ஒருவருக்கு நூற்றாண்டு விழா எடுப்பது, அதுவும் அவர்களின் வாரிசுகள் மற்றும் அவர் விட்டுச் சென்ற நிறுவனத்தினர் எடுப்பது நாம் பல இடங்களில் பார்க்கிறோம். பாராட்டு விழா எடுப்பதில் (இந்தியர்கள்) நாம் வல்லவர்கள்.

ஆனால் அந்த நூற்றாண்டு நினைவு விழா, ஒருவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு மரியாதையாகவும், அவர் விட்டுச்சென்ற வழியிலும் நடந்தால் அதுதான் அந்த (மா)மனிதரின் பெருமை! அவரின் வாரிசுகள் அவருக்குச் செய்யும் நன்றிக்கடன், அப்படியான ஒரு அருமையான விழாவை இன்று கோனார் தமிழ் உரையால் தமிழகத்தின் பட்டித்தொட்டி தோறும் தெரிந்த பழனியப்பா சகோதரர்கள் மறைந்த திரு பழனியப்பா செட்டியாரின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியை இப்போது நடத்தினார்கள்!

முதலில் வரவேற்புரை அளித்த செட்டியாரின் தம்பி திரு செல்லப்பன் அவர்கள் தனது முதிர்ந்த வயதையும் பொருட்படுத்தாமல் தன் அண்ணாவிற்காக, அவரின் நினைவுகளை அவரின் பண்புகளை அழகாகக் கூறினார். தங்களின் சிறுவயதிலேயே தந்தை மறைந்ததால் குடும்பத்தைக் காப்பற்றுகின்ற பெரும் பொறுப்பை எப்படிச் செய்தார் என்று ஆரம்பித்து, அவரின் வள்ளல் தன்மையையும், மாதம் தொரும் கல்கத்தாவிலிருந்து வரும் புத்தகங்களை அவர் விடாமல் படித்ததைப் பற்றியும் நினைவுக்கூர்ந்தார்.

திருமதி சுதா சேஷய்யன், திருமதி மீனா செல்லப்பன்

திருமதி சுதா சேஷய்யன், திருமதி மீனா செல்லப்பன்

விழாவின் தலைமை உரையாற்றிய துணைவேந்தர் திருமதி சுதா சேஷய்யன், ஐயா திரு பழனியப்பா செட்டியாரின் மூன்று குணாதிசயங்களைப் பட்டியலிட்டார்: 1) கல்வியின் மீது, புத்தகங்களின் மீது அவரின் காதல், 2) கடின உழைப்பின் மீதான நம்பிக்கை, 3) கடவுளின் மீது அவரின் பக்தி. அவர் மேலும் பேசியது: நம் வீட்டில் வைக்கும் தெய்வங்களின் படங்களிலேயே வேறுபாடுப் பார்க்கிறோம் – புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணனின் படம் வைத்தால் வீட்டிலெல்லாம் ஊதிப் பொய்விடும் என்றும், ஆண்டிக் கோலத்திலிருக்கும் முருகனின் படம் வைத்தால் நாம் ஆண்டியாகிவிடுவோம் என்றும் – உண்மையில் இவை தான் மூட நம்பிக்கை. ஆனால், அப்படியான ஒரு ஆண்டி திருக்கோலத்தில் இருக்கும் முருகனின் படத்தை வைப்பேன் என்றுச் சொல்லியுள்ளார் ஐயா, அவரின் பக்தியால்.

அதன்பின் செட்டியாரின் பேரப்பிள்ளைகள் அவரின் நினைவாக ஒரு கவிதை அடங்கிய நாட்டிய நிகழ்ச்சியை, அமைதியாக, நயமாகச் செய்தார்கள். பாராட்டுக்கள்.

செட்டியாரின் பேரப்பிள்ளைகள் அவரின் நினைவாக ஒரு கவிதை அடங்கிய நாட்டிய நிகழ்ச்சியை, அமைதியாக, நயமாகச் செய்தார்கள். பாராட்டுக்கள்.

கவிதை அடங்கிய நாட்டிய நிகழ்ச்சி

இதைத்தொடர்ந்து “இந்து தமிழ் திசை” நாளிதழும் பழனியப்பா சகோதரர்கள் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியில் முதலாவதாக வந்த மூன்று பள்ளி மாணவிகளுக்குப் பரிசளிக்கப்பட்டது. பரிசு கொடுத்ததும் ஒரு பெண்மணி, மூன்று பரிசுகளையும் பெற்றதும் மாணவிகள் – தமிழகம் முழுவதிலும் நடத்திய கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றிருப்பது எல்லாம் மாணவிகள் என்பது தமிழகத்தின் பெருமை.

கட்டுரைப் போட்டியில் முதலாவதாக வந்த மூன்று பள்ளி மாணவிகளுக்குப் பரிசளிக்கப்பட்டது.

கட்டுரைப் போட்டியில் முதலாவதாக வந்த மூன்று பள்ளி மாணவிகள்

இத்தோடு விழா முடிந்தது என எண்ணினால், அப்போது தான் ஆரம்பித்தது இடியுடன் கூடிய தமிழ் மழை! என்னைப் போன்று தமிழை இரண்டாவதாகப் படித்த மாணவர்களுக்கு என்றே ஏற்பாடுச் செய்யப்பட்டதுப் போலிருந்த நிகழ்ச்சி. பல்லாயிரம் வருடங்களான தமிழ் இலக்கிய வரலாற்றை, பெருமையை, ஒரு தொண்ணூறு நிமிடங்களில் தெரிந்துகொள்ளப் பயன்படும் வகையில் ஒரு “தமிழ் இலக்கியங்கள் – ஒரு பார்வை” என்றொரு சிந்தனை அரங்கம்.

தமிழின் முக்காலங்களையும் நான்கு தமிழ் அறிஞர்கள் மழையாக பொழிந்து தள்ளினார்கள். தலைமை பேராசிரியர் திரு கண சிற்சபேசன் அவர்கள். அரங்கம் சங்ககாலத்தில் (பேராசிரியர் திரு தெ ஞானசுந்தரம்) ஆரம்பித்து, இடைக்காலத்தில் (பேராசிரியர் திரு சிற்பி பாலசுப்பிரமணியம்) சென்று, தற்காலத்திற்கு (இலக்கியச் சுடர் த இராமலிங்கம்) வந்து தமிழ் சினிமா பாடல்களோடு முடிவடைந்தது.

தமிழின் முக்காலங்களையும் நான்கு தமிழ் அறிஞர்கள் மழையாக பொழிந்து தள்ளினார்கள்.

தமிழின் முக்காலங்களையும் நான்கு தமிழ் அறிஞர்கள் மழையாக பொழிந்து தள்ளினார்கள்.

விழாவிற்கு என்னை அழைத்த திரு செல்லப்பன் பழனியப்பன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

பொதுவாகக் கல்யாணம் மற்றும் விழாக்களில் பரிசாகத் தேவையில்லாத பொருட்களை, அதிகம் செலவு செய்து வாங்கி நமக்குக் கொடுப்பார்கள், அவற்றைப் பெற்றுக் கொண்டு என்ன செய்வது என்று நமக்குப் புரியாது-வீட்டில் வைக்கவும் இடம் இருக்காது, அவற்றால் எந்தப் பயனும் இருக்காது. அதுப் போல இல்லாமல், இந்த விழாவில் வந்திருந்தவர்களுக்கு நினைவுப் பரிசாகத் தினம்தோறும் பயன்படக்கூடிய கூடியவற்றைக் கொடுத்தார்கள்-ஒன்று, நாம் வீட்டில் சமைத்துச் சாப்பிடக்கூடிய சிறுதானியங்கள் அடங்கிய உறை, இன்னொன்று குளித்துவிட்டுத் துவட்டிக் கொள்ளக்கூடிய கைத்தறி துண்டு.

சிறுதானியங்கள் அடங்கிய உறை, இன்னொன்று குளித்துவிட்டுத் துவட்டிக் கொள்ளக்கூடிய கைத்தறி துண்டு

சிறுதானியங்கள் அடங்கிய உறை, இன்னொன்று குளித்துவிட்டுத் துவட்டிக் கொள்ளக்கூடிய கைத்தறி துண்டு

[இந்த விழாவில் நான் எடுத்துக் கொண்ட குறிப்புகள் இரண்டு-மூன்று பக்கங்களைக் கடந்துவிட்டது, அவற்றைத் தொகுத்து ஒரு வலைப் பதிவாக எழுத எண்ணம், வரும் ஒன்றிரண்டு நாட்களில் செய்வேன் என நினைக்கிறேன். பார்க்கலாம்.]

இதோ என் குறிப்பை எழுதிவிட்டேன், கீழே பார்க்கவும். கோர்வையாக இல்லாமல் இருக்கலாம், ஏதாவது பிழை இருந்தால்அது என் தவறு தான், அறிஞர்கள் சரியாகத் தான் சொல்லியிருப்பார்கள். என்னை மன்னிக்கவும்!

சங்க காலம்

சங்க காலம் (Sangam period) என்பது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது. சங்க இலக்கியம் என்றால் குறிப்பாக பதினெட்டு படைப்புகளை சொல்லலாம், அவை பத்து நூல்களின் திரட்டான பத்துப்பாட்டு + எட்டு நூல்களை உள்ளடக்கிய எட்டுத் தொகை இவற்றின் கூட்டாகும். சங்க இலக்கியம் 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் 31 பெண்களும் உண்டு என்பது தமிழின் பெருமை.

சங்க இலக்கியம் கடவுள் இலக்கியம் அல்ல,
அதேசமயம் கடவுளை மறந்த இலக்கியமும் அல்ல!

உலகத்தின் பெரும் பகுதியை ஆண்ட பேரரசர் அலெக்சாண்டர் இறக்கும் தருவாயில் தன் அருகே இருந்தவரிடம் நான் இறந்தவுடன் “1) என்னை என் உள்ளங்கைகள் திறந்து இருக்கும்படி எடுத்துச் செல்லுங்கள், 2) இடுகாடு வரை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்காரம் செய்யுங்கள், 3) என் சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்ல வேண்டும்” என்று மூன்று கட்டளைகள் இடுகிறான். ஏன் இப்படி கூறினார், என்றால் – 1) உலகத்தையே ஆண்ட மாமன்னன் கூட இறந்தபின் எதையும் கொண்டு செல்லவில்லை என்பதை காட்டவும்; 2) அவன் சம்பாதித்த பொருட்கள் அனைத்தும் இடுகாட்டின் வெளியே வரைதான் என்றுச் சொல்லவும்; 3) உலகிலேயே தலைசிறந்த மருத்துவர்களால் கூடப் பிரிய வேண்டிய உயிரைத் தடுத்து நிறுத்த முடியாது என்று காட்டுவதற்காகவும்.

இதே கருத்தை எங்கள் ஔவைப் பாட்டியும் சொல்லியுள்ளார். நக்கீரரும் இதே பொருள் வரும்படி இப்படி எழுதுகிறார்.

மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் (189):
தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே;
செல்வத்துப் பயனே ஈதல்,
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.

உரை: தெளிந்த கடலால் சூழப்பட்ட இவ்வுலகம் மற்றவர்களுக்கும் பொதுவானது என்று எண்ணாமல், தானே ஆட்சி செய்யும் ஒருவர்க்கும், பகலும் இரவு தூங்காமல், விரைந்து ஓடும் விலங்குகளை வேட்டையாடுபவனுக்கும் உணவு ஒருபடி அளவுதான்; அவர்கள் உடுப்பது இரண்டு ஆடைகள் தான். அதுபோல், மற்ற தேவைகளிலும் இருவரும் ஒப்பானவரரே ஆவர். ஆகவே, எவ்வளவு செல்வம் இருந்தாலும் ஓரளவுக்கு மட்டுமே அதை அனுபவிக்க முடியும். அதனால், செல்வத்தினால் ஒருவன் பெறக்கூடிய பயன் அதைப் பிறர்க்கு அளித்தலேயாகும். அவ்வாறு பிறர்க்கு அளிக்காமல் தானே அனுபவிக்கலாம் என்று ஒருவன் எண்ணினால் அவன் செல்வத்தினால் வரும் பயன்கள் பலவற்றையும் இழப்பான்.

காதல் இல்லாமல் சங்க இலக்கியமா? ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் இரண்டு என்பது கணக்கு, ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் மூன்று என்பது காதலனின் கற்பனை. ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் ஒன்றாகவே ஆகிறோம் என்பது சங்க இலக்கிய காதல் வழமை. குறுந்தொகையில் எப்படி வருகிறது பாருங்கள்.

குறுந்தொகை 40 - செம்புலப்பெயனீரார்
"யாயும் ஞாயும் யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே"

உரை: எனக்கு உன்னை முன்பே தெரியாது. எனது தந்தையும் உனது தந்தையும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் இதற்கு முன்னமே வேறு வழியில் தொடர்புகள் அற்றவர்கள். இருப்பினும் எமது அன்பினால் செம்புலத்தில் விழுந்த நீரைப்போலே இணைபிரியாதவர்களாக கலந்திருப்போம்.

நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படையில் முருகப்பெருமானின் பன்னிருக் கைகளைப்பற்றி எவ்வளவு விரிவாக எழுதுகிறார் பாருங்கள்.

விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது
ஒருகை; உக்கம் சேர்த்தியது ஒருகை;
நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயதொருகை;
அங்குசங் கடாவ ஒருகை, இருகை . . . .110

ஐயிரு வட்டமொடு எ·குவலந் திரிப்ப,
ஒருகை மார்பொடு விளங்க ஒருகை
ஒருகை தாரொடு பொலிய, ஒருகை
கீழ்வீழ் தொடியடு மீமிசைக்கொட்ப, ஒருகை
பாடின் படுமணி இரட்ட, ஒருகை
நீனிற விசும்பின் மலிதுளி பொழிய, ஒருகை
வானர மகளிர்க்கு வதுவை சூட்ட,
ஆங்குஅப் பன்னிரு கையும் பாற்படஇயற்ற,
அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ்
வயிர்எழுந் திசைப்ப, வால்வளை ஞரல, . . . .120

இடைக்காலம்

இடைக்காலம் என்பது அலங்கார காலம் என்றும் சொல்லலாம். இந்த காலத்தில் எல்லா நம்பிக்கைகளைப் பற்றியும் எல்லா இதிகாசங்களையும் தமிழிலக்கியங்கள் உள்ளடக்கியுள்ளது. இந்த காலத்தில் வந்த ஐந்து பெரும் காப்பியங்களை பாருங்கள் அது உங்களுக்கே புரியும்.

  1. ஜைன மதத்தை தழுவிய சிலப்பதிகாரம்
  2. இராமாயண இதிகாசமான கம்பராமாயணம்
  3. மகாபாரத இதிகாசமான வில்லப்பாரதம்
  4. சைவ காப்பியமானப் பெரிய புராணம்
  5. வைணவ காப்பியமான நாலாயிரம் திவ்ய பிரபந்தம்.

சிலப்பதிகாரத்தை எடுத்துக் கொண்டால் வேறு எந்த காப்பியத்திலும் இல்லாத ஒரு பெருமை அதற்கு. பொதுவாக முதலில் இறை வணக்கத்தை தான் எழுதுவார்கள். ஆனால் இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் இயற்கை வாழ்த்துக் கூறி தொடங்குகிறார் பாருங்கள். திங்களைப் போற்றுதும், ஞாயிறு போற்றுதும், மழை போற்றுதும் என்று சந்திரனையும், சூரியனையும், மழையையும் வாழ்த்தி வணங்கிப் பாடுகிறார். கண்ணகியின் வாழ்வின் மூன்று நிலைகளை (இன்ப-துன்ப-தெய்வநிலை) உணர்த்தும் குறியீடுகளாகவும் இவற்றைக் கொள்வர் பலர்.

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்று இவ்
அங்கண் உலகளித்த லான்.

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம் திரிதலான்

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவன்அளிபோல்
மேல்நின்று தான்சுரத்த லான்

(சிலப்பதிகாரம்:1: 1-9)

அடுத்து கம்பராமாயணத்திற்கு வருவோம். கம்பர் இராவணனின் விநயத்தை (1. நயமொழி 2. ஒழுக்கம் 3. பணிவு) எப்படி சொல்லுகிறார் பாருங்கள். காப்பியக் கதையில், தன் சொந்தங்கள் அனைவரையும் இழந்த நிலையில், தாங்காத சோகத்தில் வருத்தத்தில் இருக்கும் இராவணன், தான் அழைத்து வர சொன்ன மூலபலப்படை தலைவன் வந்தவுடன், போருக்குப் போ என்று கட்டளையிடாமல், முதலாவது அவனின் வீடும், மனைவி மக்களும் நலமா என்று வினவுகிறான்.

வணங்கிய வீரரின் நலனை இராவணன் உசாவுதல்

அனையர் யாவரும் அருகு சென்று, அடி முறை வணங்கி,
வினையம் மேவினர், இனிதின் அங்கு இருந்தது ஒர் வேலை;
'நினையும் நல் வரவு ஆக, நும் வரவு!' என நிரம்பி,
'மனையும் மக்களும் வலியரே?' என்றனன், மறவோன். (33)

அடுத்து வில்லிபாரதத்தில் உத்தியோக பருவம் (5) – “கிருட்டிணன் தூது” பகுதியைப் பார்ப்போம். போர் வராமல் இருக்க கிருஷ்ணன் தூது போக போகிறான், அப்போது சகாதேவனிடம் உனக்கு ஏதாவது யோசனை இருக்கிறதா என்று கேட்கிறான். அதற்கு சகாதேவன் ‘ஆதிமூர்த்தியே, நீ தூது போனால் என்ன? போகாவிட்டால் என்ன? எது எவ்வாறாயினும் எல்லாம் உன் எண்ணப்படியே முடியும். உன் விருப்பம், போர் வேண்டும் என்றே தோன்றுகிறது. அதனை உள்ளபடியே யான் அறிவேன்‘ என்றான்.

விடாமல் கண்ணன் கேட்கிறான் “யுத்தம் நேராதிருப்பதற்கு உபாயம் யாது?“, அதற்கு சகாதேவன் கூறுகிறான் “பாராள கர்ணன் என்று கூறி, இதை ஏற்க மறுக்கும் அவனின் பகைவனான அர்ஜுனனைக் கொன்று, திரௌபதியின் கூந்தலை அறுத்து, இதையெல்லாம் தடுக்க கூடிய உன்னை கட்டிப்போடுவேன்” என்கிறான். அதற்கு பதில் கண்ணன் கூறுகிறான்: “இது எல்லாம் கூட நீ செய்து முடித்தாலும் என்னை கட்டிப் போட முடியாது.

33 - இவ்வண்ணஞ்சாதேவ னியம்புதலுநகைத்தருளி யிகலோர் சொன்ன ...

35 - பாராளக் கன்னனிகற்பார்தனைமுன் கொன்றணங்கின் ...

உரை: கர்ணன் பூமியை அரசாட்சி செய்யும்படி, இகல் பார்த்த்னை முன்னொன்று (பகைமையையுடைய அர்ச்சுனனை முன்னே கொலைசெய்து, சிறந்த மகளான திரௌபதியினது கருநிறம் பொருந்திய கூந்தலை அரிந்துவிட்டு, காலில் தளை பூட்டி கை பிடித்து நின்னையும் யான் நேர் ஆக் கட்டுவன் ஏல்….

36 - கண்ணன் சகாதேவனது திறத்தைப் பரிக்ஷித்தல்:
முன்னநீ கூறியவை யெல்லாமுடித்தாலும்
என்னைநீ கட்டுமாறெவ்வா றெனமாயன்

இதே பொருளை ஒட்டி, மாணிக்கவாசகரும் ஆக்கமும் அழித்தலும் இல்லாமலிருப்பது ஈசன் என்கிறார். ஒரு சோழ மகாராணி பிரசவ வலியில் இருக்கிறாள், அப்போது அரசவை ஜோதிடர் கூறுகிறார், குழந்தை ஒரு நாழி தள்ளி பிறந்தால் உலகை ஆளும் வல்லமை பெற்று இருப்பான் என்று,இதை கேட்ட ராணி பிரசவத்தை தள்ளி போட தன் இரு கால்களையும் தூக்கி உயரத்தில் கட்டி விடும்படி ஆணையிடுகிறாள், அப்படி செய்ததால் ராணி இறக்கிறாள், குழந்தை பிறக்கிறது. இதுவரை பார்த்திராத, இனிமேல் தான் பிறக்கப்போகும் தன் குழந்தைக்காக உயிரைக்கூட தியாகம் செய்யும் மனம் ஒரு தாயுடைய மனம், அதைப் போன்றது இறைவனின் கருணை என்கிறார்.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் “குலசேகர ஆழ்வார்” தேவகியின் வேதனையை இப்படிக் கூறுகிறார். கண்ணனை பெற்றிருந்தாலும் அவனை வளர்க்கும் பாக்கியத்தைப் பெற்றது யசோதை. வெண்ணையை திருடிவிட்டு வீட்டினுள் வரும் கண்ணனை வழிமறித்துக் கோபமாக கேட்கிறாள் யசோதை, வெண்ணை திருடினாயா? அதற்கு முகம் முழுவதும் வெண்ணையாக இருக்கும் கண்ணன் இல்லவே இல்லை என்கிறான். அவனை அடிக்க சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அருகில் இருக்கும் தாம்பு கயிற்றை எடுக்கிறாள் யசோதை, அப்போதும் குழந்தை பயப்படவில்லை கண்டிப்பாக தாய் தன்னை அடிக்க மாட்டாள் என்று எண்ணுகிறது, இப்போது கயிறு தன் அருகே வர ஆரம்பிக்க குழந்தை பயந்து வேண்டாம் வேண்டாம் என்று அழுகிறது, அதேசமயம் கண்ணனின் அருகே வர வர பயங்கரமாக இருந்த கயிறு அழகாக எழிலாக மாறுகிறது, இதை பார்த்த யசோதை இப்படிப்பட்ட அடிக்கப் போகிறோம் என்று நினைத்து கயிற்றைக் கீழே வீசுகிறாள்.

தற்காலம்

இறுதியாக தற்காலத்திற்கு வந்தால் பாரதியில் இருந்து தான் நாம் ஆரம்பிக்க வேண்டும். பாரதியின் சொல் புதிது, பொருள் புதிது, மற்றும் சுவை புதிது.

என்னதான் நம் நிலை மாறினாலும் நம் ஆழ்மனதில் இருப்பது எப்படியாவது வெளியே வந்து விடும். இந்த ஒரு வேடிக்கையைப் பாருங்கள். ஒரு (முடி திருத்துபவர்) பார்பர், வேலையில் திறமையானவர், ஆனால் நாடகத்தில் நடிக்க வேண்டும் என்று தீராத ஆசை. அவரிடம் வரும் ஒரு கதாசிரியரிடம் இந்த ஆசையை சொல்லியிருந்தார். ஒரு நாள் நடிகர் ஒருவர் வரவில்லை என்று இவரை அந்தக் கதாசிரியர் நடிக்க அழைத்தார், இவரும் ஆர்வமாக ராஜா உடையணிந்து, கிரீடம் வைத்துக் கொண்டு, ஒருவரி வசனத்தையும் மனப்பாடம் செய்து, மேடையில் ஏறி விட்டார், இவரை நோக்கி வந்தது விசுவாமித்திர மகாமுனிவர், அவரைப்பார்த்து கேட்க வேண்டிய வசனம் “வாருங்கள் முனிவரே, நலமா?” என்ன விஷயம் என்று. ஆனால் முனிவர் வேடத்தில் தலையில் ஜடாமுடியுடன் நீண்ட தாடியுடன் வந்தவரை பார்த்து தன் தொழில் நினைவு வந்து “கட்டிங்கா சேவிங்கா?” என்று கேட்டுவிட்டார்.

இப்படித்தான் பாஞ்சாலி சபதத்தில் மகாபாரதக் கதையை சொல்லிக் கொண்டு வரும் பாரதி, எல்லா சொத்துக்களையும் இழந்த தர்மன் தன் நாட்டை வைத்து விளையாடப் போகும்போது, நீ இதை செய்யலாமா என்று வரும் இடத்தில், அதற்கு பதிலாக தருமன் “என் முன்னோர்களும் இப்படி செய்தார்கள்” என்று சொல்லுகிறான். குடிமக்களை பொருட்களாக எண்ணி தருமன் எப்படி இப்படி செய்யலாம் என்று கோபம் கொண்டு, கதையை விட்டுவிட்டு கோவமாக பாரதி வெளி வருகிறான் – “முன்னோர்கள் செய்தார்கள் என்றால் நீ செய்யலாமா? உனக்கு முன்னாலும் மூடர்கள் உண்டு. முன்னால் என்றால் நேற்றும் முன்பு தான். ஆயிரம் ஆயிரம் ஆண்டும் முன்பு தான்” என்று சொல்லிவிட்டுத் தான் தொடர்கிறான்.

தமிழுக்கு செட்டி நாட்டு மக்களின் கொடைக் கவிஞர் கண்ணதாசன் என்று சொல்லலாம். கண்ணதாசனின் போல் எழுதி சம்பாதித்தவர் இல்லை! அவரைப்போல கடன்வாங்கி, கொடுத்தவரும் இல்லை. ஒரு முறை ஏ.வி.எம் நிறுவனத்திலிருந்து  ரூபாய் 30,000 கடன் வாங்கி உள்ளார் கவிஞர். அதற்கு பதிலாக, ஐந்து-ஆறு பாடல்கள் எழுதிக் கொடுக்கும்படி திரு மெய்யப்ப செட்டியார் கூறியுள்ளார். கவிஞரும் பாடல்களை எழுதி, ஏ.வி.எம் சரவணனிடம் கொடுத்துவிட்டு, “முதலாளி, காசு கொடு” என்று கேட்கிறார். சரவணன் சாரும் தயங்கி, “இது உங்கள் பழைய பாக்கிக்கு சரியாகிவிட்டது” என்று அப்பச்சி சொன்னதாகச் சொல்லவும், “அதெல்லாம் இல்லை கடன் இருந்தால் தான் பாட்டு எழுத வருகிறது, கொடுத்துவிடு” என்றாராம் கவிஞர்.

மனிதர்களை புகழ்ந்து, பின் மாற்றி மாற்றி பாடல்கள் ஏன் எழுதுகிறாய், எல்லாம் வல்ல இறைவனைப் பற்றி எழுதுங்கள்” என்று ஒருமுறை மா.பொ.சி கவிஞரை பார்த்து ஒரு மேடையில் சொல்லியுள்ளார். அதற்கு பதிலாக கவிஞர் “குமுதம்” பத்திரிகையில் இப்படி எழுதுகிறார்:

மானிடரைப் பாடி அவர்
மாறியதும் ஏசுவதென்
வாடிக்கையான பதிகம்
மலையளவு தூக்கி உடன்
வலிக்கும் வரை தாக்குவதில்
மனிதரில் நான் தெய்வமிருகம்

அடுத்து காதலுக்கு இப்படியும் ஒரு உவமை கூறுகிறார் கவிஞர் மீரா:

"பூங்கொடியே உனக்குப்
பூ வாங்கி வருகிறேன்
முதன்முதலில் தானம் தர ஆசைப்பட்டவன்
கர்ணன் வீட்டுக் கதவைத்
தட்டியது மாதிரி"
– மீரா (‘கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ தொகுப்பில் விடுபட்ட கவிதை ஒன்று)

பாரதிக்கு தனது எந்த அனுபவத்தையும் எழுத்தில் வடித்து விட வேண்டும். பாரதி எழுதிய ஒரு சிறுகதையைப் பாருங்கள். ஒரு இனிப்பு கடை, கடையில் முதலாளிக்கு யானைக்கால், நான் பார்க்காதபோது இனிப்பை திருடும் சிறுவர்களைப் பார்த்து பயமுறுத்த என் காலை பார்த்தீர்களா? இதில் ஒரு உதை விட்டால் நீங்கள் நசுங்கி விடுவீர்கள் என்று பயமுறுத்துகிறார், இப்படி இருக்க ஒரு முறை தவறுதலாக ஒருவன் வந்து இனிப்பைத் தொட்டு விடுகிறான், தன் காலால் அவனை உதைக்கிறார் முதலாளி, திருடியவனுக்கு அந்த உதை வலிக்கவே இல்லை, உடனே மற்ற சிறுவர்களைப் பார்த்து இவரின் கால் பெரிதாக இருக்கிறதே தவிர வலிக்கவே இல்லை பஞ்சு போல் இருக்கிறது. இதை சொல்லிவிட்டு பாரதி, இப்படித்தான் நாம் பல விஷயங்களைப் பார்த்து பயந்து செயல்படாமல் இருந்து விடுகிறோம், செயல்படத் தொடங்கினால் எல்லா விஷயங்களும் இதுதான் என்று.

கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஒரு கவிதையில் இப்படி சொல்லுகிறார் – “எங்கள் ஊரில் ஒருவர், ஊர் தலைவரானார், சட்டசபை உறுப்பினரானார், பாராளுமன்ற உறுப்பினரானார், வெளிநாட்டுத் தூதுவரானார், ஆனால் கடைசிவரை மனிதராகவில்லை”. இதற்கு கவிஞர் வைத்த தலைப்பு “வைராக்கியம்“. அதாவது வைராக்கியமாக அவர் மனிதர் ஆகாமல் இருந்தார் என்று சொல்லுகிறார்.

[எனது குறிப்பு முற்றும்] 

Categorized in:

Tagged in:

, ,