தற்போது நடந்து கொண்டிருப்பது தமிழகச் சட்டமன்றத்திற்கான தேர்தலா, அல்லது மாநகராட்சிகளுக்கான மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலா?
“பாலம் கட்டுகிறேன். குடிநீர் சீராக வர ஏற்பாடு செய்கிறேன். போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் மாணவர்களுக்குக் கட்டடம் கட்டித் தருகிறேன். சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் இருக்க வகை செய்கிறேன். போக்குவரத்து நெரிசலைச் சரி செய்கிறேன்.”
இவையெல்லாம் நடக்கும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், குறிப்பாகச் சென்னையின் முக்கியப் பகுதிகளில் நிற்கும் நான்கு கட்சிகளின் வேட்பாளரும் சொல்லும் வாக்குறுதிகள். இவற்றைக் கேட்டு எனக்கு வந்துள்ள ஐயம் இது மாமன்றத் தேர்தலா அல்லது சட்டமன்றத் தேர்தலா என்பதுதான்.
ஏனென்றால், மாநிலத்திற்குச் சட்டங்களை இயற்றவும் பெரிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவும் வேண்டியவர் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ); ஆனால் உங்கள் தெருக் குப்பை, சாக்கடை, மின்விளக்கு போன்ற அன்றாடச் சிக்கல்களைத் தீர்க்க வேண்டியவர் மாமன்ற உறுப்பினர் (கவுன்சிலர்).
சுருக்கமாகச் சொன்னால், தெருக்கள் குண்டுங்குழியுமாக இருந்தால் அதற்குச் சட்டமன்ற உறுப்பினரைத் தேடுவது, தலைவலிக்குக் கால் வலி மருந்து போடுவது போலத்தான்!
நீங்களும் உங்கள் பகுதி வேட்பாளரிடம், “வேட்பாளரே.. இது எம்.எல்.ஏ.த் தேர்தல் .. கவுன்சிலர் தேர்தல் இல்ல” என்று மென்மையாக நினைவுபடுத்தினால் கேட்பாரா அல்லது நமக்கு ஏன் வம்பு எனப் பேசாமல் ஓட்டுப் போட்டுவிட்டு வருவது மேலா?
வாக்களிப்பது நமது உரிமை, அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.
குறிப்பு: இது தேர்தல் பற்றிய பதிவு, ஆனால் அரசியல் கட்சி சார்ந்த பதிவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நன்றி.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

