சென்னையிலிருந்து தொடங்கப்பட்டு இன்று உலகளவில் பிரபலமாக இருக்கும் மென்பொருள் நிறுவனங்களைச் சொல்லவும் என்று கேட்டால் முதலாவதாக ஜோகோ, இரண்டாவதாக பிரஷ்வோர்கஸ் என்றே எல்லோரும் சொல்வார்கள். கடந்த பத்தாண்டுகளாகத் தமிழ்நாட்டில் சாஸ் (SaaS) துளிர்த் தொழில்களுக்கு (ஸ்டார்ட்அப்) அடையாளமாக இருப்பவர் பிரஷ்வோர்க்ஸின் நிறுவனர் திரு கிரிஷ் மாத்ருபூதம்.
அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தையில் பட்டியலிட்டு, தொடர்ந்து வளர்ந்து வரும் நிறுவனம் பிரஷ்வோர்கஸ். எளிய பின்புலத்திலிருந்து வந்து இன்று உலகையே தனது பக்கம் திருப்பியவர் கிரிஷ். இவர் சூப்பர் ஸ்டாரின் ரசிகர். ஒரு காலத்தில் எல்லோரும் பெங்களூரு சென்று தொழில் தொடங்கிய போது ‘சிங்கார சென்னை’யில் இருந்து செய்து காட்டுவேன் என்று சாதித்துக் காட்டியவர். சென்னையிலிருந்து உலகளவில் வெற்றிகளைக் கொடுக்கக்கூடிய புட்பால் (கால்பந்து) விளையாட்டுவீரர்களைத் தனது விளையாட்டு பயிற்சிப் பள்ளியில் தயார் செய்து வருகிறார்.
இத்தகைய ஒருவரைத் தமிழ் தொலைக்காட்சி பிரபலமான திரு கோபிநாத் பேட்டி எடுக்கிறார் என்றார் சுவாரஸ்யமாகத் தானே இருக்கும். அதுவும் தலைப்பு செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) என்றால் சொல்லவும் வேண்டுமா? நான் பல முறைத் திரு கிரிஷ் மேடைகளில் பேசி நேரடியாகக் கேட்டிருக்கிறேன். அவற்றைவிட இந்தப் பேட்டி என்னைக் கவர்ந்தது, காரணம் அவரின் யதார்த்தமான பதில்கள். இதன் காரணத்தை அடுத்தடுத்த பத்தியில் பார்ப்போம்.
பொதுவாக எல்லாம் எனக்குத் தெரியும் மற்றவர்களில் பலரும் முட்டாள்கள் என்று பேசும் வெற்றியாளர்களின் பேட்டிகள் எனக்குப் பிடிக்காது. அதே போலத் தனது துறைக்கு வெளியிலும் எனக்கு எல்லாம் தெரியும் என்று பேசுகிறவர்களை, நூல்களை நான் விரும்பியதே கிடையாது. பெரும் சமூக வலைத்தளத்தில் அதன் தொடங்கிய நாட்களில் பொறியாளராக இருந்ததனால் பல நூறு கோடி சம்பாதித்த ஒரே காரணத்தால் வாழ்க்கையைப் பற்றியும், உலக அரசியலைப் பற்றியும் பேசும் அமெரிக்க சிலிக்கான் பள்ளத்தாக்கு மில்லியனர்களின் உரைகளை நான் தவிர்த்துவிடுவேன். அவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள ஒன்றுமே இருக்காது. அவர்களின் உலகமே வேறு. அதுவும் அவர்கள் பேசுவது பல சமயங்களில் சரியாகவே இருக்காது, நமது நேரமே வீண்.
ஆனால் கிரிஷ் அப்படியில்லாமல் சற்றே வித்தியாசமாகத் தெரிகிறார். அதுவும், தற்போது அவர் நிறுவனத்தின் தலைவர் (செர்மன்) மட்டுமே, நிறுவனத்தின் பொறுப்புக்களைத் தலைமை அதிகாரி ஒருவரிடம் கொடுத்துவிட்டதால் ஓய்வாக, அவசரமில்லாமல் பேசினார். தான் சாதித்தது ஏதோ தனது திறமையால் மட்டுமே என்கிற எண்ணமில்லாமல், வணிகச் சூழ்நிலை, சரியான குழு கிடைத்தது என்று அடக்கமாக சொன்னார் – அதை உண்மையாகவேச் சொன்னார் என்றே நினைக்கிறேன். கோபிநாத்தும் திரு கிருஷைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டு சரியான கேள்விகளைக் கேட்டார். இருவருமே வல வல, என்று பேசி நம்மை அறுக்கவில்லை. நன்றி.
யு-ட்யூப்பில் “Gopinath Girish Mathrubootham” என்று தேடி காணொலியைப் பார்க்கவும்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

