எதிரிகளோ, திடீர் திருப்பங்களோ இல்லாமல் இயல்பாக நடக்கும் ஒரு குடும்பத்தின் கதையைக் கூட இவ்வளவு சுவாரசியமாக சொல்ல முடியுமா என்று வியக்க வைத்த நாவல், எழுத்தாளர் திரு அசோகமித்திரன் அவர்களின் இந்தியா 1944-48, பக்கங்கள் 215. அவரின் ஒன்றிரண்டு புனைவுகளை நான் படித்திருக்கிறேன், இது ஏனோ என்னை சொக்கிவிட்டது. நடுயிரவு வரைப் படித்துவிட்டு புத்தகத்தை முடித்தபின் தான் உறங்க போனேன், கனவில் சுந்தரமும் மணியும், பார்வதியும், லக்ஷ்மியும், பம்பாய் நகர அடுக்குமாடியும் தான் தெரிந்தது.
பம்பாய் 1944, இந்தியா 1948 என்று இரு குறுநாவல்களாக வெளிவந்ததை, ஒரே நாவலாக காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுயிருக்கிறார்கள் – ஒன்றாக வாசிப்பது தான் சரியாக தோன்றுகிறது, இரண்டிலும் அதே கதாபாத்திரங்கள் தான், தொடர்ச்சியாகத் தான் வருகிறது. முதல் பகுதியில் தம்பி குரலில் கதைப் போகிறது, அவனது பெயரே நமக்கு இறுதியில் தான் தெரிகிறது. இரண்டாம் பகுதி அண்ணனின் பார்வையிலிருந்து வருகிறது.
நாற்பதுகளில் பாலக்காட்டில் இருந்த ஒரு தமிழ் குடும்பம் தனது குடும்ப தலைவனை அவரது சிறு வயதிலேயே இழந்துவிடுகிறது, இரண்டு சின்ன ஆண் பிள்ளைகளோடு இளம் விதவையான அம்மாவை அவரது சகோதரர்கள் (பையன்களின் மாமாக்கள்) காப்பாற்றுகிறார்கள். ஒரு மாமா சந்நியாசியாகிவிடுகிறார், அவரது பெண்ணை பெரிய பையனுக்கு கட்டிவைக்கிறார்கள், அவனும் புனே, பம்பாய் என்று போய் கடினமாக உழைத்து, பின் அமெரிக்க போய் பயிற்சி பெற்று, பெரிய வேளையில் இருக்கிறான், அவன் தான் குடும்பத்தை பம்பாய் அழைத்து வந்து, தந்தை நிலையில் இருந்து காப்பாற்றுகிறான். சின்ன பையனும் சும்மாயில்லை, அவனும் உழைக்கிறான், முன்னேறுகிறான் – இருவரும் குடும்ப சூழ்நிலை அறிந்தவர்கள்.
அந்தக் காலத்து கணவன்-மனைவி உறவு என்றால் என்ன என்பதை சுந்தரத்திற்கும் பார்வதிக்கும் நடப்பதிலிருந்து தெரிந்துக்கொள்ள முடிகிறது. அந்தக் காலத்து மாமியார்-மாட்டுப்பெண் உறவு என்ன என்பதையும் பார்க்க முடிகிறது, மாட்டுப்பெண்களுக்கு ஆங்கிலமும் தெரியும், கார் ஒட்டவும் தெரியும், ஆனாலும் அவர்களின் நிலை பெரும்பாலும் அடுப்படிதான். அம்மா அடிப்பணிந்தும் வருகிறாள், அவளே கட்டளைகளையும் இடுகிறாள். கதையில் நட்பும் உண்டு, காதல் உண்டு, காதல் தோல்வியும் உண்டு, அண்ணன்-தம்பி பாசமும் உண்டு.
இந்தியாவின் மிக முக்கியமான ஆண்டுகளில் கதை நடந்தாலும், இதில் சுதந்திர போராட்டம் கிடையாது, அரசியல் கிடையாது. ஆனாலும் நம்மால் அப்போதைய மக்களின் உணர்ச்சிகளை உணர முடிகிறது, போர்க் கால ரேஷன் வரிசையில் நிற்க முடிகிறது, பம்பாய் நகர மின்சார இரயிலில் பயணிக்க முடிகிறது, ஆபத்தான சோப் தயாரிக்கும் தொழில்சாலையைப் பார்வையிட முடிகிறது, பம்பாய் துறைமுக வெடிப்பை கேட்க முடிகிறது, தாராவியில் குடியிருந்தால் கை, கால் போகும், உயிரேகூட போகும் என்று அச்சப்படவும் முடிகிறது. அதோடு சுதந்திரத்திற்குப் பின்னர் வந்த இந்திய அரசின் பழிக்கப்பட்ட சிகப்பு நாடாவின் அறிமுகத்தையும் டெல்லிக்கு போய் காண முடிகிறது.
மராட்டியர் என்றால் கரடானவர்கள், வீட்டைக் காலி செய்யமாட்டார்கள், மதராஸி என்றால் ஒழுங்காகயிருப்பான் என்பது போன்ற பொதுவான பார்வை எவ்வளவு தவறு என்றும் வெவ்வேறு கதாபாத்திரங்கள் மூலமாக தெரிந்துக்கொள்ள முடிகிறது – இத்தனைக்கும் கதாபாத்திரங்கள் மொத்தமே விரல்களால் எண்ணக் கூடியவை தான். பல பக்கங்களில் கதை, அமெரிக்காவுக்கும் செல்கிறது. ஒன்றிரண்டு பக்கங்களில் சென்னையும் உண்டு, ரிஷிகேஷூம் வருகிறது. ஒரே கதைக்களம் எப்படி பல இடங்களுக்கு இவ்வளவு எளிதாக பயணிக்க முடிகிறது என்று வியப்பாக இருக்கிறது.
நல்ல புனைவை விரும்புவோர் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.

மாதிரி பக்கம் – திரு அசோகமித்திரன் அவர்களின் இந்தியா 1944-48. மொத்த பக்கங்கள் 215.
Comments