மகிழ்ச்சியான செய்தி. எனது முதல் தமிழ் நூல் “நுட்பம்” இப்போது அமேசான் கிண்டில் தளத்தில் மின்-நூலாகக் கிடைக்கிறது. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும், காகிதப் பதிப்பை விரும்பாதவர்களுக்கும், இது வசதியாக இருக்கும் என நம்புகிறேன். நூலை வாங்கிப் படித்து உங்களின் கருத்துக்களைப் பகிருமாறு விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
முதல் பதிப்பு வந்த போது சென்னை புத்தகக் காட்சி அருகில் வந்துவிட்டதால் விடுபட்டுப் போன இரண்டு விசயங்கள் இந்த கிண்டில் பதிப்பில் என்னால் செய்ய முடிந்தது. ஒன்று, மறைந்த என் தந்தைக்கு நான் சொல்ல நினைத்த நன்றி – தன் ஐம்பது ஆண்டுக்காலப் பதிப்பக வாழ்வில் பல நூறு புத்தகங்களைப் பதிப்பித்த அவர் என் நூலைப் பதிப்பிக்க இல்லையே என்கிற வருத்தம் ஓரளவு இன்று நீங்கியது. இரண்டாவது, இது கட்டுரைத் தொடராக வந்த போதே பல தொழில்நுட்ப வார்த்தைகளை ஆங்கிலத்தில் மட்டுமே சொல்லாமல் எளிய தமிழில் சொல்ல முயன்றிருந்தேன் (திணிக்கவில்லை), அப்படிச் செய்யும் போது சில இடங்களில் ஒரே எழுத்துப்பலுக்கலாக இல்லாமல் வெவ்வேறு முறைகளில் வந்திருந்தது, அதை ஓரளவு இதில் சரி செய்துள்ளேன்.
மின்-நூலாக வர ஏன் இத்தனைக்காலம்? முதல் சில மாதங்கள் நன்றாக வடிவமைக்கப்பட்ட நூலை வாங்கட்டுமே என்று பொருத்தியிருந்தோம். பின்னர் எனது கிண்டில் பதிப்பாளர் கணக்கிலும், கிண்டில் நூலாக மாற்றுவதிலும் பல சிக்கல்கள் – வேறு சமயத்தில் இதைப் பற்றி விளக்கமாக எழுதுகிறேன். மின்-நூல் முயற்சியில் ஆதி முதல் அந்தம் வரை எனது கையைப் பிடித்துக் கூட்டிப் போன மெட்ராஸ் பேப்பர் ஆசிரியரும் எனது நண்பருமான திரு பா ராகவன் அவர்களுக்குக் கோடி நன்றிகள்.

நூல் அறிமுகம்:
செல்பேசி, கணினி, இவை இரண்டும் இல்லாத வாழ்க்கை இல்லை என்றாகிவிட்டது. அன்றாடப் பயன்பாட்டில் இந்த இரண்டுமே எதிர்பாராத சிக்கல்களைத் தரவல்லவை. தவிர இரு துறைகளுமே ஒவ்வொரு நாளும் புதுப்பிறவி எடுப்பவை. அவை புதுப்பிக்கப்படும் போது நாமும் நம்மைப் புதுப்பித்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
இந்தப் புத்தகம், இந்த இரண்டு எளிய கருவிகளை, அதில் இருக்கும் செயலிகளை – உதாரணமாக வாட்ஸ்-அப், கூகுள் டாக்ஸ், சாட்-ஜி.பி.டி. போன்றவற்றைப் பயன்படுத்துவோருக்கு உதவும் நுணுக்கமான தகவல்களால் ஆனது. இதனைக் கொண்டு எந்த வல்லுநரின் உதவியும் இன்றி யார் வேண்டுமானாலும் தமது செல்பேசியையும் கணினியையும் திறமையாகப் பயன்படுத்தலாம். பிரச்சனை வரும்போது பதறாமல் சரி செய்யலாம். ஒரு வகையில் இது ஒரு தொழில்நுட்பக் கையேடு. இன்னொரு பார்வையில் இக்காலத்துக்கான ‘வேதம்’. மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

