நவீன உலகில் எந்த நகரமானாலும் அங்கே இருக்கும் கட்டிடங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக, கண்ணாடிச் சுவர்களாலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எந்தக் கட்டிடத்திலும் ஒரு கவித்துவமோ, ஆத்மாவோ இருப்பதில்லை.
இன்றைக்குக் கட்டப்படும் ஒவ்வொரு கட்டிடமும் அதன் நோக்கத்தை நிறைவேற்றுகிறது, ஆனால் அவை அசிங்கங்கள் என்பது தான் உண்மை. இதற்குக் காரணம் லஞ்சம், பொறுப்பில்லாத்தனம் என்று எளிதாகப் பதிலளிப்பது தவறாக இருக்கும்.
ஒரு நூறு ஆண்டுகள், இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்ட கட்டிடங்களைப் பாருங்கள், அவற்றில் ஒரு வித அமைதியும், பிரமாண்டமும் அழகும் இருந்தது. அதை வடிவமைத்தவர்கள் தாங்கள் உருவாக்கியதில் பெருமை கொண்டார்கள். இந்தியாவை எடுத்துக் கொண்டால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட நம் கோயில்களைப் பார்த்தால் புரியும். இன்றைக்கு அப்படி எதையும் நம்மால் செய்ய முடியாது. நாம் நிலவுக்கு மனிதனை அனுப்புகிறோம், ஆனால் ஒரு தஞ்சைப் பெரிய கோயிலை மீண்டும் உருவாக்கவே முடியாது. அதற்குத் தேவையான தொழில்நுட்பம் இருக்கிறது, பணம் இருக்கிறது, ஆனால் யாருக்கும் மனதில்லை என்பது தான் உண்மை என்று தோன்றுகிறது.
ஏன் நவீன உலகத்தின் படைப்புகள் குறிப்பாகக் கட்டிடங்கள் அசிங்கமாக இருக்கிறது என்பதை இந்த வீடியோவில் லண்டன் மாநகரின் தேம்ஸ் நதிக் கரையில் நடந்து கொண்டே விளக்குகிறார் வர்ணனையாளர். உதாரணமாக, நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்ட உலகின் முதல் மின்சார விளக்குகளுக்கான தூண்களையும், நவீன எல்.ஈ.டி. விளக்குகளின் தூண்களையும் ஒப்பிட்டு விளக்குகிறார். அடுத்து, ஜோசப் பசல்கெட் என்கிற பொறியாளர் 1860களில் உருவாக்கிய லண்டன் கழிவுநீர் அமைப்புகளை அறிமுகம் செய்கிறார். அப்போது உருவாக்கிய ஓர் எற்றுதல் நிலையத்திற்கு (பம்பிங் ஸ்டேஷன்) நம்மை அழைத்துச் செல்கிறார், பார்க்கவே வண்ணமயமாக அழகாக இருக்கிறது. அது கழிவுநீர் அமைப்பில் இருக்கும் ஒரு கட்டிடம் என்றால் நம்பவே முடியவில்லை, நாடாளுமன்றக் கட்டிடம் போல அருமையாக இருக்கிறது.
இதுவே அன்றைய விக்டோரியா காலத்தின் பொறியாளர்களுக்கும் இன்றைய செயலைப் பற்றி மட்டுமே கவலைப்படும் நவீன உலகத்தின் வடிவமைப்பாளர்களுக்கும் இருக்கும் வேற்றுமை என்கிறார் வர்ணனையாளர். விக்டோரியா காலத்தில் ஏகாதிபத்தியத்தை எல்லா இடங்களிலும் பறைசாற்றுவது முக்கியமாக இருந்தது என்று வைத்தாலும் அது மட்டுமே காரணமாகச் சொல்ல முடியாது என்று நினைக்கிறேன்.
நாம் அழகை ரசிக்க மறந்துவிட்டோம், நமக்கு எது அழகு என்பதே தெரியவில்லை என்பது உண்மையாக இருக்குமோ என்றே தோன்றுகிறது.
வெளிவந்த மூன்றே வாரத்தில் இந்த காணொலியை இருபது லட்சம் பார்வையாளர்களுக்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள். பதினைந்து நிமிட முழு வீடியோவை இங்கே பார்க்கவும்.
[The reference video is titled “How Did The World Get So Ugly?” made by Sheehan Quirke for The Cultural Tutor Channel]
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

