“நான் பேச்சை அதிகமாக யூஸ் பண்ணுகிறேன்”, “குரலை அதிகமாக யூஸ் செய்பவர்கள்”.
இது தமிழா, தங்கிலீஷா? எந்த மொழி இலக்கணத்திலும் வராத சொற்தொடர்கள்.
‘பேசுதல்’ என்ற பொருளில் ‘Use’ எனும் ஆங்கில வார்த்தையைத் தனியாகத் தமிழில் சேர்த்துப் பேசியதுதான் கவனத்தை ஈர்த்தது. கேட்டது பிரபலத் தமிழ் தொலைக்காட்சியின் இன்றைய காலை நேரலையில். தொகுப்பாளர் பேசியது முதல் தொடரை, வந்திருந்த விருந்தினரான மருத்துவர் பேசியது இரண்டாவது தொடரை. ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு ஒட்டிக் கொண்டது போல.
இதைக் குறையாகச் சொல்லவில்லை. நானும் கூட இந்த மாதிரி தவறுகளைச் செய்திருப்பேன், செய்யக்கூடும். நேரலை நிகழ்ச்சியில் பேசும்போது எல்லோருக்கும் இது போன்ற சறுக்கல்கள் வரத்தான் வரும். இதை அடுத்தவர்கள் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ளும் வாய்ப்பாக அமையும். அதற்காகவே பகிர்கிறேன். உதாரணமாக: போன வாரம் பாட்காஸ்ட் பேட்டியில் “கண்டிப்பாக” என்கிற வார்த்தையை மீண்டும் மீண்டும் நான் பயன்படுத்தியிருக்கிறேன், பேட்டியை யு-ட்யூப்பில் கேட்ட நண்பர் சுட்டிக்காட்டிய போது தான் அது எனக்குத் தெரிந்தது. அடுத்த முறை “கண்டிப்பாக” வார்த்தையைக் குறைத்துக் கொள்வேன் என்று … கண்டிப்பாகச் சொல்கிறேன் (இந்தத் தடவை மட்டும்!). குறிப்பு: யோசித்துப் பார்த்தால் “கண்டிப்பாக” என்கிற வார்த்தையே இந்த இடங்களில் தவறாகத் தோன்றுகிறது.
இந்த ஒரு மொழிக் குறிப்பைத் தாண்டிப் பார்த்தால், மொத்த நிகழ்ச்சியுமே மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. கேள்விகளும் டாக்டரின் விடைகளும் அன்றாட வாழ்வுக்கு மிகவும் தேவையான விஷயங்களை எளிதாக வழங்கினார்கள். சிறப்பான உள்ளடக்கத்திற்கு வாழ்த்துக்கள்!
நாம் காணொலிகளில் பேசும்போது கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்தால் நாமும், நம் மொழியும் வளரும், சொல்வது அதற்குரிய கேட்பவர்களிடம் எளிதாகச் சென்றடையும். நன்றி.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

