ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு நான் கச்சேரிக்குச் சென்றுவிட்டேன்.
பொதுவாகச் சபாவிற்குச் சென்று கர்நாடக இசைக் கச்சேரிகளில் உட்காரும் பொறுமையோ, இசை அறிவோ எனக்குத் துளியும் கிடையாது. ஆனால், பெருந்தொற்றுக் காலத்தில் (2020ஆம் ஆண்டு) திரு. சஞ்சய் சுப்ரமணியன் அவர்கள் “தமிழும் நானும்” என்கிற இணைய வழிக் கச்சேரியை நடத்தினார். என் தாயாருக்காக அதற்கு டிக்கெட் வாங்கினேன். அவரோடு நானும் அமர்ந்து கேட்டேன். முழுவதும் தமிழ்ப் பாடல்களைத் திரு. சஞ்சய் பாடிய விதத்தில் என்னையே நான் மறந்துவிட்டேன்.
பெருந்தொற்றுக்குப் பிறகு, அவர் இதே நிகழ்ச்சியை ஆண்டுதோறும் சென்னை மைலாப்பூர் மியூசிக் அகாடமியில் டிசம்பர் மாதத்தில் நடத்துகிறார். ஒவ்வொரு ஆண்டும் நானும் டிக்கெட் வாங்குவேன்; ஆனால் நிகழ்ச்சியன்று ஏதாவது தவிர்க்க முடியாத அழைப்பு வந்துவிடும். நானும் எனது சீட்டை வேறு யாருக்காவது கொடுத்துவிடுவேன். எனது நல்ல காலம், இந்த ஆண்டு நேற்று (7 டிசம்பர் 2025 அன்று) அப்படி எதுவும் வராமல் நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டேன். எனக்கே அது ஆச்சரியமாக இருந்தது.
சரியாக மாலை 6:30 மணிக்குப் பாடத் தொடங்கிவிட்டிருந்தார் திரு. சஞ்சய். எதிரில் உள்ள தூய எப்பாஸ் பெண்கள் பள்ளி (St. Ebbas) வளாகத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு வர எனக்குப் பத்து நிமிடத் தாமதமானது. அரங்கம் நிரம்பி, மற்ற ரசிகர்கள் எல்லோரும் ஏற்கெனவே அவரவர் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். முதல் வரிசையில் வலது புறத்தில் இருந்த இடத்தில் டிக்கெட் வாங்கியிருந்ததால், யாருக்கும் தொந்தரவு இல்லாமல் என்னால் அமர முடிந்தது. அதற்குப் பிறகு கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் (9:15 மணிவரை) என்னைக் கட்டிப் போட்டுவிட்டார் சஞ்சய் சுப்ரமணியன்.
நிகழ்ச்சி தொடங்கிய போது ஒன்றிரண்டு படங்களை எனது செல்பேசியில் எடுத்தேன்; அவற்றையே இங்கே பார்க்கிறீர்கள். அதற்குப் பிறகு நிகழ்ச்சி முடியும் வரை நான் என் செல்பேசியை எதற்காகவும் எடுக்கவில்லை. வாட்ஸ்-ஆப் பார்க்கவில்லை; அழைப்புகள் எதுவும் வரவில்லை; கூகுளில் எதுவும் தேடவில்லை. ஒன்றிரண்டு முறை எடுக்கலாமா என்று தோன்றியபோதும், அடுத்த நொடியே அந்த எண்ணம் கடந்துவிட்டது. வாராவாரம் நான் திரைப்படங்களைப் பார்க்கப் போகும்போதும் முடிந்தவரை செல்பேசியைப் பார்ப்பதில்லை. ஆனால், தமிழ் சினிமாவின் நடுவில் வரும் இடைவெளியில் செல்பேசியைப் பார்த்து அழைக்க வேண்டியிருந்தால் அல்லது பதில் போடவேண்டியிருந்தால் செய்துவிடுவேன். இன்று “தமிழும் நானும்” கச்சேரியில் நான் நடுவில் எடுக்கவே இல்லை. இதுவே எனக்குத் தியானமாக இருந்தது – மனதில் யோசனைகள், சிந்தனைகள் வந்து சென்றன; சிலவற்றை மனதிலேயே குறிப்பெடுத்துக் கொண்டேன். இதுவும் புதிதாக இருந்தது.
சுமார் ஆறு தமிழ்ப் பாடல்களைப் பாடினார் சஞ்சய் சுப்ரமணியன். எல்லாமே அருமை. அதில், திருவிளையாடல் திரைப்படத்தில் வந்து புகழ்பெற்ற இறையனார் பாடலான, “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பீ காமம் செப்பாது கண்டது மொழிமோ…” பாடலும் ஒன்று. இவரின் குரலில் இந்தத் தமிழ்ப் பாடலைக் கேட்டதும் ஓர் அனுபவமாக இருந்தது.
இன்னொரு பாடல், “ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்பார்க்கு ஞானந்தான் ஏதுக்கடி – குதம்பாய் ஞானந்தான் ஏதுக்கடி?”. இதைப் பற்றிக் கூகுள் ஜெமினி ஏ.ஐ. பின்வருமாறு சொன்னது: “குதம்பைச் சித்தர் பாடல்கள் பெரும்பாலும் ‘குதம்பாய்’ என்ற விளிச்சொல்லுடன் முடியும். குதம்பை என்பது பெண்கள் காதில் அணியும் ஒரு வகை அணிகலன். தன் காதிலுள்ள குதம்பையை நோக்கிப் பாடுவது போல, மனதிற்கு உபதேசம் செய்வதாக இப்பாடல்கள் அமைந்திருக்கும்.”
மற்றொரு பாடலாக, “துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?” பாடலைப் பாடினார். அதோடு அவரின் சிறப்பாக அருணாசல கவிராயர் இயற்றிய “ராமசாமி தூதன் நானடா – அடடா ராவணா நானடா என் பேர் அனுமானடா” பாடலைப் பாடினார்.


இந்த நிகழ்ச்சியைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது எனது பாக்கியம். நன்றி.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

