மென்பொருளியல் பொறியாளர்கள் மட்டும் இல்லாமல் எழுத்தாளர்கள், மேலாளர்கள் என எல்லோருமே இன்று கணினிகளைப் பல மணி நேரம் பயன்படுத்துகிறார்கள். இவர்களில் பலரும் மணி நேரம் தொடர்ந்து விசைப்பலகையில் தட்டச்சு செய்ய வேண்டியிருக்கிறது. என்ன தான் செயற்கை நுண்ணறிவின் உதவியால் பேச்சறிதல் (வாய்ஸ்-டைப்பிங்) முன்னேறினாலும், இன்றும் பல இடங்களில் தட்டச்சு தான் வசதியாக இருக்கிறது. இப்படி அதிகமாகத் தட்டச்சு செய்யும் போது நம் கை மணிக்கட்டு அயர்ச்சி கொள்கிறது, உள்ளே இருக்கும் மூட்டுகள் தேய்கிறது, நரம்புகள் அழுத்தப்படுகிறது. தொடர்ந்து இப்படிச் செய்வதால், சின்ன வயதிலேயே பலருக்கும் கார்பல் டன்னல் சிண்ட்ரோம் (மணிக்கட்டு குகை நோய் தொகுப்பு), அது முற்றிப் போனால் பொறுத்துக் கொள்ள முடியா வலி வரும், அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு. இவற்றைத் தவிர்க்க நாம் உட்காரும் நாற்காலியும், மேஜைகளும் வசதியாக இருக்க வேண்டும், நாற்காலியில் நம் முழங்கையை வைக்கும் பிடியும் விசைப்பலகை, மவுஸ்ஸும் ஒரே உயரத்தில் இருக்க வேண்டும். நாம் எம்பியோ, குனிந்தோ தட்டச்சு செய்யக் கூடாது. அதே போல நம் முழங்கை தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது. நம் தலை நேராக இருக்க வேண்டும், நம் கண்களுக்கு நேராகக் கணினித் திரையிருக்க வேண்டும்.
இவற்றைச் செய்யக் குறைந்தது, மடிக்கணினியைப் பயன்படுத்துவோர் தயவு செய்து, தனியாக ஒரு விசைப்பலகையும், சுட்டியையும் வாங்கிப் பயன்படுத்தவும் – இரண்டும் சேர்ந்து ஐந்நூறு ரூபாயிலிருந்து கிடைக்கிறது. தனி விசைப்பலகையில் விசைகள் ஒன்றுக்கு ஒன்று ஒட்டியிருக்காது, இடமிருக்கும், இதனால் நம் கைகளைக் குறுக்கி வைத்திருக்க வேண்டாம் – உங்கள் பக்கத்தில் மடிக்கணினியைப் பயன்படுத்துபவர் இருந்தால் அவர்களின் உடல் இருக்கை நிலையைப் பாருங்கள், நான் சொல்வது புரியும். தனியாக ஒரு திரையையும் (மானிட்டர்) வாங்கிப் பயன்படுத்தலாம், அது கண்களுக்கு, கழுத்துக்கு, முதுகுத் தண்டுக்கு வரும் அயர்ச்சியைக் குறைக்கும். மடிக்கணினியில் இருக்கும் திரைகள் பொதுவாக 14 அல்லது 15 இன்ச் தான் இருக்கும், ஆனால் தனியாக வாங்கும் திரைகள் பெரியதாக 27 அல்லது 32 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது – 27 இன்ச் சுமார் பத்தாயிரம் ரூபாய்க்குக் கிடைக்கிறது. மடிக்கணினியோடு இவற்றையெல்லாம் வாங்குவது செலவு இல்லை, உங்களின் ஆரோக்கியத்திற்கான காப்பீடு, யானையை வாங்கிவிட்டு அங்குசம் வாங்காமல் இருக்கும் தவற்றைச் செய்யாதீர்கள்.

இறுதியாக, எனது விருப்பமான விசைப்பலகை வகைகளைப் பற்றிப் பார்க்கலாம். இது விலை அதிகம், ஆனால் மிக வசதியானது. இருபது ஆண்டுகளாக நான் பயன்படுத்துவது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயற்கையான பணிச்சூழலியல் (Microsoft Ergonomic Keyboard) விசைப்பலகையை. இந்த வகை விசைப்பலகை பக்கவாட்டில் இரண்டாகப் பிளக்கப்பட்டது போல இருக்கும், அதாவது எண் ஆறுக்கும் ஏழுக்கும் நடுவே இடைவெளியிருக்கும், அது கீழ் வரிசைகளில் பெரியதாகும். அதோடு இந்தப் பிளவு இருக்கும் இடம் மேடாகவும், அதிலிருந்து வலதுபுறம், இடதுபுறம் இருக்கும் விசைகள் கீழிறங்கிச் சாய்விலிருக்கும். இதனால் நம் இரண்டு கைகளையும் பிரித்து, விரல்களையும் ஓய்வாக வைத்துக் கொள்ளலாம், மணிக்கட்டு நகர்வதையும் இது குறைக்கும். மேலும் மணிக்கட்டுகளை வசதியாக வைத்துக் கொள்ள முழு விசைப்பலகையின் கீழ்ப் பகுதியில் அகலமான கையிருப்பு பட்டை இருக்கும், இது கைகளின் எடையை விரல்களிலும் மணிக்கட்டிலும் போகாமல் பாதுகாக்கும்.

சென்ற ஆண்டிலிருந்து இந்தக் கருவிகள் தயாரிப்பிலிருந்து மைக்ரோசாப்ட் வெளிவந்துவிட்டது. இவற்றின் காப்புரிமைப் பெற்ற இன்-கேஸ் என்கிற நிறுவனம் அடுத்த ஆண்டிலிருந்து தயாரித்து விற்கப் போகிறார்கள், ஆனால் அவை வரும் வரை எனக்குப் புதிதாக ஒன்று தேவைப்பட்டது. விசைப்பலகைகள் மற்றும் கணினியின் உபகரணங்களில் புகழ் பெற்ற லாஜிடேக் சமீப ஆண்டுகளாக லாஜிடேக் எர்கோ கே860 (Logitech Ergo K860) என்பதை வெளியிட்டிருக்கிறார்கள், இது நான் சொன்ன மைக்ரோசாப்ட் விசைப்பலகையைப் போன்ற அமைப்பைக் கொண்டது. இது அமெரிக்காவில் ரூபாய் பன்னிரண்டாயிரம், இந்தியாவில் இரட்டிப்பு விலை. கென்ஸிங்கடன் (Kensington) நிறுவனத்தின் ப்ரோ-பிட் விசைப்பலகை இந்தியாவில் ஏழாயிரம் ரூபாய்க்குக் கிடைக்கிறது. நான் வாங்கியது லெனோவாவின் புதிய “லெனோவா கோ வயர்லேஸ் ஸ்பிலிட்” (Lenovo Go Wireless Split keyboard). சிங்கப்பூரிலிருந்து வந்த நண்பரிடம் சொல்லி வரவைத்தேன், அங்கே இதன் விலை ரூபாய் எட்டாயிரம். கடந்த சில மாதங்களாகப் பயன்படுத்துகிறேன், வசதியாக இருக்கிறது.
ஒரு விசயம் கவனமாக இருக்கவும், இந்த விசைப்பலகையைக் கணினியோடு இணைக்க ஒரு சின்னஞ்சிறிய யு-எஸ்-பி. இணைப்பு வருகிறது, இது நம் ஒரு ரூபாய் நாணயத்தைவிடச் சிறிது, எளிதாகத் தொலைந்துவிடும், அப்படி நான் தொலைத்துப் பல நாட்கள் தேடிக் கண்டுபிடித்தேன். இது இல்லாமல் இந்த விசைப்பலகையை எந்த வகையிலும் பயன்படுத்த முடியாது. அதனால் தேவையில்லாத போது இதைப் பாதுகாப்பாக வைக்க பேட்டரிகளை உள்ளே போடும் அறையில் இருக்கும் குழியில் வைத்து மூடவும்.

பொறுப்பு துறப்பு: இந்தப் பதிவில் எந்த விளம்பரமோ, நிதியுதவியோ பெறப்படவில்லை. முழுக்க நான் காசுக் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் பொருட்களைப் பற்றியது. இவை என் தனிப்பட்ட அனுபவம், இதன் பயனைப் பற்றி எந்தவித உத்தரவாதமும் நான் அளிக்கவில்லை. நன்றி.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

