
Healthy breakfast at 99 Km filter coffee
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்ல சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போகும் போது காலை உணவுக்கு என் விருப்பமாக இருந்த உணவகம் ஹரிதம். சென்னையிலிருந்து சுமார் நூறு கிலோ மீட்டரில், மாநகர நெரிசல்கள் முடிந்து, பயணம் தொடங்கி இரண்டொரு மணி நேரங்கள் ஆகியிருக்கும், பசிக்கத் தொடங்கும், அதனால் அந்த இடம் வசதியாக இருந்தது. பெருந்தொற்று காலத்தில் ஹோட்டல் ஹரிதம் மூடப்பட்டுவிட்டது, போன இரண்டு முறை சென்ற போது அதற்கு முன்னரே வரும் ஹோட்டல் ஆர்யாஸ் சென்றேன், உணவு நன்றாகத் தான் இருந்தது. ஹரிதம் இருந்த அதே இடத்தில் இப்போது ஹோட்டல் மனோஜ் பவன் வந்துள்ளது. சென்ற வாரம், கொடைக்கானல் போன போது ஒரு மாறுதலுக்காக அதை அடுத்திருந்த 99 கிலோ மீட்டர் பில்டர் காபி என்கிற ஹோட்டலுக்கு சென்றேன்.
99 கிலோ மீட்டர் பில்டர் காபி உணவகத்தின் சிறப்பு அங்கே கிடைக்கும் பாரம்பரிய உணவுகள், எல்லாமே சிறு தானியங்களில் செய்யப்பட்டது. நான் போனது காலை வேலை என்பதால் கருப்புக் கவுனியில் செய்த பழைய சோறு கஞ்சி அதோடு தொட்டுக்கொள்ள வெங்காயம் மற்றும் மோர் மிளகாய் வாங்கி சாப்பிட்டேன், அபாரமான சுவை. இது இரவு முழுதும் புளித்த சோறு, நொதித்தல் (fermented) நிகழ்வால் அதில் நல்ல நுரைமம் (yeast) உற்பத்தி ஆகி இருப்பதால் உடம்புக்கு மிக ஆரோக்கியமான காலைச் சிற்றுண்டி இது, அதுவும் கோடைக் காலங்களில் உண்ண மிகச் சிறந்த உணவு. அதைத் தொடர்ந்து ஓர் அரை குவளை கேழ்வரகு கூழ் சாப்பிட்டேன். இறுதியாக ஒரு டம்ளர் அடர்த்தியான, சர்க்கரை இல்லாத காபி (சர்க்கரைப் பாகான காபி என்பது மன்னிக்க முடியா குற்றம்) குடித்தேன்.



