இன்றைக்கு வாழும் ஒரு 18வயது இளைஞரின் (இளைஞி) வாழ்வில் இருக்கும் ஒவ்வொரு மாதமும் ஒரு புள்ளி. தொண்ணூறு வருடம் வாழ்கிறார் என்று வைத்துக் கொண்டால், அவரின் அன்றாட வாழ்க்கைக்குச் செலவு செய்வது போக, அவருக்கு என்று சொந்த/விருப்ப/ஓய்வு என்பது 334 மாதங்கள். இதில் அவர் கணினி/செல்பேசி திரைகளில் (குறிப்பாக டிக்-டாக்) மட்டுமே 312 மாதங்களைச் செலவழித்துவிடுகிறார். 90 ஆண்டு வாழ்க்கையில் மீதம் இருக்கும் வெறும் 22 மாதங்கள் தான் அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தேட, காதலிக்க, மணமுடிக்க, பிள்ளைப் பெற, சுற்றுலா செல்ல, கவிதை எழுத இருக்கும் என்று டினோ அம்பொரொஸி (Dino Ambrosi) என்ற அறிஞர் சுட்டிக் காட்டுகிறார். சுருக்கென்று உரைத்தது!

The Battle for Your Time: Exposing the Costs of Social Media | Dino Ambrosi | TED

The Battle for Your Time: Exposing the Costs of Social Media | Dino Ambrosi | TED

குறிப்பாகக் குழந்தைகள் திரையின் முன் செலவு செய்யும் நேரத்தைக் குறைப்பது மிக மிக அவசியம். அதற்காக அவர்களுக்குச் செல்பேசியைக் கொடுக்கவே கூடாது என்று சொல்லமாட்டேன். பனிரேண்டு வயது மேலாக, ஓரளவுக்கு அவர்களுக்கு நல்லது கேட்டது தெரியும் வயதில் நம் கண்காணிப்பில் கணினியை (செல்பேசியைவிட இது மேல் என்பது என் கருத்து) பயன்படுத்தக் கற்றுத் தருவது நல்லது – இன்றைய உலகுக்கு இவற்றைச் சரியாக நல்ல விதமாகப் பயன்படுத்தும் திறன் மிக அவசியம், அது சிறு வயது முதலே வர வேண்டும். ஆனால் எல்லாவற்றுக்கும் ஓர் அளவு வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்பதைப் போல, அதுவும் அளவுக்கு அதிகமான நேரத் திரை பயன்பாடு, அவர்களை ஜப்பான் நாட்டில் இருக்கும் அவல நிலையான ஹிக்கிக்கிமொரி (Hikikimori), அதாவது தீவிரத் தனிமை, யாரோடும் எதற்கும் பேசவோ, பழகவோ செய்யாமல், பைத்தியம் போல ஆக்கிவிடும்.

இவை ஒரு புறம் இருக்க! திரைகளின் முன் செலவு செய்யும் எல்லா நேரமும் வீண் என்று சொல்ல முடியாது. இன்றைக்கு நான் செயற்கை நுண்ணறிவைப் பற்றியோ, அறிவியல், கலை மற்றும் பல துறைகளிலும் வரும் புத்தம் புதிய வளர்ச்சிகளை உடனுக்குடன் கற்க யூ-ட்யுப் மிகச் சிறந்த இடம். இதற்காகவே நான் யூ-ட்யுப் ப்ரிமியம் கணக்குக்கு மாதாமாதம் மொய் செலுத்துகிறேன். யூ-ட்யுப்புக்கு முன்னர், சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் இணையத்திற்கு முன் இவற்றைக் கற்க அந்தந்த நாட்டுக்கு நேரில் செல்ல வேண்டும், புத்தங்களை ஆயிரமாயிரம் ரூபாய் கொடுத்து வாங்க வேண்டும், ஆனால் இன்றைக்கு நிலைமையே வேறு. பெருமளவு கண்டுபிடிப்புகள், சொற்பொழிவுகள், அவ்வளவு ஏன் மேலே நான் குறிப்பிட்ட டேட் உரை கூட யூ-ட்யுப்பில் தானே பார்த்தேன். இன்று எவரெஸ்ட் அடிவாரத்தில் இருக்கும் கிராமத்தில் வசிக்கும் சிறுமி கூட கணக்கில் தனக்கு வரும் சந்தேகங்களைத் தீர்க்க கான்-அகாடமி வீடியோக்களைப் பார்த்து உலகத்தின் தலைச்சிறந்த கணித மேதையாக வரலாம். இன்று அறிவியலும், மானிடவியலிலும் கூட இந்தளவு அசுர வேக வளர்ச்சிக்குக் காரணம் இணையம் என்று நான் அடித்துச் சொல்லுவேன். இன்று லிங்க்-டின் போன்ற தொழில்முறை சமூகத் தளங்களின் மூலம் பல குறு நிறுவனங்களும் தங்களின் சேவைகளை உலகத்தின் எல்லா மூலைக்கும் தெரியப்படுத்தி, வியாபாரம் செய்கிறார்கள். யூ-ட்யுப் சேனல்களை நடத்தியே பல நடிகர்கள், படைப்பாளிகள் கோடிக்கணக்கில் சம்பாதித்து அதையே தங்களின் வாழ்க்கைத்தொழிலாகச் செய்கிறார்கள். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இவற்றில் எல்லாமே பொதுவாக இருப்பது கல்விக்காகவும், தொழிலுக்காகவும், நம் திறமைகளை வெளிக்காட்டவும் செய்யும் செயல்கள் மட்டுமே பயனாக இருக்கும்.

எதையும் நாமாகச் செய்யாமல், அடுத்தவர் செய்ததை வெட்டி பொழுதைப் போக்க பார்ப்பது, நம் பெருமையைத் தற்புகழ்ச்சிக்காகப் பதிவிட்டுக் கொண்டு விருப்பக்குறி எண்களுக்குக் காத்திருப்பது, பொய்ப் பிரசாரங்களைச் செய்வது என்று போகும் போது தான் சமூகத் தளங்களும், திரைகளும் ஆபத்தாகிறது. எப்படி உணவில் அறுசுவையும் இருத்தல் அவசியமோ அது போல நம் வாழ்விலும் கணினித் திரைகளும் அவசியம், அது மட்டுமே வாழ்க்கையாக இருக்கக்கூடாது.

முழு வீடியோவைப் பார்க்க யூ-ட்யுப்பில் “The Battle for Your Time: Exposing the Costs of Social Media | Dino Ambrosi” என்று தேடவும்.

Tagged in:

,