சில வாரங்களுக்கு முன்னர் மாலை உணவுக்கு வெளியில் எங்கே போகலாம் என்று யோசித்த போது, நண்பர் இந்த இடத்தைப் பரிந்துரைத்தார். சென்னை தி.நகர் திருமலை (பிள்ளை) சாலையில், பத்மா ஷேசாத்திரி பள்ளிக்கு எதிரில் இருக்கிறது “டீ வில்லா காபே” (Tea Villa Cafe). பெயரிலேயே டீ இருக்கிறதே, இங்கே தேநீரைத் தவிரச் சாப்பாடு கிடைக்குமா என்ற சந்தேகத்தோடு நுழைந்தேன்.
முதல் மாடியில் உணவகம். லிப்ட் இருக்கிறது. தரைத்தளத்தில் இரண்டு கார்கள் நிறுத்தும் இடம் உள்ளது, வேலே பார்க்கிங் வசதியும் உண்டு. இடம் சிறியது, மொத்தம் ஏழு அல்லது எட்டு மேஜைகள் இருக்கும், ஒவ்வொன்றிலும் நால்வர் அமரலாம்.
பெயருக்கு ஏற்றார் போலப் பல வகை டீ கிடைக்கிறது. அதோடு இந்தியா, சீனா, இத்தாலி, மெக்சிகோ, லெபனான், பிரான்ஸ், சிங்கப்பூர் போன்ற பல நாடுகளின் சுவையான உணவு வகைகளும் உள்ளன. தென் இந்திய உணவுகள் இட்லி, தோசையைத் தவிர அனைத்தும் இருப்பது போலத் தோன்றுகிறது. அதனால் உங்களுக்குப் பிடித்த உணவு வகை ஒன்று நிச்சயம் இங்கே கிடைக்கும்.
விவரமாக பார்த்தால், ஸ்டார்டர்ஸ் (Starters), பீட்சா, பாஸ்தா, சீன உணவு, வடஇந்திய உணவு, ரொட்டி வகைகள், சிச்லர் (Sizzlers), மெக்சிகன் உணவு (Mexican), டிம் சம் (Dim Sum), சாண்ட்விச் (Sandwich), பர்கர் (Burger), சூப் (Soup), சாலட் (Salad), காத்தி ரோல் (Kathi Roll), ஃபாண்ட்யூ (Fondue) என பல வகைகள் இருக்கின்றன.
பானங்கள் (Beverages) மற்றும் இனிப்புகள் (Desserts) பிரிவில் ரோஸ் மொஜிட்டோ (Rose Mojito), கச்சா ஆம் மொஜிட்டோ (Kaccha Aam Mojito), ஃப்ரெஷ் ஜூஸ்கள் (Fresh Juices), ரெட் வெல்வெட் வாஃபிள் (Red Velvet Waffle), ஓமாலி (Omali) என்கிற எகிப்திய இனிப்பு ஆகியவையும் உள்ளன.
நாங்கள் சாப்பிட்டது:
1. Quesadilla – இது மெக்சிகோ உணவு. மென்மையான டோர்டில்லா (Tortilla) ரொட்டியில் சீஸ், காய்கறிகள் நிரப்பிச் சுட்டுத் தயாரிக்கப்பட்டது.
2. Quattro Formaggi Pizza – இது இத்தாலிய பீட்சா வகை. பெயருக்கு ஏற்றார் போல நான்கு விதமான சீஸ் சேர்த்து தயாரிக்கப்பட்டது.
3.Chaat Fondue Platter – இது இந்தியச் சாட்டை பாண்ட்யூ (Fondue) கலவையாக வழங்கப்பட்டிருந்தது. பாண்ட்யூ என்பது ஐரோப்பிய (சுவிஸ்) உணவு முறை, இதில் சூடான சீஸ் அல்லது சாக்லேட்டை திரவமாக வைத்து, அதில் ரொட்டி, காய்கறி போன்றவற்றை மூழ்கடித்துச் சாப்பிடுவார்கள். இதே முறையில் இங்கே வட இந்திய தகி பூரியைக் கொடுத்திருந்தார்கள்.
4. பழச்சாறுகள் – ஒவ்வொருவரும் எங்களுக்கு விருப்பமான பழச்சாற்றைக் குடித்தோம்.





உணவின் தரம் நன்றாக இருந்தது. சுவை அபாரம் என்று சொல்ல முடியாது, ஆனால் குறை சொல்ல எதுவுமில்லை. விலை சற்றே அதிகம், அதற்கேற்ப அளவு குறைவாக இருந்தது.

மொத்தத்தில், மாலை நேரச் சிற்றுண்டிக்காக ஒரு மாறுதலாக முயற்சிகளாம். மதிய உணவுக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லை.
பொறுப்பு துறப்பு: இந்தப் பதிவில் எந்த விளம்பரமோ, நிதியுதவியோ பெறப்படவில்லை. முழுக்க நான் காசுக் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் பொருட்களை அல்லது சேவையைப் பற்றியது. இவை என் தனிப்பட்ட அனுபவம், இதன் பயனைப் பற்றி எந்தவித உத்தரவாதமும் நான் அளிக்கவில்லை. நன்றி.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.


they have branch in Annanagar too that is little ambience compare to T.Nagar
இங்கே தேநீரைத் தவிரச் சாப்பாடு கிடைக்குமா என்ற சந்தேகத்தோடு நுழைந்தேன், நண்பர் பரிந்துரைக்வில்லையா சாப்பாடு உண்டு என்று?
உணவு வகைகள் இருக்கும் என்று சொன்னார், விவரமாகக் கேட்டுக் கொள்ளவில்லை. அதனால் சந்தேகமாகவே இருந்தது :-)