“நாரத ராமாயணம்” என்ற இந்நூல் 1955இல் எழுத்தாளர் திரு புதுமைப்பித்தன் அவர்களால் எழுதப்பட்டு பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது (2020) அமேசான் கிண்டில் பதிப்பாக வந்திருக்கிறது. இது ஒரு பகடி நூல் என்பதை நினைவில் வைத்துப் படிக்க வேண்டும்.

இராமாயணம் ஒவ்வொரு பிரதேசத்திலும், மொழியிலும் பல்வேறு விதமாக சொல்லப்பட்டுள்ளது, அவற்றில் நான் படித்த சில: திரு.பழ.கருப்பையா எழுதியுள்ள எல்லைகள் இல்லா இராம காதை, Sita: An Illustrated Retelling of Ramayana by Devdutt Pattanaik, Sita’s Ascent by Vayu Naidu, and, Scion of Ikshvaku by Amish Tripathi. இருந்தும் ராமாயணத்தை இப்படியும் தொடர்ந்து, சமக்கால அரசியல் விசயங்களோடு இணைக்க முடியுமா என்பதில் எழுத்தாளர் நம்மை அசத்துகிறார்.

புத்தகத்தின் ஆசிரியர் குறிப்பு இப்படி ஆரம்பிக்கிறது:
//கொஞ்ச நாட்களுக்கு முன், சுற்றுப் பிரயாணமாக நான் சீன தேசத்திற்குச் சென்றிருந்தேன். ஒரு நாள் ஹோ-யாங்-ஷே என்ற சிறு கிராமத்தில் தங்க நேர்ந்தது. அந்த ஊருக்கு வெளியே, ஒரு காட்டில், போங்-வோ-புய் என்ற பாழடைந்த புத்த மடம் இருப்பதாகத் தெரிந்தது. அதைப் பார்க்க சென்றேன். அங்கிருந்த ஒரு பெரிய புத்த விஹாரத்தின் கீழ் சில செப்புப் பட்டயங்கள் கிடக்கக்கண்டு, எடுத்துப் பரிசோதித்தேன். அது தேவநாகரியில் எழுதப்பட்ட ஒரு பழைய கிரந்தமாக இருக்கக்கண்டு முற்றிலும் வாசித்தேன். … கிரந்தம் இரண்டாவது சருக்கத்தில் ஸ்ரீ ராமபிரானது அரசாட்சியிலிருந்து ஆரம்பித்து அவர் வைகுந்த பதவி அடையும் வரை ஒரு பர்வமாகவும், பிறகு அவர் சந்ததியின் சரித்திரங்களைத் திரட்டி, ‘ரகுவம்ச பராக்ரமம்’ என்ற தலைப்பில் இரண்டாவது பர்வமாகவும் இருந்தது. //

என்ன ஒரு அருமையான கதைக்களம்! நாம் கேள்விப்படாத ஒரு கோணம், நமது ஆர்வத்தைத் தூண்டுகிறார் திரு புதுமைப்பித்தன். இராமனின் இறுதிக் காலங்களில் அவரும் ஹனுமானும் எப்படி முதுமையைக் கழிக்க முடியாமல் தங்களது இளம் வயது நிகழ்ச்சிகளை நினைவுக்கூர்ந்து, அதிலேயே பொழுதைக்கழிக்கிறார்கள் என்று சுவையாகச் செல்கிறது.

ஆனால் சிலப்பக்கங்களுக்குப் பிறகு, இந்தப் போக்கே தொடர்வதால் அலுப்புத் தட்டுகிறது. இராமாயணத்தின் முக்கியப்  பாத்திரங்களின் (குகன், விபீஷணன், சுக்ரீவன், பரதன்) என்ற பெயர்களே இராமனின் பேரர்கள் பெயர்களாக வருகிறது. அங்கேயே எனக்குக் குழப்பம் ஆரம்பிக்கிறது. பிறகு அவர்களின் தலைமுறையினர்களின் பெயர்களுமே இதுவாகவே வருகிறது, எந்தத் தலைமுறையைப் பற்றிச் சொல்லப்படுகிறது என்று எனக்குக் குத்துமதிப்பாகத் தான் விளங்கியது.

குகன் வம்சத்தினர் தைரியேமே இல்லாமல் அடிப்பணிந்து விவசாயத்தில்  ஈடுப்பட்டு வருகிறார்கள். விபீஷணன் வம்சத்தினர் ஸ்ரீ இராமருக்கு ஒரு கோயில் கட்டுவதிலும் அதில் தினம் பூஜை செய்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள், இரண்டொரு தலைமுறையினர் மந்திரிகளாகவும் வந்துப் போகிறார்கள்.  சுக்ரீவன் வம்சத்தினர் சர்வக் காலமும் மதுவில் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். பரதன் வம்சத்தினர் தான் நமக்குக் கொஞ்சம் நம்பிக்கைக் கொடுக்கிறார்கள், ஆனால் அவர்களும் நடுவில் காணாமல் போய், கடைசியில் வருகிறார்கள். இதற்கு நடுவில் சுமந்திரனும் அவரது மகன் சுமந்திரபாலன் அயோத்தி நாட்டின் சர்வ வல்லமை மிகுந்த மந்திரிகளாக வலம் வருகிறார்கள்.

இராமனின் பேரர்களின் காலத்திலேயே கதை காந்தாரத் தேசத்து அரசன் முசல்வாஹனன் தலைமையில் வரும் முகலாயப் படையெடுப்புக்குச் செல்கிறது. பிறகு வெள்ளையத் தேசத்து (ஜம்புத் தீபத்தின் மேற்கே, சப்தச் சமுத்திரங்களுக்கு அப்பால் வெள்ளி தீவகம் என்ற பிரதேசம்) வியாபாரப் பிரதிநிதிகளான செட்டியார்கள் (என்பவர்கள்) வந்து  பட்சணங்கள் (உணவு) தயாரிப்பில் ஆதிக்கம் செய்து, உள்நாட்டு (அயோத்தி) பட்சண உற்பத்தியை அழித்து, நாட்டையே தங்கள் நாட்டின் வெள்ளியம்பலத் தம்பிரான்களைக் கொண்டு அவர்களின்  கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறார்கள். அதற்குப் பிறகு கதை என்று எதுவுமே இல்லாமல் எங்கெங்கோ சென்று திடீர் என்று நடுவில் முடிந்துவிடுகிறது.

வெளிப்படையாகக் சொல்ல வேண்டும் என்றால் எனக்கு இந்தப் புத்தகம் அவ்வளவாகப் புரியவில்லை, அதனால் என்னால் முழுமையாக ரசிக்க முடியவில்லை. இன்னொரு முறைப் படித்தால் புரியலாம். எங்கோ சூடுப்பிடிக்கும் என்று எதிர்ப்பார்த்து ஏமாந்தேன்.

Categorized in:

Tagged in:

,