விஷ்ணு விஷால் (Vishnu Vishal) மற்றும் ஶ்ரீதிவ்யா (SriDivya) நடித்துள்ளப் படம் “ஜீவா“. வெண்ணிலா கபடி குழுவை இயக்கிய “சுசீந்திரன்” தான் ஜீவாவின் இயக்குனர். கிரிக்கெட்டைப் பற்றிய படம் என்பதாலும், ரேடியோ விளம்பரங்களில் வரும் “எல்லா நாட்டிலும் விளையாடி தான் தோர்ப்பார்கள், நம் நாட்டில் தான் விளையாடாமலே தோர்க்கிறார்கள்” துணுக்கு என்னை இந்தப்படத்தை நேற்றுப் பார்க்க வைத்தது.
ஶ்ரீதிவ்யா கவர்ச்சியை பயன்படுத்தாமல் இருந்தாலும் அழகாகவே வருகிறார், நடிப்பில் நம்மை கவர்கிறார்; பள்ளி மாணவியாக எளிதாகப் பொருந்துகிறார். விஷ்ணு விஷால் ரொம்பவே மெனக்கேட்டுள்ளார், ஆனாலும் முண்டாசுப்பட்டியில் நான் அவரின் நடிப்பை ரசித்தளவு இதில் முடியவில்லை. ஒரிரு வசனங்கள் மட்டுமே பேசும் சூரி, இருக்கிறாரா என்று சந்தேகம் தான் வருகிறது.
ஒரு காதல் கதை, அதில் கிரிக்கெட்டில் திறமையுள்ள ஒரு வாலிபனின் வாய்ப்புக்கான தவிப்பை சேர்த்துள்ளார் இயக்குனர். என்னுடன் வந்த நண்பர்களுக்கு படம் பிடித்திருந்தது. நான் என்னமோ சாதாரணப் படமாக தான் உணர்ந்தேன். காதல் வயப்படும் நிகழ்ச்சியாகட்டும், அப்பாக்கள் சண்டையிடுவதாகட்டும், ஆலயப் பாதிரியார் புத்திச்சொல்லும் காட்சியாகட்டும், இன்னொரு பெண் நாயகனிடம் காதலைச் சொல்வதாகட்டும் எல்லாமே எதிர்ப்பார்த்தப்படியே போகிறது.
இந்தியாவில்/தமிழ் நாட்டில் திறமையிருந்தும் வாய்ப்பு தராமல் இருப்பதற்கு, இன்றைக்கு முக்கிய காரணம் அரசியலும், லஞ்சமும், உறவினர்களுக்கு கொடுப்பதும் (Nepotism) தான். அதைவிடுத்து சுசீந்திரன் என்ன காரணத்திற்காகவோ ஒரு ஐம்பது ஆண்டுகள் பின்னுக்கு சென்றுப் பார்ப்பன ஆதிக்கத்தைக் காட்டுகிறார். கிரிக்கெட் போட்டிகளும் அதை நடத்தும் அமைப்போ ஒன்றும் சுத்தமில்லை, ஆனால் அவைக்கெட்டு இருக்க ஜாதி முக்கிய காரணமாக இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. வாய்ப்பையிழந்த நாயகனின் நண்பன் தற்கொலை செய்துக்கொள்வதாக வரும் காட்சியில் வருத்தம் வருகிறது, அதைவிட இப்படி ஒரு குறுஞ்செய்தி இயக்குனருக்கு உடனே அனுப்பத் தொன்றுகிறது – ஐயா இதைத் தான் பலப்பல சினிமாவில் முன்பே பார்த்துவிட்டோமே, மாட்டிக் கொண்ட கதையை நகர்த்த வேறு ஏதாவது சொல்லுயிருக்கலாமே?.
இந்தப்படத்திலும் ஹீரோ (அதுவும் ஒரு மாணவன்) காதல் தோல்வியில் குடித்துவிட்டு பாடும் ஒரு பாட்டு வருகிறது. சதுரங்க வேட்டை நடராஜ் ஆடியுள்ளார். ஏன் ஏன்!!!
இந்த குடியாட்டம் (pathos) பாடல்களை தமிழக அரசின் TASMAC sponsor செய்கிறதோ என்ன கண்றாவியோ யார் கண்டார்?
2013 சென்னை உலக திரைப்படவிழாவில் இடம்பெற்ற ஃபாஸ்ட் கேல்ஸ் (Fast Girls) படத்தை இயக்குனர் பார்த்திருந்தால், தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு நம்பிக்கைத் தரும் படமொன்று கிடைத்திருக்கும்.