ஆங்கிலத்தில் சொல்லும் “Dark Patterns” என்னும் “வஞ்சக வடிவமைப்பு” இப்படித் தான் தொடங்கும்.
குறிப்பாக நிதி/காப்பீடு/தொலைப்பேசி நிறுவனங்கள் பலவும் வாடிக்கையாளரைப் பிடிக்க, அவரை ஏமாற்றி தேவையில்லாத விற்க, ஏற்கனவே இருப்பவர்களை வெளியேற விடாமல் செய்யும் முறையின் உதாரணம் இது. இங்கே நீங்கள் பார்ப்பது ஒரு பெரிய காப்பீட்டு நிறுவனம், நான் கேட்காமலே, கேட்டது போல என்னைக் குழப்பி, என் விவரங்களைப் பெற்று என்னிடம் விற்கச் செய்யும் முயற்சி. இவற்றில் பலவும் சட்டப்படி குற்றம், ஆனாலும் தங்களைக் காக்க ஒரு குழப்பமான முறையில் செய்கிறார்கள்.
இதற்குப் பெரும் மென்பொருள், இணைய வணிக, வாடகை வாகனச் செயலி நிறுவனங்களும் கூட விதிவிலக்கில்லை. பாதுகாப்பாக இருப்பது நம் கடமை, ஆனால் அது எளிதில்லை, மிகவும் சோர்வடையச் செய்துவிடுகிறது! அலுப்பாக இருக்கிறது.

இந்திய அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இவற்றைத் தடுக்க ஒரு வழிகாட்டு நெறிமுறையை வகுத்தார்கள். அதில் பல விதமான “வஞ்சக வடிவமைப்புகளைப் பட்டியல் இட்டிருந்தார்கள்: சாதாரணத் தகவலை அவசரமானது போலச் சொல்லுவது, நாம் தேர்வு செய்யாததை நம் கூடையில் சேர்ப்பது அல்லது கட்டாயப்படுத்துவது, குறைந்தவிலை சேவையைத் தேர்வு செய்யும் போது இது தானா என மறைமுகமாக ஆனால் கேவலமாகப் பேசுவது, கட்டாயப்படுத்தி நம்மை ஒப்புக்கொள்ளச் செய்வது அப்படி இல்லையென்றால் நாம் செய்யவந்ததைச் செய்ய விடாமல் செய்வது, விலையை ஒவ்வொரு தவணையிலும் ஏற்றிக் கொண்டே போவது, ஒன்றைக் காட்டி விற்றுவிட்டு வேறு ஒன்றை வழங்குவது, எனப் பல உள்ளது. இது எல்லாமே தார்மீக முறையில் குற்றம், அதைச் சட்டப்பூர்வமாகத் தடுப்பது அந்த நெறிமுறையின் திட்டம்.
அதைத் தொடர்ந்து இந்த ஆண்டின் ஜூன் (2025) மாதத்தில், நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் எல்லா இணைய வணிக நிறுவனங்களுக்கும் ஓர் அறிவுரை வெளியிட்டது. அதில், மூன்று மாதங்களுக்குள் தாங்களே தங்கள் தளங்களைச் சோதித்து, வஞ்சக வடிவமைப்புகள் உள்ளதா என்று பார்க்க வேண்டும், இருந்தால் அவற்றை நீக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். இதற்காகவே அமைச்சகங்கள், நுகர்வோர் அமைப்புகள், சட்டக் கல்லூரிகள் கலந்து ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. 2023-இல் அரசு பட்டியலிட்டிருந்த 13 விதமான வஞ்சக வடிவமைப்புகளையும் மீண்டும் நினைவூட்டியுள்ளனர். ஆனால் வருத்தம் என்னவென்றால், இதுவரை அபராதம் அல்லது கடுமையான தண்டனை எதுவும் இல்லை. உண்மையில் பெரிய நிறுவனங்கள் இவற்றைச் சரி செய்ய வேண்டுமென்றால் அவர்களுக்குப் புரியும் மொழி அபராதங்கள் மட்டுமே. இருந்தாலும், மௌனமாக இருப்பதை விட நல்ல தொடக்கம் இது. வருங்காலத்தில் அரசு இன்னும் கடுமையான சட்டங்களைக் கொண்டு வருவார்கள் என நம்புகிறேன்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

