இன்று ஐ-நாக்ஸ் திரையரங்கில் “முண்டாசுப்பட்டி” படம் பார்த்தேன். படத்தைப் பற்றி எதுவுமே தெரியாமல் படம் பார்க்க அமர்ந்தேன். படத்தை முழுவதும் ரசித்தேன்.

பிரபல நடிகர்கள் எவரும் இல்லாமல், பெரிய பட்ஜெட் எதுவும் இல்லாமல், புதுமையான கதை என்று எதுவும் இல்லாமல் ஒரு படத்தை வெற்றி செய்ய முடியும் என்று செய்துகாட்டிள்ளார் இயக்குனர். இதுவும் ஒரு எண்பதுகளில் வரும் படம் என்று காட்டும் போது, இப்போவே கண்ணை கட்டுதே என்று இருந்தது. ஆனால் அதைத் தாண்டி ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒரு மூன்று மணி நேரம் கவலைகளை மறந்து சிரித்தேன்.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் வந்த கதையை முழுநீள நகைச்சுவைப் படமாக எடுத்துள்ளார்  இயக்குனர் ராம்குமார்.  விஷ்ணு (Vishnu Vishal), நந்திதா (Nandita) மற்றும் காளி வெங்கட் (Kaali Venkat) அவர்களின் பாத்திரங்களை அளவோடு செய்துள்ளனர். இவர்களையும் கடந்து அசத்தியுள்ளவர் முணீஷ்காந்த் ராமதாஸ் (Munishkanth Ramdoss), தனது உடல்மொழியிலேயே மனிதர் பின்னியெடுக்கிறார், பாராட்டுக்கள்.

கோயில் சிலைகளை வெள்ளைகாரனுக்கு திருடிக் கொடுக்கும் வில்லனாக பழைய ஜமீன் பாத்திரத்தில் ஆனந்த் ராஜை பார்த்தவுடன், நல்லாதானே போயிட்டு இருந்தது என்று நினைத்தேன். நல்ல வேளை பெரிய சண்டை, வீண் பேச்சு என்று இல்லாமல்  வில்லனும் அவரின் அடியாட்களும் சுருக்கமாக வந்துப் போகிறார்கள். பூனை சூப்பு காட்சி அபாரம். தமிழக கிராமங்களில் இருந்த மூடநம்பிக்கைகளை ரசிக்கும்படி காட்டியுள்ளார் ராம். வின்கல் சாமியாவது நல்ல கற்பனை. புகைப்பட கடை நடத்தும் கோபியாக வரும் நாயகனின் பாத்திரம் எண்பதுகளின் பொருளாதாரத்தை அழகாக காட்டுகிறது. ராசா மகாராசா பாடல் நம்மை முணு முணுக்கவைக்கிறது.

மொத்ததில் படம் பார்க்கலாம், சிரிக்கலாம்.

Mundasupatti-film

Categorized in:

Tagged in: