நேற்று இரவு உறங்கப் போகும் முன் படித்த கட்டுரையில் மைக்ரோசாப்ட் எக்ஸ்சேல் மென்பொருளுக்கு வயது நாற்பது என்றும், இந்த மென்பொருள் எப்படி மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்திற்கு முந்தையது என்றும், இது விரிதாள்கள் விசிகேல்க் மற்றும் லோடஸ் 1-2-3 போன்றவற்றிற்குப் பின்னர் வந்தது என்று விரிவாக இருந்தது. அதைப் படித்தபின்னர் இன்னும் சிலவற்றைப் படித்து உறங்கிவிட்டேன்.

திடீரென்று உறக்கத்திலிருந்து எழுந்து விடைத் தெரிந்தவுடன் தான் மறுபடி உறங்கப் போனேன். அப்படி ஒன்றும் தலைபோகிற கணக்கு எதுவும் இல்லை, நிஜத்தில் பிரச்சனையே இல்லை. கனவில் ஒரு மைக்ரோசாப்ட் எக்ஸ்சேல் விரிதாளில் (Spreadsheet) வேலை செய்து கொண்டிருந்திருக்கிறேன், அதில் ஐந்தாவது நெடுவரிசையில் (Column) பிழை என்று வருகிறது. அந்தச் சிந்தனையில் என் தூக்கம் கலைந்து எழுந்திருக்கிறேன். சரி, முடிந்தளவு யோசித்துப் பார்த்தேன், அந்த விரிதாளின் ஒரு திரை பக்கம் அளவுக்கு வடிவம் நினைவுக்கு வந்தது, பிழையான கலத்தில் (cell) என்ன சூத்திரம் இருந்திருக்கலாம் என்று யூகிக்க முடிந்தது. இதைச் சொன்னவுடன் எனக்கு என்னமோ படம் பிடித்தது போன்ற நினைவுத் திறன் என்றெல்லாம் நினைக்கவேண்டாம், எல்லாம் ஒரு புகை வடிவ யுகம் தான். அந்த விரிதாளில் ஒரு நெடுவரிசையில் அதற்கு முன்னர் (அதாவது இடப்பக்கத்தில்) இருக்கும் அனைத்து நெடுவரிசையையும் கூட்டிச் சொல்ல வேண்டும். அதாவது ஐந்தாவது ‘E’ நெடுவரிசையில் =A + B + C + D என்கிற சூத்திரம் இருந்திருக்க வேண்டும். ஆனால் தவறாக ‘E’ நெடுவரிசையில் =C + D என்று உள்ளிடப்பட்டிருந்தது. இந்த விடை தெரிந்தவுடன், நிம்மதியாக உறங்கப் போனேன்.

இன்றைக்கு உறங்கப் போகும் முன்னர் செயற்கை பொது நுண்ணறிவு பற்றிப் படித்துவிட இருக்கிறேன் (புரியுமா என்றெல்லாம் பொதுச்சபையில் கேட்கக்கூடாது), அந்தச் சிந்தனையிலே உறங்கி அதற்கு விடை கிடைத்தால் எனக்கும் நோபல் தான்!


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading