இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் குறைந்த அளவிலேயே நூல்களை வாங்கினேன். வாங்க விரும்பிய பல நூல்களின் அட்டையைப் படமெடுத்து வந்தேன்; ஏற்கனவே வாங்கியிருக்கும் நூல்களில் சிலவற்றையாவது படித்துவிட்டு அடுத்ததை வாங்கலாம் என்கிற எண்ணம். அந்தத் தீர்மானத்திற்கு இணங்க நான் படித்த நூல் இது.
சாகித்திய அகாதமி விருது பெற்ற (மறைந்த) எழுத்தாளர் திரு. சா. கந்தசாமி அவர்களின் ‘புது தில்லி’ நாவல். நான் படித்த புனைவுகளில் (அவை குறைவே எனினும்) இது ஒரு வித்தியாசமான முயற்சி. 2019-ஆம் ஆண்டு இந்நூலை டிஸ்கவர் புக் பேலஸ் (Discover Book Palace) வெளியிட்டுள்ளது.
‘புது தில்லி’ – இந்தத் தலைப்பே என்னை ஈர்த்தது. திரு. அசோகமித்தரன் சுதந்திரத்திற்கு முந்தைய பம்பாய் நகரை விவரித்திருப்பாரே, அதுபோல தில்லியைப் பற்றியதாக இது இருக்கும் என எண்ணினேன். புத்தகத்தின் பின் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு: “புது தில்லியில் வாழும் ஒரு தமிழ்க் குடும்பத்தின் கதைதான் புது தில்லி என்ற நாவல். குடும்பமென்றால் சமூக, கலாசார, உளவியல் ரீதியில் பிரச்சினைகள் இருக்கின்றன. அது பலருக்குத் தெரிவதில்லை; சிலருக்குத் தெரிகிறது.” நான் படித்த வரையில் இந்தக் குறிப்பு தவறாகவே எனக்குத் தோன்றுகிறது.

புனைவின் நாயகன் ராஜராஜன் என்பவரின் மன ஓட்டங்களையும், நண்பர்களுடன் அவர் நிகழ்த்தும் உரையாடல்களையும் சொல்லிச் செல்லும் முயற்சியே இந்நூல். முதலில் இது எத்தகைய கதை என்பதே பிடிபடவில்லை. நூலின் நடுப்பகுதிக்கு வந்த நிலையில் புரிந்தபோது ஆச்சரியமாக இருந்தது; இப்படியும் ஒரு நூலைச் சுவையாக எழுத முடியுமா என்று! இதுவே இந்நூலின் சிறப்பு.
புனைவுப் படைப்பிற்கு இலக்கணமாகச் சொல்லப்படுவது ‘ப்ரைடாக் கூம்பகம்’ (Freytag’s Pyramid) என்னும் கட்டமைப்பு. அறிமுகம், மோதல் (பிரச்சினை), உச்சம், தளர்வு (தீர்வு), மற்றும் முடிவு ஆகிய ஐந்து கூறுகளை இது கொண்டது. ‘புது தில்லி’ நாவலில் இந்த ஐந்தில் எதுவுமே இல்லை. ஏனெனில், இதில் ‘கதை’ என்று ஒன்று கிடையாது. எனவே, விறுவிறுப்பான கதை வேண்டும் என்பவர்களுக்கு இந்நாவல் பிடிக்காது.
நிற்க.
நூலின் நாயகனிடம் திரும்புவோம். ராஜராஜனுக்கு மயிலாடுதுறைக்கு அருகே ஏதோ ஒரு ஊர். சென்னைக்கு ஓரிரு நாட்களுக்கு வந்துள்ளார். அவர் அண்ணா சாலையில் இருக்கும் காஸ்மோபாலிடன் கிளப்பில் (Cosmopolitan Club) தங்கியுள்ளார். அந்தச் சமயத்தில், அன்னை இந்திரா காந்தி தில்லியில் அவரின் மெய்க்காவலர்களால் சுட்டுக்கொல்லப்படும் செய்தி வருகிறது. அடுத்த சில நாட்கள் ராஜனோடு பேசும் அனைவரும் இந்தத் துயர நிகழ்வை நினைவுபடுத்தியே பேசுகிறார்கள்.
கிளப்பின் மற்ற உறுப்பினர்களுக்கு ராஜனை நன்றாகத் தெரிந்திருக்கிறது. கிளப்பின் வசதிகள் பற்றியும் அவர் நன்கு அறிந்துள்ளார்; எனவே அவர் அங்கே உறுப்பினர் என்று நாம் ஊகித்துக்கொள்ளலாம். அவர் பேசும் அனைவரும் அவரை மரியாதையுடனேயே நடத்துவதாலும், பணத்தைப் பற்றிக் கவலைப்படாதவராக இருப்பதாலும், ‘சுக ஜீவனம்’ என்று அவரைச் சிவமணி அறிமுகம் செய்வதாலும் ராஜன் வசதியானவர் எனப் புரிந்துகொள்ளலாம்.
ராஜன் அறிவாளி என்று அவரே மறைமுகமாகவும் நேரடியாகவும் பலமுறை சொல்லிக்கொள்கிறார். மனைவியை இழந்தவர்; பிள்ளைகள் இருக்கிறார்களா எனத் தெரியாது; அவரைப் பற்றி வேறு எதுவும் சொல்லப்படவில்லை. ஏன், எதற்காகச் சென்னைக்கு வந்துள்ளார் என்பதும் மர்மமே. இதுவே புனைவிற்கு ஒருவித வசீகரத்தைக் கொடுக்கிறது.
நூலில் பல இடங்களில் ‘இது நன்றாக /நல்லா இருக்கிறது’ என்று ராஜன் சொல்வதாக வருவது நன்றாக இருக்கிறது.
நாவலில் ராஜன், தியாகராய நகரில் (பாண்டி பஜார்) இருப்பதாகச் சொல்லப்படும் ‘நன்முத்து பதிப்பகத்தின்’ உரிமையாளர் சிவமணி முதலியாரோடு பேசுகிறார். சிவமணி, தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் வைத்தீஸ்வரனை அறிமுகம் செய்கிறார். வைத்தீஸ்வரனின் கதை சுருக்கமாகச் சொல்லப்படுகிறது. ராஜன் பேசும்போதெல்லாம் அவரின் மெய் நண்பர் ஐராவதம் சொன்னதை மேற்கோள் காட்டியே பேசுகிறார். அதிகம் பேசுவதில்லை, பேசிப் பயனில்லை என்று சொல்லும் ராஜன், ஐராவதத்துடன் நடந்த தனது உரையாடல்களை அதிகமாகவே பகிர்கிறார்.
இந்த மூவரைத் தாண்டி கணேசன், முருகேசன், ரகுராம் ரெட்டி, ரங்கராஜன், ராஜவேலு, மகேந்திரன் எனப் பலரும் வருகிறார்கள். வருபவர்கள் ராஜனிடம் தங்கள் வாழ்க்கை நிகழ்வுகளை அல்லது தங்களுக்குத் தெரிந்தவர்களின் கதையைச் சுருக்கமாகச் சொல்லிச் செல்கிறார்கள். அறிவியல், வரலாறு, தத்துவம், சமூகம் எனப் பல தகவல்களைப் பகிர்கிறார்கள். ஓரிரு வரிகளே பேசினாலும் அந்தந்தக் கதாபாத்திரங்களின் படிமத்தை நம் மனக்கண்ணில் மிக எளிதாக உருவாக்கிவிடுகிறார் சா.கா. இது அவரின் எழுத்தாளுமையும் வாசிப்பு பழக்கமும் நமக்கு வழங்கும் பரிசு. இதற்காகவே படிக்கப்பட வேண்டிய புனைவு ‘புது தில்லி’.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

