தொழிலிலும் வாழ்கையிலும் நான் அடிப்பட்டுக் கற்றுக் கொண்ட பாடம், நமக்கு தேவை என்கிற பொழுது கடன் கேட்டால் வங்கியில் தரமாட்டார்கள் – முதலீட்டாளர்களும் நம்முடன் பேசக்கூட மாட்டார்கள். நமக்குத் தேவையே இல்லை, நம்மிடமே சேமிப்பில் பணம் இருக்கும் போது வாங்கிக்கோ வாங்கிக்கோ என்று வங்கிக் கிளைக்குப் போகும் போதெல்லாம் கேட்பார்கள் – அப்படிப்பட்ட நேரத்தில் வங்கி மேலாளரை நாம் பார்க்கக் கூட மாட்டோம். இது ஒரு முரண்! இந்த முரணை இன்று நேற்று நாளை (2015) திரைப்படத்தில் முன்னும், பின்னும் என்று நகைச்சுவையாக ஆனால் ஆழமாக காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர் ஆர்.ரவிக்குமார்.

இதைப் போல வங்கி விளம்பரங்களைப் பார்த்து சலுகைகள் நன்றாக இருக்கிறதே என்று ஆசைப்பட்டு கடன் அட்டைக்கு (Credit Card) விண்ணப்பித்தால், நம்மைப் பாடாகப்படுத்துவார்கள். இப்படித் தான் பன்னாட்டு நிறுவனங்களான மாஸ்டர் கார்டு, விசா கார்டுகளின் இணைப்பில்லாமல் இந்திய வங்கிகளின் கூட்டாக உருவாக்கிய ரூபே கார்டு (Rupay Card) ஒன்று வாங்கிக் கொண்டால், யூபிஐ (UPI) மூலமாகப் பணம் செலுத்துதல் எளிதாகவிருக்கும் (சிறு சிறு செலவுகளும் நம் முதன்மை வங்கிக் கணக்கில் பதிவாகி நம்மை குழப்பாது) என்று எண்ணி நான் கணக்கு வைத்திருக்கும் தனியார் வங்கியில் விண்ணப்பித்தேன். அதுவும் அவர்களின் இணையத்தளத்தில் ரூபே அட்டைக்கு விண்ணப்பிக்க வசதியில்லை, வங்கிக் கிளையிலிருந்தும் விண்ணப்பிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் பே-டி-எம் செயலியில் வந்த ஒரு விளம்பரத்திலிருந்து வங்கியின் சொந்த இணையப்பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்க முடிந்தது. இதே வங்கியில் 25-ஆண்டுகளுக்கு மேலாக வாடிக்கையாளராக இருக்கிறேன், அதிகம் இல்லையென்றாலும் சொல்லிக் கொள்ளும்படி சேமிப்பும், மியூச்சுவல் ஃபண்டிலும் பணம் இருக்கிறது. இருந்தும் காரணமே சொல்லாமல் என் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்து குறுஞ்செய்தி அனுப்பினார்கள். வங்கிக் கிளைக்குச் சென்று உதவி-மேலாளரைக் கேட்டால், எங்களுக்கு இந்த ரூபே அட்டைபற்றி இங்கே கிளையில் எதுவுமே தெரியாது, இதெல்லாம் தலைமை அலுவலகத்தின் நேரடிப் பார்வையில் நடக்கிறது என்று கைவிரித்தார். இது நடந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் இன்று காலை அவரே என்னைச் செல்பேசியில் அழைத்து, ஒரு புது மியூச்சுவல் ஃபண்டு வந்திருக்கிறது, அதில் பணம் போட்டால் (வங்கிக்கு) நல்லது என்று விளம்பரம் செய்தார்!

சரி, இந்த வங்கி சரிவராது என்று, நான் 20-ஆண்டுகளாகப் பயன்படுத்தும் (மாஸ்டர் கார்டு) கடன் அட்டையை வழங்கிய இன்னொரு தனியார் வங்கியின் இணையத்தளத்தில் சென்று அவர்களின் ரூபே கார்டுக்கு விண்ணப்பித்தேன். அவர்களின் அலுவலர் வீட்டுக்கே வந்து ஆதார், பான் மற்றும் என் கையெழுத்தை வாங்கி சென்று, ஓரிரு நாளில் அட்டை வந்துவிடும் என்று சென்றார். நடந்தது என்னவென்று நீங்களே யூகித்திருப்பீர்கள் – இந்த வங்கியும் காரணமே சொல்லாமல் என் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்து அதைப்போலவே ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார்கள். இங்கே இரண்டு கேள்விகள் வரலாம், ஏன் நான் அரசு வங்கிகளில் முயற்சி செய்யவில்லையென்று – ஓர் அரசு வங்கியில் எனக்குச் சேமிப்புக் கணக்கு இருக்கிறது, முன்பு அவர்களிடம் இருந்து ஓர் கடன் அட்டையும் வைத்திருந்தேன் – அது சரியாக வேலைச் செய்யவில்லை, அவர்களின் செல்பேசி செயலியும் சுமார் தான், அதனால் பயன்படுத்துவது கடினமாக இருக்கும் என்று அவர்களைத் தவிர்த்துவிட்டேன். இரண்டாவது கேள்வி, என் சிபில் ஸ்கோர் நன்றாகவே இருக்கிறது, அது பிரச்சனையாக இருக்க வாய்ப்புகள் இல்லை – கடைசியாக நான் வட்டிகட்டி பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது – ‘கடன் பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பதை அனுபவத்தில் உணர்ந்த காரணத்தால் கடன் வாங்குவதை நான் முடிந்தவரைத் தவிர்க்கிறேன். இருந்தும் ஏன் கடன் அட்டை வேண்டும், செலவு அட்டை (டெபிட் கார்டு) வைத்துக் கொள்ளலாமே என்றால், திருடர்களிடம் இருந்து கடன் அட்டையில் கிடைக்கும் பாதுகாப்பு கூடுதல், நாம் செலவு செய்யவில்லை என்று நாம் புகார் அளிப்பதும் எளிது, மேலும் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் இணையவழி பயன்பாட்டிற்குக் கடன் அட்டை சிறந்தது.

சீ சீ இந்தப் பழம் புளிக்கும், இனி எனக்கு ரூபே அட்டையே வேண்டாம், ஏனோ இந்திய வங்கிகளுக்கு வட்டிகட்டாத வெங்கடரங்கனை பிடிக்கவில்லை என்று இந்த முயற்சியை ஏப்ரல் மாதமே விட்டுவிட்டேன். இந்த நிலையில் நேற்று (ஞாயிறு) மாலை நான் தற்போது பயன்படுத்தும் (விசா) கடன் அட்டையை வழங்கிய அரசு சார்ந்த வங்கியிலிருந்து எனக்கு ஒரு மின்-அஞ்சல் வந்தது. அதில் எனக்கு அவர்களாகவே, நான் விண்ணப்பிக்காமலே, ஒரு ரூபே அட்டையை வழங்க ஓப்புதல் ஆகியிருக்கிறது, எனக்கு இதில் சம்மதம் என்றால் அவர்களின் இணையத்தளத்திற்கு (அல்லது செயலிக்கு) சென்று ஏற்கனவே இருக்கும் கடன் அட்டையின் (கடன்) வரம்பிலிருந்து பிரித்து புதிதாக ரூபே கடன் அட்டை பெற்றுக் கொள்ளலாம் என்ற செய்தி அதிலிருந்தது. விடுவேனா! உடனடியாக அதைச் செய்தேன், இந்த முறை எனக்கான கோள் நிலைகள் சரியாக இருந்ததால் எல்லாம் தடங்கல் இல்லாமல் போனது, அவர்களின் இணையத்தளத்தில் இருந்தே மின்-கோப்பாக ரூபே கடன் அட்டையும் நொடியில் வழங்கப்பட்டது – இதே கடன் அட்டை நெகிழியாக ஓரிரு நாட்களில் என் வீட்டு முகவரிக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பல முயற்சிக்குப் பிறகு கடைசியாக இந்த ரூபே அட்டை எனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி!

இதிலிருந்து என்ன தெரிகிறது? வங்கியை (அல்லது பணத்தை) தேடி நாம் போனால் நம்மை மதிக்க மாட்டார்கள், அவர்களாகவே நம்மை தேடி வர வேண்டும், அதற்கு நாம் நம் வேலையை (உழைக்க) செய்து கொண்டே இருந்தால் போதும், வங்கியின் விளம்பரங்களைக் கண்டு ஆசைப்படக் கூடாது. நல்லதே நடக்கும். நன்றி.

Tagged in: