தமிழ் மையம் என்று ஒரு தன்னார்வ நிறுவனமும் தமிழக அரசின் சுற்றுலா மற்றும் கலை வளர்ச்சித் துறை (ஆம்! இப்படி ஒரு துறை தமிழக அரசிலுள்ளது என்று, நாம் இந்த நிகழ்ச்சிகள் மூலம் தான் தெரிந்துக் கொள்ளலாம்) போன வருடம் முதல் ஆண்டுதோரும் நடத்தும் திருவிழா சென்னை சங்கமம். அதற்கு அழகான தலைப்புக் கொடுத்துள்ளார்கள் – திருவிழா உங்கள் தெருவிழா.

சென்னை சங்கமம் சென்னையிலுள்ள பல்வேறுப் பூங்காக்களில் பொங்கல் நாட்களையொட்டி நடைப்பெறுகிறது. அழிந்து வரும் கிராமிய கலைகளான – நடனம், தெருக்கூத்து, நாடகம், களரி, இசை, பாட்டு இவைக்களுடன் இந்த ஆண்டு கிராமிய/மாவட்ட உணவு வகைக்களையும் நகரமக்களுக்குக் கொண்டு வரும் நல்ல முயற்சியாக இது எனக்குத் தோன்றுகிறது.

நேரில் காண மைலாப்பூரிலுள்ள நாகஸ்வராவ் பூங்காவில் நடந்த நிகழ்ச்சிகளை இன்றுப் பார்க்கப் போனேன். அரசு நிகழ்ச்சியென்பதால் அமைப்பு சுமாராக இருக்கும், கூட்டமே இருக்காது என்று எதிர்ப்பார்த்த எனக்கு இரண்டிலும் மகிழ்ச்சியான ஏமாற்றம். நிகழ்ச்சி மேடை மற்றும் பூங்கா சுற்றிடம் (மக்கள் அமர வசதியாக ஜமாக்களாங்கள் கூட போட்டு வைக்கப்பட்டிருந்தது) அழகாக அமைக்கப்பட்டு நல்ல முறையிலிருந்தது.

முட்டி மொதும் கூட்டமில்லையென்றாலும் ஒரு நூறு பேருக்கு மேல் வந்திருந்தார்கள், நிகழ்ச்சிகளுக்கு அவர்களிடம் நல்ல வரவேற்பு. ஒரு பூங்காவிலிருந்து இன்னொரு பூங்காவில் நடக்கும் நிகழ்ச்சிக்குப் போக பஸ் வசதி கூடச் செய்யப்பட்டது மகிழ்ச்சி. பாராட்டுக்கள்!

Categorized in:

Tagged in: