அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பெண்டகன் பதினாறு மாதங்களில் கட்டப்பட்டது. நியூயார்க் நகரின் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் பில்டிங் கூட ஒரு வருடம், நாற்பத்தைந்து நாட்களில் கட்டிமுடிக்கப்பட்டது. ஆனால் என் வீட்டின் பின்னால் வந்துகொண்டிருக்கும் புது வீடு கட்டும் பணிகள் கடந்த இரண்டரை வருடங்களுக்கும் மேலாக நடக்கிறது. இந்த வீட்டை “கட்டுகிறார்கள்” என்று சொல்லுவது சரியாக இருக்காது, “செதுக்குகிறார்கள்” என்றால் பொருத்தமாக இருக்கும்.
இது ஒரு பல மாடிகள் கொண்ட தனி வீடு. அதைக் கட்டுபவர் நிச்சயம் பணக்காரராக இருக்க வேண்டும். ஏனென்றால் பார்த்துப் பார்த்து அப்படிக் கட்டுகிறார்கள், வெளியில் இருந்து பார்த்தாலே நடக்கும் பணிகளின் அளவில் இருந்து தெரிகிறது.
என் வீட்டின் அலுவலக அறையிலிருந்து இந்தக் கட்டடத்தின் தூரம் இருபது அடிக்கும் குறைவாகவே இருக்கும். அதனால் அங்கே விழும் ஒவ்வொரு அடியின் ஒலியும், ஒவ்வொரு தட்டின் சத்தமும் என் அறையில் தெளிவாகக் கேட்கிறது. முதலில் பல மாதங்கள் இடிக்கும் சத்தம், ஒரே தூசி மேகம். பிறகு தொடர்ந்து இரண்டு வருடமாகக் கம்பிகள் அறுக்கும் சத்தம், துளைக்கும் சத்தம், பளிங்கு (என்று நினைக்கிறேன்) பாலிஷ் சத்தம், மீண்டும் துளைக்கும் சத்தம், மீண்டும் அறுக்கும் சத்தம் எனப் போகிறது.
கடந்த இரண்டரை வருடங்களாகத் தினமும் காலை 6.30க்கு ஆரம்பித்து மாலை இருளாகும் வரை இடைவிடாது வேலை நடக்கிறது. தீபாவளி, பொங்கல், புத்தாண்டு எதற்கும் பெரியதாக ஓய்வு கிடையாது. அங்கேயே தங்கியிருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் தினமும் வேலை செய்கிறார்கள். இந்தளவு அர்ப்பணிப்பைக் கொண்ட வேலையாட்கள் கிடைக்க அவர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
இப்படி இரண்டரை ஆண்டுகளாக ஒரு நாள் கூட ஒலி மாசு இல்லாத நிம்மதியான சுழல் எனக்கு இல்லை. இன்னும் ஜன்னல்கள் பொருத்தும் வேலைகள் ஆரம்பிக்கவில்லை. உள்ளக அலங்காரங்கள் தொடங்க இன்னும் சில மாதங்கள் ஆகும். அதைத் தொடர்ந்து ஒரு வருடமாவது நான் இதே மாதிரியான தூசி, சத்தத்தில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
இந்திய நகரங்களில் தனிமனித ஆரோக்கியத்தை அமைதியைக் கெடுப்பது போக்குவரத்தைவிடக் கட்டுமானங்கள் என்றே தோன்றுகிறது. கட்டுமான தொழிலில் பல லட்சம் கோடிகளும், அதிகாரமும், ஊழலும் புழங்குவதால் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு மாறுதல்கள் வர வாய்ப்பு இருப்பதாகத் தோன்றவில்லை.
இறைவா, எனக்கு இன்னும் பொறுமையைக் கொடு! அதோடு முக்கியமாக எதையும் தாங்கும் காதுகளையும் நுரையீரலையும் அருள வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
இணைக்கப்பட்டுள்ள காணொலியில் இன்றைய சத்தத்தைக் கேட்டு ரசிக்கவும்.
பின் குறிப்பு:
நான் குறிப்பிட்ட வீடு இருப்பது எங்களுக்குப் பின் தெருவில். இந்த வீடு இடிக்கத் தொடங்கும் முன்பு, அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே போல எங்கள் தெருவிலேயே எங்களின் அடுத்த வீடு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகக் கட்டப்பட்டது. அப்போது அந்தச் சத்தங்களை அனுபவித்தேன். இவற்றைத் தவிர எங்கள் தெருவில் தற்போது மூன்று தனி வீடுகள் கட்டப்பட்டுவருகிறது. இவற்றால் தெருவில் காரை கொண்டுவருவது, போவதற்கு இடைஞ்சல். இவை சில வீடுகள் தள்ளி இருப்பதால் தூசி எங்கள் வீட்டுக்கு வருகிறது, ஆனால் என் அறையில் சத்தம் அந்தளவு இல்லை.
மேற்கோள்கள்:
1. பெண்டகன் கட்டுமானம் செப்டம்பர் 11, 1941 அன்று தொடங்கி, ஜனவரி 15, 1943 அன்று முடிந்தது, மொத்தம் 16 மாதங்கள். இரண்டாம் உலகப்போரின் அவசரத்தால் வேலை இவ்வளவு வேகமாக முடிந்தது.
- எம்பயர் ஸ்டேட் பில்டிங் மார்ச் 17, 1930 அன்று தொடங்கி, மே 1, 1931 அன்று கட்டுமுடித்து, திறக்கப்பட்டது. மொத்தம் ஒரு வருடம் நாற்பத்தைந்து நாட்கள் மட்டுமே எடுத்தது இந்த பெரிய கட்டிடத்தைக் கட்ட.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

