ஏ.கே.செட்டியார் எழுதிய இந்தியப் பயணங்கள்

பயணப் புத்தகங்கள் என்றாலே எனக்கு ஆங்கில எழுத்தாளர்கள் தான் நினைவில் வரும், ஆனால் எழுபது ஆண்டுகளுக்கு முன்னாலே தமிழர் ஒருவர் உலகத்தின் பல கோடிகளுக்கு சென்று அதைப் பற்றி புத்தகங்கள் எழுதியுள்ளார் என்பது பெருமையானதொரு விஷயம். அதுவும் அவரின் பயணக்குறிப்புகள், வேடிக்கையாகவும் இருப்பது அதிசயம் தான். அந்த எழுத்தாளர் காந்தியடிகளைப் பற்றிய முதல் ஆவணப்படம் எடுத்த தமிழர் ஏ.கே.செட்டியார் (அ.கருப்பன் செட்டியார்). அவரின் இந்தியப் பயணங்கள் என்ற 1954ஆம் அண்டு வந்த கட்டுரை தொகுப்பை, சந்தியா பதிப்பகத்தின் 2014 மறுபதிப்பில், சமீபத்தில் படித்து ரசித்தேன்.

முதல் பக்கத்திலேயே ஆசிரியர் இந்தியர்கள் பலரும் அவரவரின் ஊரையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையுமே முழுமையாக பார்த்திராதவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லுகிறார். மேலும் தமிழர் பலர், ரங்கூன் வீதிகள் எவ்வளவு அழகு என்ற அங்கலாய்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு தமிழ்நாட்டின் பேரழகு தெரியாது, தெரிந்து கொள்ளவும் விருப்பமிராது என்று தொடர்கிறார். வருடந்தோறும் பலர் திருப்பதிக்கு செல்கிறார்கள், ஆனால் அவர்களில் நூற்றுக்கு ஒருவர் கூட அருகில் இருக்கும் சந்திரகிரி என்ற சரித்திரப் பிரசித்தி பெற்ற இடத்திற்குச் செல்வதில்லை என்று அங்கலாய்கிறார். இன்றும் இவை எவ்வளவு பொருத்தம் பாருங்கள்.

புத்தகத்தில் ஆசிரியரின் நக்கல் நையாண்டிக்கு பஞ்சமேயில்லை. இந்தோ-சீனா ரயிலில் நான்காவது வகுப்பில் கால்நடைப் பிராணிகளையும் ஏற்றிச் செல்வார்கள் – “காக்கை குருவி எங்கள் ஜாதி” என்ற கொள்கையை நடைமுறையில் கடைப்பிடிப்பவர்கள் என்கிறார். “தென்னாப்பிரிக்காவில் வெள்ளையரல்லாதவருக்கு எல்லா வகுப்புக்களுக்கும் பிரத்தியேகமான பெட்டிகள் ஒதுக்கப் பட்டிருக்கும் – அந்த தனி கௌரவத்திற்கு அதிகக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை” என்று படிக்கும் போது முதலில் சிரித்தாலும், அர்த்தம் முழுவதும் புரிந்தப் பின் கண்கள் குளமாயின.

யுத்த காலத்திலும் (இரண்டாவது உலகப் போர்) செட்டியாரின் பயணங்கள் நிற்கவில்லை, அப்போதும் பயணம் செய்ய அவரின் காரணத்தைப் பாருங்கள் !– “பிரயாணத்தில் எவ்வளவுக்கெவ்வளவு சிரமம் உண்டாகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதில் இன்பம் இருக்கிறது”. ஏ.கே.சி.அவர்களின் நாடி நரம்பில் பயணம் மட்டுமே ஓடுகிறதுப் போல.

என் பள்ளி பருவத்தில், விடுமுறைக்கு என் அம்மா, என்னை ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பாட்டி வீட்டுற்கு கூட்டிச் செல்வார், அது 1979 அல்லது 80களாக இருக்கும், மலைக்கோட்டை ரயிலில், மேல் படுக்கையில் இருந்து நான் கிழே விழுந்துவிடுவேன் என்று ரயில் பெட்டியின் தரையில் படுக்கை விரித்துப் படுக்கவைக்கப்படுவேன் – எனக்கு பயமாக இருக்கும், ஆனால் வாய் திறக்க முடியாது, அழுதால் அடிவிழும். இதுப் போன்றொரு அனுபவத்தை ஆசிரியர் இப்படி வர்ணிக்கிறார் – “கீழே உள்ள ‘சுகந்த வாசனை’ போதாதென்று, மூட்டைப்பூச்சி, கொசு, கரப்பான் முதலியவையும் அந்தப் பிராயாணிகளோடு உறவு கொண்டுவிடும்”.

கல்கத்தா நகரத்தை ஆறே பக்கங்களில் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் ஆசிரியர். அடுத்து முசபர்பூர் செல்கிறார், அங்கே அவர் பார்த்ததைப் பற்றி எப்படி கிண்டலடிக்கிறார் பாருங்கள் – “வடநாட்டில் சிலர் பெட்டி படுக்கைகளுடன் மட்டும் பிரயாணம் செய்வதில்லை. ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்குக் குடிப் போனால் எவ்வளவு சாமான்களுடன் பிரயாணம் செய்வார்களோ, அவ்வளவு வகை வகையான சாமான்களுடன் பிரயாணம் செய்வார்கள்”.

அடுத்தது காசி நகரத்தை பற்றி எழுதுகிறார், வேறு எவரும் பார்த்திராத கோணத்தில் – “காசியில் நல்ல இஞ்சி முறப்பா கிடைக்கும். காசி நகரம் பூரண நாகரீகம் அடைந்துவிட்டது என்பதற்கு அங்குள்ள சிற்றுண்டிச்சாலையே உதாரணம்”. காசியில் பக்தர்கள் எப்படி, தங்களுக்கு எது மிக அதிகமாகப் பிடிக்கிறதோ அவற்றை விட்டுவிடுவதாக ப்ரதிக்ஞை செய்து கடவுளை ஏமாற்றுகிறார்களோ? என்கிறார்.

கான்பூரில் நேருவைப் படம்பிடிக்கும் போது அவரை போஸ் (pose) கொடுக்கச் சொன்னப் போது நேரு கோபமாக இப்படி கூறினாராம் “நீங்கள் படம் பிடிப்பதற்காக நான் நூல் நூற்க முடியாது. நான் நூற்கும்போது வேண்டுமானால் நீங்கள் படம் பிடிக்கலாம்”, ஊடகங்களுக்காகவே வாழும் தற்போதைய அரசியல்வாதிகள் கற்க வேண்டிய பாடமிது.

தனது அரசியல் கருத்துக்களையும் கூட சொல்கிறார் ஏ.கே.சி. உதாரணம் – “டில்லியைப் பொறுத்தவரை ஓர் இடத்திற்கும் மற்றொரு இடத்திற்கும் தொலைவாக இருக்கும், அதிக தூரம் போவானேன், அந்தக் காலத்தில் புது டில்லிக்கும் தேசீயத்திற்கும் எவ்வளவு தொலைவிருந்தது?”.

அடுத்து, (தற்போது ராஜஸ்தானில் இருக்கும்) ஜயப்பூர் நகரத்தின் அழகையும், ஆமேர் கோட்டையைப் பற்றியும் எழுதுகிறார் – அரண்மனையில் இருக்கும் கண்ணாடி மண்டபம், பளிங்குக் கல்லில் செய்த அழகு, காளிதேவியின் திருக்கோயில் என்று தொடர்கிறார். ஜயப்பூர் மயில்களையும் (பறவைகளைத் தான் சொல்கிறார், மங்கையர் என்று தவறாக எண்ண வேண்டாம்), அங்கு அவர் சென்றிருந்த சமயத்தில் நடந்த ‘சர்க்கஸ்’ (Circus) பற்றியும் குறிப்பிடுகிறார்.

அடுத்து, பம்பாய் செல்கிறார்,  அங்கேயுள்ள விக்டோரியா என்றழைக்கப்படும் குதிரை வண்டியில் ஆரம்பித்து, அடுக்குமாடிக் கட்டிடங்கள், பம்பாயில் கிடைக்கும் பல நாட்டு உணவு வகைகள், திரைப்படக் காட்சிச்சாலைகள், என்று பயணப்படுகிறார். தமிழர்களுக்குத் தாய்நாட்டில் வேறுபாடு, குறிப்பாக பம்பாயில் கிடையாது என்று பெருமைக் கொள்கிறார். அப்படியிருந்த பம்பாய், மும்பாயாக மாறி இப்போது எப்படியிருக்கிறது என்று நினைத்தால், நம் அரசியல்வாதிகள் எப்படி நாட்டை அழித்திருக்கிறார்கள் என்று கவலைப்பட வைக்கிறது. எலிபெண்டா குகைகள், 1534ஆம் போர்த்துக்கீசியர் வருகைக்கு முன் கரபுரி என்று அழைக்கப்பட்டது என்று தொடங்கி, அங்கே இருக்கும் மகேசுவர மூர்த்தி 20 அடி உயரமிருக்கும் என்று விளக்குகிறார். அங்கேயிருந்து, ராஜ்கோட், அது இருக்கும் சௌராஷ்டிராவின் சோமநாதர் ஆலயம் (கஜனி முகமது பல முறை படையெடுத்தான்) என்று செல்கிறார் ஏ.கே.சி.

பூரி ஜகந்நாதரை தரிசிக்க அங்கேயுள்ள விடுதியில் தங்கியப் போது விடுதி முதலாளி, நீங்கள் சுவாமி தரிசனத்திற்காக வந்திருந்தால் இடமில்லை எனவும், சமுத்திரக் கரையிலுள்ள அந்த விடுதியில் ‘சுகவாசம்’ செய்யவந்திருந்தால் மட்டுமே இடம் என்றாராம்!

பீஜப்பூர் செல்லும் ஆசிரியர், 1479ஆம் ஆண்டு பீதார் சுல்தானிடம் இருந்து யூசப் என்ற அரசன், எப்படி அவனின் ராஜ்யத்தை ஸ்தாபித்தான் என்று தொடங்கி, ‘கோல் கும்பஸ்’ என்ற பெரிய ‘டோம்’ (Dome) பற்றியும் (உயரம் 1198.5 அடி) விவரிக்கிறார்.

அடுத்த கட்டுரையில் ஏ.கே.சி அவர்கள், தனக்கு தெரிந்த அறைகுறை ஜப்பானிய மொழியில் அந்நாட்டினர் சிலருக்கு கோவா நகரத்தில் சுற்றிக்காட்டுகிறார். கோவானியார்களுக்கு சோறில்லாவிட்டாலும் பாதகமில்லை, ஆனால் மீன் மட்டும் இருக்க வேண்டும் என்பதையும் சொல்லிச் செல்கிறார்.

தமிழ்நாட்டைப் பற்றி எழுதும் ஆசிரியர் செல்வது செஞ்சி, திருவண்ணாமலை, புதுச்சேரி, தரங்கம்பாடி, குமரி முனை. இங்கேயெல்லாம் நாம் இப்போது போனாலும், நமக்கு உதவும் விஷயங்களை சொல்கிறார். தரங்கம்பாடியில் பட்டணத்தாரின் கல்யாண முறையையும் எழுதுகிறார் ஏ.கே.சி., கடைசியாக குமரிமுனை பற்றி எழுதும் போது, அப்போது அது திருவாங்கூர் ஆட்சியில் இருந்தது, அவர்களின் நாணயம் சக்கரம், ஒரு ரூபாய்க்கு இருபத்தெட்டு சக்கரம், ஒரு சக்கரத்திற்கு காப்பி சாப்பிடலாம் என படிக்கும் போது, நமக்கு ஆச்சர்யம் ஏற்படுகிறது.

தொண்ணூறு பக்கங்களில் இந்தியாவை சுற்றிக்காட்டிவிடுகிறார் ஏ.கே.செட்டியார். அருமையான புத்தகம். அவசியம் பயணியுங்கள்.

Categorized in:

Tagged in:

, ,