கீழே நேற்று வந்த செய்தி, இவை மாதிரியான சிக்கல்களைத் தவிர்க்கவே நான் என் கடவுச்சொற்களைப் பாதுகாப்பாக என் கணினியிலேயே இயங்கும் KeePass செயலியில் மட்டுமே சேமித்து வைக்கிறேன்.
செய்தி இது தான்: நேற்றைக்கு விண்டோஸ் கணினிகள் பலவற்றில் கூகுள் க்ரோம் வலையுளாவியில் சேமித்து வைத்திருந்த கடவுச்சொற்கள் பல மணி நேரம் காணாமல் போனது. இந்தத் தவறான பதிப்பு (M127 version of the Chrome browser), ஒரு குறிப்பிட்ட குழுவில் இருந்த கால்வாசி நபர்களில் இரண்டு சதவிகிதம் தான் பாதிக்கப்பட்டதாகக் கூகுள் செய்திக் குறிப்பு சொல்கிறது.
எந்த ஒரு நிறுவனத்தையோ, ஒரு செயலியையோ நம்பி நம் முழு டிஜிட்டல் வாழ்க்கையின் சாவிகளைக் கொடுத்து வைக்கக் கூடாது. அதனால் நான் ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள், லாஸ்ட்-பாஸ் என்று எதிலும் என் கடவுச் சொற்களைச் சேர்த்து வைப்பதில்லை. ஒன்று அவை அவர்களின் தயாரிப்புகளில் மட்டுமே இயங்கும், அடுத்தது என்றைக்கு அவர்கள் அந்தச் சேவையை மூடுவார்கள் என்று தெரியாது.
கீ-பாஸும் ஒரு செயலி தானே என்று கேட்டால் – நல்ல கேள்வி தான் – ஆனால் அது திறமூலம் என்பதால், அதைக் கொண்டு சேமித்த கோப்பை (KDBX) பலரின் செயலிகளிலும் எளிதாகத் திறந்து, பயன்படுத்தலாம். இந்த (KDBX) கோப்பை உங்களிடம் ஏற்கனவே இருக்கும் மேகக் கணிமை சேமிப்புக் கிடங்கில் வைத்துவிட்டால் உங்களின் எல்லாக் கருவிகளிலிருந்தும் பயன்படுத்திக் கொள்ளலாம். கீ-பாஸ் கோப்புகளைப் படிக்கும் செயலிகள் ஆன்ட்ராய்ட், ஐ-ஒ-எஸ் என எல்லாச் செல்பேசிகளுக்கான செயலிகளும் அவரவர்களின் செயலிகள் கடைகளில் கிடைக்கிறது.
ஒவ்வொரு கருவியிலும் நான் பயன்படுத்தும் செயலிகள் கீழே, இவை அனைத்தும் கீ-பாஸ் செந்தரத்தைச் செயல்படுத்துபவை, எல்லாமே ஒரே (KDBX) கோப்பைப் படிக்கக் கூடியவை. அதனால் ஓர் இடத்தில் நான் மாற்றிய கடவுச்சொல்லைச் சேமித்தால், அது (KDBX) கோப்பில் மாறி, என் மேகக் கணிமை சேமிப்பிலும் மாறிவிடும். அதனால், வேறு கருவியிலிருந்து இதே (KDBX) கோப்பை அந்தக் கருவிக்கான செயலியைக் கொண்டு படித்தால் அங்கே இந்த மாற்றம் தெரியும்.
- Windows: KeePassXC [keepassxc.org]
- Mac OS: KeePassXC [keepassxc.org]
- Android: “Keepass2Android Password Safe” by “Philipp Crocoll (Croco Apps)”
- iOS: “Strongbox – Password Manager” by Phoebe Code Limited
இதைப் பற்றி என்னுடைய ‘நுட்பம்’ நூலில் 5-ஆவது அத்தியாயத்தில் எழுதியுள்ளேன். இந்தக் கடவுச் சொற்கள் பிரச்சனையிலிருந்து பெருமளவில் விடுபட பாஸ்-கீ (Passkey) என்கிற செந்தரம் வந்துள்ளது. தற்போது கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் அவர்களின் தயாரிப்புகளில் ஓரளவு செயல்படுத்துகிறார்கள், இன்னும் ஒன்று, அல்லது இரண்டு ஆண்டில் இது முழுமையாகச் செயலுக்கு வரும் என நம்புகிறேன் – அப்படி நடந்தால் கடவுச்சொற்கள் குழப்பம் சாதாரணப் பயனர்களுக்குத் தீரும். இதைப் பற்றி பின்னர் சரியான தருணத்தில் விரிவாக எழுதுகிறேன்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

