விண்டோஸ் 11 இயங்குதளம் வெளிவந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. இருந்தும் மைக்ரோசாப்ட் தொடர்ந்து பல வசதிகளை அறிமுகம் செய்தவண்ணம் இருக்கிறார்கள். ஆனால், மைக்ரோசாப்ட் எவ்வளவு முயற்சி செய்தாலும் விண்டோஸ்ஸால் அதன் பழைய புகழை அடைய முடியவில்லை என்பது உண்மை.
இன்றும் கணினிகளில் விண்டோஸ் இயங்குதளமே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டாலும் கடந்த பத்தாண்டுகளாகவே மேக்-ஒஎஸ் இயங்குதளமே பிரபலமாகப் பேசப்படுகிறது. அதோடு செல்பேசிகளிலேயே பலரும் தங்களின் பணிகளை முடித்துவிடுகிறார்கள். குறிப்பாக இளைய தலைமுறையினர்களுக்குச் செல்பேசியே அவர்களது அலுவலகம், அதனால் ஐ-ஒஎஸ், ஆன்ட்ராய்ட் பதிப்புகளே நம் கவனத்தை ஈர்க்கிறது.
விசயத்திற்கு வருவோம்.
கடந்த நான்காண்டுகளில் விண்டோஸ் 11யில் புதிதாகப் பல வசதிகள் வந்திருந்தாலும் என்னுடைய முதல் தேர்வு தமிழ் அஞ்சல் (Tamil Anjal) விசைப்பலகை முறை என்றே சொல்வேன். அதோடு வந்திருக்கும் தமிழுக்கான குரல் வழி உள்ளீட்டு முறை, இந்த வசதி இன்றுவரை ஐ-போனில் கிடையாது, ஆன்ட்ராய்ட்டில் இருப்பதைவிட விண்டோஸ்ஸில் சிறப்பாக வேலைச் செய்கிறது. அடுத்த வசதி பாஸ்கீ (Passkey) என்கிற கடவுச்சொல் இல்லாமல் வலைத்தளங்களில் உங்கள் கணக்கில் உள்நுழையும் முறை. இது இப்போது தான் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறது, இன்னும் பிரபலம் அடையவில்லை.
இந்த வரிசையில் அடுத்து வரப் போகும் புதிய வசதிகளைப் பற்றி இன்று படித்துக் கொண்டிருந்தேன். அதில் என் கவனத்தை ஈர்த்தது இது. ஒலி பகிர்வு (Shared Audio) என்கிற இந்த புது வசதியைக் கொண்டு நம் கணினியில் வரும் ஒலிகளை ஒரே சமயத்தில் இருவர் கேட்கலாம். அதாவது, நம் விண்டோஸ் கணினியில் ஒரு யு-ட்யூப் காணொலியைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம், அதிலிருந்து வரும் ஒலியை நம் காதில் இருக்கும் புளூடூத் காதுகேளியில் (Bluetooth Earphone) மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நம் பக்கத்தில் இருக்கும் நண்பரால் கேட்க முடியாது. ஆனால் இந்த புது வசதியைக் கொண்டு அவருடைய காதுகேளியிலும் இதே ஒலியைக் கேட்கலாம். அதாவது இருவரும் அவரவர் காதுகேளியில் ஒரே வீடியோவின் ஒலியைக் கேட்கலாம்.
இந்த வசதி வேலைச் செய்யத் தேவையானது புளூடூத்திற்கு வந்துள்ள புது செந்தர முறை. இதைச் செயல்படுத்தும் புதிய புளூடூத் கருவிகள் எல்லாவற்றிலும் ஒலி பகிர்வு வசதி வேலைச் செய்யும். விண்டோஸ்ஸில் மட்டுமில்லாமல் இந்த வசதி சில ஆன்ட்ராய்ட் செல்பேசிகளில் ஏற்கனவே வரத் தொடங்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்த முறையை இன்னும் கொண்டுவரவில்லை. லினிக்ஸ் பற்றி எனக்குத் தெரியவில்லை.
இந்த ஒலி பகிர்வு வசதியைப் பற்றி தங்களின் கருத்து என்ன? உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்குமா?

பின் குறிப்பு: நான் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக விண்டோஸ்ஸைப் பயன்படுத்துகிறேன். நான் ஆப்பிள் மேக் ஒஎஸ்ஸை வெறுக்கவில்லை, பல சமயங்களில் பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் திரும்பத் திரும்ப விண்டோஸ்ஸூக்கு வந்துவிடுவேன், காரணம் பரிச்சயம். இதில் தான் என்னால் வேகமாக இயங்கமுடியும். பிரச்சனைகள் இல்லை என்று சொல்லமாட்டேன், ஆனால் விண்டோஸ்ஸில் என்ன பிரச்சனை வந்தாலும் அதைச் சரி செய்ய எனக்குத் தெரியும். இதனாலேயே நான் மேக் ஒஎஸ்ஸுக்கு செல்வதில்லை, அதோடு ஆப்பிள் மேக் கணினிகள் விண்டோஸ் கணினிகளைவிட விலை அதிகம்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.


Good to know, that’s an awesome feature connecting multiple devices :)