4 நவம்பர் 2024, அன்றைய மாலைப்பொழுது மிகச் சிறப்பாக அமைந்தது நான் செய்த புண்ணியம். மாலை ஏழு மணி இருக்கும், திடீர் என்று எனது சகலை அழைத்தார், வெங்கட் என்ன செய்து கொண்டிருந்தாலும் வேட்டிக் கட்டிக் கொண்டு உடனே மைலாப்பூர் நியூ உட்லண்ட்ஸ் அடுத்திருக்கும் சுதர்மா (மறைந்த தொழிலதிபர் திரு சிவசைலம் அவர்களின் பங்களா) வரவும் என்றார். கடந்த சில நாட்களாக அந்த வழியே போகும் போது வழியில் பார்த்திருந்ததால் எதற்குக் கூப்பிடுகிறார் என்று புரிந்தது – சிருங்கேரி சாரதா பீடத்தின் இளைய பீடாதிபதி திரு ஜகத்குரு விதுசேகர பாரதி சுவாமிகள் அவர்கள் சென்னை விஜயமாக அங்கே தங்கி அருளாசி வழங்குகிறார், அவரை தரிசிக்கவே அழைக்கிறார் என்று. இப்படியொரு வாய்ப்பு கிடைத்தால் விடலாமா, உடனே தயாராகிச் சென்றுவிட்டேன்.
போகும் வழியில் சுமார் பன்னிரண்டு (2012) ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர் ஒருவர் சொல்லியதால் நானும் மனைவியும், பெரியவர் பீடாதிபதி மகாசந்நிதானம் திரு ஜகத்குரு பாரதி தீர்த்த சுவாமிகள் இதே சுதர்மாவிற்கு சாதுர்மாசிய விரதத்தின் போது வந்திருந்தார் – அப்போது அங்கே நடந்த பூஜையும் அதில் ஶ்ரீ மகாசந்நிதானம் அவர்கள் மெதுவாக ஒவ்வொரு தாமரைப் பூவாகச் சமர்ப்பித்தது தரிசிக்கவே தெய்வீகமாகவிருந்த காட்சியை மனதில் நினைவடுத்திக் கொண்டே சென்றடைந்தேன்.


அன்று காலையில் சகஸ்ர சண்டி ஹோமம் நடந்திருந்தது, இன்னும் புகை வந்து கொண்டிருந்த ஹோமக் குண்டங்களைச் சுற்றி வந்து சேவித்தோம். அடுத்துச் சிறப்பாக அலங்கரிக்கப் பட்டிருந்த அரங்கினுள் வந்தோம். கூட்டமென்று சொல்ல முடியாது, நூறிலிருந்து இருநூறு பக்தர்கள் இருந்திருப்பார்கள். அங்கே நெரூர் சுவாமிகள் உபன்யாசம் அருளிக் கொண்டிருந்தார், சிருங்கேரி மடத்தின் பல்வேறு பீடாதிபதிகள் மற்றும் மகான்களின் சிறப்புகளை அவர்களை நாம் ஏன் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி மிக எளிமையாக, சரளமான தமிழில் எடுத்துரைத்தார் – அடுத்த ஒன்றரை மணி நேரம் எப்படிச் சென்றது என்பதே தெரியவில்லை.

அதற்கு அடுத்து நடந்ததும் சிறப்பானது. உமையாள்புரம் திரு கே.சிவராமன் அவர்களின் தனியாவர்த்தன மிருதங்க நிகழ்ச்சி. தெய்வீகமான உரையிலிருந்து வெளியில் வந்த எங்களை அவரின் வாசிப்பில் அமைதியான மன நிலைக்கு அழைத்துச் சென்றார். பல ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் அவரின் நிகழ்ச்சிக்கு மியூசிக் அகாடமியில் இடமே கிடைக்காது, அப்படிப்பட்ட பத்ம விபூசண் விருதைப் பெற்ற கலைஞரின் வாசிப்பிற்கு அவர் அமர்ந்திருந்த இடத்திலிருந்து நாங்கே அடி தூரத்திலிருந்து கேட்கும் வாய்ப்பு கிடைப்பது சாதாரண விசயமேயில்லை.
பின்னர் ஒரு முப்பது நாற்பது நிமிட காத்திருப்பு பிறகு இளைய பீடாதிபதிகள் சுதர்மாவிற்கு வந்தடைந்திருந்தார். சிறிது நேரத்திற்குப் பின்னர் அன்றைய முக்கிய நிறைவு நிகழ்வான ஶ்ரீ சந்திர மௌலீஸ்வரர் பூஜையைத் தொடங்கினார் ஜகத்குரு. தனி ஒருவராக முழு பூஜையையும் சுவாமிகள் ஆர்ப்பாட்டமேயில்லாமல் மெதுவாகச் செய்தது கண்கொள்ளக்காட்சியாக இருந்தது, காணக் கண் கோடி வேண்டும்.



பூஜை நிறைவடைய இரவு பதினொரு மணி முப்பது நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, ஏழு மணியிலிருந்து அங்கேயே அமர்ந்திருந்தாலும் ஒரு துளி சோர்வு இல்லை, பசி இல்லை, மனது நிறைய அன்பும் பக்தியும் தான் நிறைந்திருந்தது. ஒரே நாளில் சகஸ்ர சண்டி ஹோமத்தை சேவிக்க, நெரூர் சுவாமிகளின் உபன்யாசத்தைக் கேட்பது, உமையாள்புரம் அவர்களின் மிருதங்கள் கச்சேரியை ரசிக்க, ஜகத்குருவின் ஶ்ரீ சந்திர மௌலீஸ்வரர் பூஜையைத் தரிசிக்கக் கிடைத்த பாக்கியத்தை என்னவென்று சொல்வது. என்னை அழைத்துச் சென்ற சகலைக்கு நன்றி சொல்லி வீட்டிற்கு வந்தேன்.


[Sringeri Sri Sharada Peetham His Holiness Jagadguru Shankaracharya Sri Sri Vidhushekhara Bharati Sannidhanam visit to Sudharma, Mylapore, Chennai on the 4th of November 2024]
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

