சிறிய வயதில் என் தந்தையோடு சென்ற நினைவில், ஆண்டுதோறும் நடக்கும் சென்னை சுற்றுலா பொருட்காட்சி செல்ல எனக்குப் பிடிக்கும். இந்த ஆண்டு பொங்கல் முடிந்து ஒரு மாதத்திற்கும் மேலான நிலையில் இன்றைக்குத் (25 பிப்ரவரி 2025) தான் போக நேரம் கிடைத்தது.
இரண்டு நாட்களுக்கு முன்னர், ஞாயிற்றுக்கிழமை மாலையில் போனேன், போர் நினைவுச் சின்னத்தில் இருந்தே வாகனங்கள் நின்று கொண்டிருந்தன, திரும்பிவந்து விட்டேன். வார நாள் (செவ்வாய்க் கிழமை) என்பதால் ஒரு பத்து வாகனங்கள் மட்டுமே இருந்தது. தீவுத்திடலில் வண்டியை நிறுத்த ரூ 140 கட்டணம், அதைச் செலுத்தி உள்ளே சென்றேன். உள்ளே செல்லக் கட்டணம் ரூ 40, செல்பேசி மூலம் செலுத்தலாம். கூட்டமே இல்லை.
சென்ற ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு துணிக் கடைகளும், வீட்டுப் பொருட்கள் கடைகளும், குழந்தைகள் விளையாட்டு வசதிகளும் குறைவாகவே இருப்பது போலத் தோன்றியது. நான் விரும்பி பார்க்கும் அரசாங்க கண்காட்சி அரங்குகளும் குறைவான எண்ணிக்கையிலேயே இருந்தது – இருந்ததும் சிறிய அளவிலேயே இருந்தது. இந்து அறநிலையத் துறையின் அரங்கில் தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இருப்பதைப் போன்ற அமைப்புகளைச் செய்திருந்தார்கள். வரும் வழியில் மதுரை மீனாட்சி அம்மன் காட்சி கொடுத்தார், அருகில் இருந்த குருக்கள் ஆரத்திக் காண்பித்து, குங்குமத்தை நெற்றியில் வைத்தார். சுற்றுலாத் துறையின் அரங்கில் வெறும் சில படங்களும், நடுவில் ஒரே ஒரு சிறு மாதிரியும் இருந்தது. காவல் துறையின் அரங்கில் பல வகைத் துப்பாக்கிகள் இருந்தது. மற்ற அரங்குகளுக்குச் செல்லத் தோன்றவில்லை. ஒன்றரை மணி நேரத்திற்கும் குறைவாக அங்கேயிருந்துவிட்டுத் திரும்பினோம்.
இப்போது எல்லாமே நம் இல்லம் தேடி வருகிறது, இன்ஸ்டாகிராமில் பார்த்து ஆர்டர் செய்யும் சுழலில் இது போன்ற கண்காட்சியில் யாரும் பொருட்கள் வாங்குவதாகத் தெரியவில்லை. யு-ட்யூப், மெய்நிகர் உலகம் என்று பார்த்துப் பழகிவிட்ட குழந்தைகளுக்கு இங்கே இருக்கும் திகில் அரங்குகளில், பலூன் சுடுதலில் ஆர்வம் இருக்கப் போவதில்லை. வார இறுதியில் வீட்டில் இருக்கப் பிடிக்காமல் மக்கள் பொழுதுபோக்க வருவார்களாக இருக்கும், ஆனால் கடை வைத்திருப்போர்களுக்கு வியாபாரம் நடப்பதாகத் தோன்றவில்லை. உங்களின் கருத்து என்ன?
சொல்ல மறந்துவிட்டேன். சுற்றுலா கண்காட்சி சென்றால் கட்டாயம் சாப்பிட வேண்டிய டெல்லி அப்பளம் (விலை ரூ 80) வாங்கி நாங்கள் இருவரும் ஒரு சில துண்டுகள் சாப்பிட்ட நிலையில் காற்றில் பறந்து கீழே விழுந்துவிட்டது – அதுவும் உடல் நலத்திற்கு நல்லது என்று இன்னொன்று வாங்காமல் அதோடு விட்டுவிட்டோம்.






















Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

