என் சமீபத்திய பயணத்தில் திரு சாவி அவர்களின் “வடம்பிடிக்க வாங்க ஜப்பானுக்கு” கையில் இருந்ததால் பயணக்களைப்பே தெரியவில்லை. ஜப்பான் டோக்கியோ நகரத்தில், அரசர் மாளிகையின் முன்னால் திருவாரூர் தேரை ஓடச் செய்வது (கற்பனையில் தான்) என்றால் சும்மாவா?

வாஷிங்டனில் திருமணம்” மூலமாக பல லட்சம் தமிழர்களை அமெரிக்காவிற்கு கூட்டிச் சென்ற திரு சாவி அவர்கள், இந்த முறை நம்மை அழைத்துச் செல்வது – பாசக்கார ஜப்பானியர்களின் நாட்டிற்கு. நான் ஜப்பான் சென்றிருக்கிறேன், என் சொந்த நாட்டை அடுத்து நான் வாழ விரும்பும் நாடு என்றால் அது ஜப்பான் தான். என் பார்வையில் ஜப்பான் என்பது, அன்பான மக்கள் + ஒழுக்கமான சமுதாயம் + கடின உழைப்பாளர்கள், இருக்கும் நாடு.

கதையில் நிஜ இடங்களையும், உண்மை மனிதர்களையும், கற்பனை பாத்திரங்களையும் நேர்த்தியாகச் சேர்த்துள்ளார் சாவி. உதாரணம் பாருங்கள் – ஜப்பான் சக்கரவர்த்தியின் அழைப்பில், அப்பொழுது இருந்த இந்தியா வங்கி தலைவர் திரு கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு செல்கிறது – யார் யார் தெரியுமா – திருமதி மனோரமா (ஆச்சி), திரு நன்னன் (தொலைக்காட்சி புகழ் தமிழ் ஆசிரியர் தான்), திரு கணபதி ஸ்தபதி இவர்களுடன் விழாவேந்தன் மற்றும் புள்ளி சுப்புடு. இவர்களுக்கு தமிழகத்தில் இருந்து ஆதரவாக அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள்.

புனைவில் நாம் டோக்கியோ நகரத்தின் பல பகுதிகளுக்கு செல்கிறோம், புள்ளி சுப்புடுவை ஷோஜோ கூட்டி செல்லும் மசாஜ் பார்லர் உட்பட – “என்னை பிறந்த மேனிக்கு தோல் உரிக்கிற மாதிரி உரிச்சு” என வெட்கப்படுகிறார் புள்ளி, எல்லாம் முடிந்தப் பின்னர் 😊. கதையின் வேகம் குறையாமல் இருக்க, ஊடே ஒரு சர்வதேச சதி வலையும் விரிகிறது. நாவலை வாசிக்கும் போது, நமக்கு எழுத்தாளர் சாவி அங்கே இருக்கிறார் என்பதே மறந்துவிடும், சினிமா படம் போல் நம் காதுகளில் கதாப்பாத்திரங்கள் பேசுகிறார்கள், கோபுலு கை வண்ணத்தில் அவர்கள் நம் மனக்கண்ணில் தெரியவும் செய்கிறார்கள்.

பல வருடங்களுக்கு பிறகு இப்போது இந்த புத்தகத்தைப் படிக்கும் போது, கதையில் கோபாலகிருஷ்ணன் மற்றும் கலைஞர் அவர்களின் புகழ் கொஞ்சம் தூக்கலாகப்படுகிறது– ஆசிரியர் முகப்பில் எழுதியது போல, அவர்கள் இருவரும் அவரின் நெருங்கிய நண்பர்கள், அதனால் தான் போலும். தேர் திருவிழாயெல்லாம் சிறப்பாக நடந்து முடிந்தவுடன், நம் மனதில் ஒரு சிறு சோகம் – இதெல்லாம் நிஜமாக நடந்தால் தமிழர்களான நமக்கு எவ்வளவு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

அடுத்த பயணத்தில் உங்களுடன் எடுத்து செல்லுங்கள்: “வடம்பிடிக்க வாங்க ஜப்பானுக்கு”.

திரு கோபாலகிருஷ்ணன், திருமதி மனோரமா (ஆச்சி), திரு நன்னன் மற்றும் பலர்

திரு கோபாலகிருஷ்ணன், திருமதி மனோரமா (ஆச்சி), திரு நன்னன் மற்றும் பலர்

Categorized in:

Tagged in:

, , ,