இது சமூக சீரழிவு. கலாச்சார சீரழிவு என்று சொல்லவில்லை, ஆனால் கண்டிப்பாகச் சமூக சீரழிவு. பெண்கள், ஆண்கள் என்று பாகுபாடு இல்லை, யாராக இருந்தாலும் அவர்களை மறந்து/அல்லது வேண்டும் என்றே குடித்துவிட்டு ரௌடியிசம் பண்ணுவது சமூக சீரழிவு தான். இந்த மாநிலத்தில் குடிக்கவில்லையா, அந்த நாட்டில் குடிக்கவில்லையா என்ற சண்டைக்கு வரவில்லை. இந்தச் செய்தியைப் படித்ததிலிருந்து எந்த மாதிரியான ஓர் உலகத்தில் வாழுகிறோம் என்று நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது. என்ன கொடுமை சரவணன் இதெல்லாம்?
22 மார்ச் 2023 இந்து தமிழ் திசை நாளிதழில் வந்த செய்தி “திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே மது போதையில் பேருந்துக்கு அடியில் படுத்து ரகளையில் ஈடுபட்ட பெண்கள். திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே வாலாஜா சாலையில் மார்ச் 17-ம் தேதி நள்ளிரவு 6 இளம் பெண்கள் மது போதையில் அந்த வழியாகச் சென்ற நபர்களிடம் ரகளையில் ஈடுபட்டனர். மேலும், அந்த வழியாக வந்த மாநகர அரசுப் பேருந்தின் முன்படுத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர். அதோடு நின்றுவிடாமல் சரக்கு வாகனம் ஒன்றையும் மறித்து தகராறில் ஈடுபட்டனர்.”
இதற்கு வெறும் அரசைக் குற்றம் சொல்லமாட்டேன், அவர்கள் (எந்தக் கட்சியாக இருந்தாலும்) ஒரு காரணம் தான். இந்தியா போன்ற வளரும் நாட்டில் அரசாங்கத்திற்கு மக்கள் நலனில் அதிக அக்கறை வேண்டும், தனி மனித விருப்பம் என்று எல்லாவற்றையும் விட்டுவிட முடியாது. அதே சமயம் பீகார், குஜராத் மாநிலம் போலத் தடை செய்யச் சொல்லவில்லை. குடியின் தீங்கை நிறைய நிறைய எடுத்துச் சொல்லும் கடமை அரசுக்கு இருக்கிறது. அரசே கடைகளை நடத்தி இந்தத் துறையின் மேல் இருந்த அழுக்கை நீக்கி அதைப் புனிதமாக்கிவிட்டது. அது தவறு. அரசு விற்கவில்லை என்றால் யாரும் குடிக்க மாட்டார்களா என்று வாதம் செய்ய வேண்டியதில்லை. அரசுக்கு, கட்சிகளுக்குச் சான்றிதழ்கள் வழங்குவதால் சமூகம் மேம்படாது.
இந்த சீரழிவில் சினிமாவுக்கும், தொலைக்காட்சிக்கும், ஊடகங்களுக்கும் பெறும் பங்கு இருக்கிறது. எம். ஜி. ஆர் படங்களில் கதாநாயகன் எப்போதும் குடிக்க மாட்டார், வில்லன் தான் குடிப்பார். குடிப்பது கெட்டவர்கள் செய்யும் செயல் என்று காட்டிய தமிழ் சினிமாவில் இன்று, டாஸ்மாக் குத்துப் பாட்டு இல்லாத படங்கள் வெறும் பாதிக்கும் குறைவாகத் தான் இருக்கும். டாஸ்மாக் கடையில் வில்லன் குடிக்கிறான், கதாநாயகன் குடிக்கிறான், கதாநாயகி குடிக்கிறாள். நண்பர்களோடு ஆனந்தமாக இருப்பது போலக் காட்ட வேண்டும் என்றால் முன்பு வெளியூர் லொகேஷனில் ஆடல் பாடலைக் காட்டுவார்கள். இப்போது கையில் பாட்டில், உடனே அவர்கள் ஜாலியாக இருக்கிறார்கள் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசு முயற்சி செய்தால் நிச்சயம் நல்லது நடக்கும். சட்டமும் கொஞ்சம் உதவும். உதாரணம், சிகரெட் பிடிப்பது (இணைத்துள்ள புள்ளி விவரங்களைப் பார்க்கவும்) இன்று குறைந்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் முன்பு சாதாரணமாக நம் மூஞ்சியில் புகைவிட்டவர்கள் இன்று தயங்கி நகர்ந்து செல்கிறார்கள். அதே போலக் குடிப்பது தவறு என்று உணர்வை வரச் செய்ய வேண்டும்.
அளவாகக் குடிப்பது உடம்புக்கு நல்லது என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரை பணக்கார வாதம். அவர்களின் குடல் வெந்தால் கூட மாற்றுக்குடல் வாங்க முடியும். குடியானவன் என்ன செய்வான்(வாள்)?. அப்படி அது நல்லது என்பது உண்மையென்றால், ரேஷனில் மாதம் சில லிட்டர்கள் இலவசமாகக் கொடுக்கலாமே? கல்லூரிகளிலிருந்து ஏற்ற அளவை அரசே கற்றுக் கொடுக்கலாம். அதைச் செய்யும் வரை இந்த அளவு நல்லது என்ற வாதம் வேண்டாம், மன்னிக்கவும்.
நன்றி.

Smoking rate is coming down in India
Nice
But most of the good or bad things start with govt nurturing.
History has taught us lessons in that direction