எனது நண்பரும் தமிழ்க் கணினி உலகின் முன்னோடிகளில் ஒருவருமான திரு முத்து நெடுமாறனின் படைப்பு முரசு அஞ்சல் மென்பொருள். பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கணினிகளுக்குக்காண முரசு அஞ்சல் செயலியை முற்றிலுமாக மேம்படுத்தியுள்ளார் முத்து. அதோடு பல்வேறு புதிய அழகான எழுத்துருக்களையும் பல ஆண்டுகளாக உழைத்து உருவாக்கி வெளியிட்டுள்ளார். எல்லோரும் செல்பேசி செயலிகளை மட்டுமே கவனம் செலுத்தும் இந்தக் காலத்தில் இந்த முயற்சி கணினி பயனர் என்கிற முறையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இது தொடர்பாகவே இன்று சென்னையில் முரசு அஞ்சல் மறு உருவாக்கம் செய்த பதிப்பின் வெளியீடு நடந்தது. திரு கோகிலா மெட்ராஸ் பேப்பரில் எழுதிப் பிரபலமடைந்த தொடர் முத்துவின் வாழ்க்கைக் கதையான “உரு”. செயலியோடு சேர்ந்து இந்த நூலும் இன்று வெளிவந்தது.

புத்தக வெளியிட்டுப் பகுதியில் நூல் ஆசிரியர், பதிப்பாசியாரோடு என்னையும் சிறப்புரை ஆற்றும்படி திரு முத்து கேட்டுக் கொண்டார். என்ன பேசுவது என்று யோசித்த போது, நூலில் இருப்பதைப் பேசுவதைத் தவிர்த்து முத்துவை நான் நன்கு அறிவேன் என்கிற முறையில் “உரு நூல் என் பார்வையில், ஏன்? எதற்கு?” என்று பேசினேன்.
முக்கியமாக எல்லோருமே அவர்களின் வாழ்க்கையில் நடந்ததை எழுத வேண்டும் என்று நினைப்பவன் நான். இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் அது பயன்படும். அதுவும் செய்யறிவு காலத்தில் இருக்கும் நமக்கு, ஏ.ஐ. படித்துக் கொள்ள வசதியாக இருக்கும். அடுத்து நம்மைப் பற்றி நாம் சொல்லவிட்டால் தவறாக அடுத்தவர்கள் சொன்னது நிலைத்திருக்கும். அதுவும் முத்து போன்ற ஒருவர் ஒரு நாற்பதாண்டு தொழில்நுட்ப மாற்றங்களில் பலவற்றைப் பார்த்தவர், அவரின் தொழில்நுட்ப அறிவை விட, அவரின் பயணத்தில் பார்த்த மனிதர்கள், சிக்கல்கள், அதற்கு அவர் கண்ட தீர்வுகள் என்பவை மற்றவருக்குப் பயன்படும். இதைத் தாண்டி முத்துவின் வாழ்க்கையிலிருந்து துளிர்த்தொழில் முனைவோர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய மூன்றைச் சொன்னேன்.
அவை:
1. மென்பொருட்கள் தேவை இருப்போர் எல்லோரிடமும் வாங்கப் பணம் இருக்காது. ஒரு பொருளை எங்கே யாரிடம் விற்றால் அதற்கு வரவேற்பு இருக்கும் என்று பகுப்பாய்ந்து எப்படிச் செய்வது?
2. தயாரித்த பொருளை எப்படிப் பயனரிடம் எடுத்துச் செல்வது? சந்தைப்படுத்துவது? என் ஆங்கில நூலான “The Founder Catalyst”இல் சொன்னது மாதிரி “தொழில்முனைவோர் எப்படி ஓர் அரசியல்வாதி மாதிரி தங்களின் நிறுவனத்தை வளர்க்க வேண்டும்”?
3. ஒவ்வொரு புதிய தொழில்நுட்பத்திற்கும் ஒரு காலாவதி தேதி அமைந்துவிடும். இருப்பது போவதற்கு முன்னரே வருகின்ற அடுத்ததை அறிந்து கொள்ள வேண்டும், அதற்குத் தயாராக வேண்டும். நம் படைப்பை நாமே பாதுகாத்து இருப்பதைத் தாண்டி நம் படைப்பை செந்தரங்களில் எப்படி இணைப்பது என்று வருங்காலத்திற்காகச் சிந்திக்க வேண்டும்.
️Audio recording of my talk:
எனது முழு உரையும் (1:08 மணியிலிருந்து இருபது நிமிடங்கள்) கீழே இருக்கும் காணொலியில் இருக்கிறது, கேட்டு உங்களின் கருத்தைச் சொல்லவும்.
Discover more from Mangoidiots.com
Subscribe to get the latest posts sent to your email.

