
Kadavulum Kandasamy Pillaiyum (1943) by Thiru Pudhumaipithan
நண்பர் திரு கோபு அவர்களின் பரிந்துரையில் எழுத்தாளர் திரு புதுமைப்பித்தன் அவர்கள் 1943இல் எழுதிய “கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்” என்ற சிறுகதையை இன்று படித்தேன். சுமார் 23 பக்கங்கள் இருக்கும் இந்தச் சிறுகதை இலவசமாக விக்கிப்பீடியாவில் மற்றும் வெப்-ஆர்கைவ்யில் கிடைக்கிறது (PDF ebook) .
சித்த வைத்தியம் மற்றும் சித்த வைத்திய பத்திரிக்கை ஒன்றை நடத்தும் திரு கந்தசாமிப் பிள்ளை, ஒரு நாள் சென்னை ‘பிராட்வே’ அருகே நின்றுக்கொண்டு சிக்கனமாக எப்படி திருவல்லிக்கேணியில் இருக்கும் தன் வீட்டிற்குச் செல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு வயதானவர் வந்து அவரிடம் வழி கேட்கிறார், பிறகு இருவரும் சென்று அருகில் காபி அருந்துகிறார்கள், அப்போது அந்த வயதானவர் தான் கடவுள் எனக் கூற, எந்தொரு ஆச்சாயமும் இல்லாமல் கந்தசாமி அவரிடம் நட்பாகப் பழகுகிறார். பொதுவாக கடவுள் நம் முன் தோன்றும் கதைகளில், அவர் உடனேயே ஒரு வரம் கொடுப்பார், வரம்பெற்ற மனிதரின் வாழ்க்கையும் உடனே மாறிவிடும். ஆனால் இந்தக் கதையில் கந்தசாமிப்பிள்ளை கடவுளிடம் முதலிலேயே கூறிவிடுகிறார், நீங்கள் எந்த வரமும் எனக்குத் தரக்கூடாது, எந்தவிதமான லீலைகளையும் செய்யக்கூடாது, சாதாரண மனிதராக வாழ்வதாக இருந்தால் என்னுடன் வரலாம் என்று. கடவுளும் அதற்கு ஒப்புக்கொண்டு அவருடன் சென்று கந்தசாமிப் பிள்ளையின் வீட்டில் வசிக்க ஆரம்பிக்கிறார். பிறகு ஒரு நாள், சம்பாதியத்திற்காக கடவுளை ஒரு பெரிய மனிதரிடம் வேலைக்குக் கூட்டிச் செல்கிறார் கந்தசாமி பிள்ளை, அதன்பின் என்ன நடக்கிறது? படித்துப் பாருங்களேன், சுவையாக இருக்கிறது.
பிற்காலத்தில் தமிழில், உருவங்கள் மாறலாம் (1983), அறை எண் 305இல் கடவுள் (2008), சாக்லேட் கிருஷ்ணா எனப் பல நாடகங்களிலும் சினிமாக்களிலும் கடவுள் மனிதர்கள் முன்பு தோன்றி இங்கேயே வாழ்வது மாதிரி வருகிறது. தேடினால் அந்தக் கதைகளில், இந்தச் சிறுகதையின் தாக்கத்தை நாம் பார்க்கலாம், அவற்றில் எல்லாம் கடவுள் ஏதாவது ஒரு வகையில் லீலைகள் செய்கிறார், அல்லது வருங்காலத்தைக் கூறுகிறார். இந்தச் சிறுகதையில், கடவுள் அப்படி எதுவும் செய்வதில்லை, அது தான் இந்தக் கதையின் சிறப்பாக எனக்குத் தோன்றுகிறது. தற்காலச் சமூகத்தை நையாண்டி செய்யவே ஆசிரியர் கதையை அப்படிக் கொண்டு செல்கிறார்.
கதையில் பல இடங்களில் ஆசிரியர் தனது முத்திரையைப் பதிக்கிறார், அதில் எனக்கு மனதில் பதிந்த சில:
- கதையில் கடவுளிடமே கள்ளநோட்டு வருகிறது கடவுளும் கூடக் கொடுக்கிறார்,
- கந்தசாமி கடவுளிடம் இருந்து தனது பத்திரிகைக்கு ஆயுள் சந்தா வாங்குவது ஒன்றில் மட்டுமே குறியாக இருக்கிறார்,
- ஏறிவந்த கை ரிக்ஷா வண்டிக்காரன் திருப்தியான பணம் தரப்பட்டதால் கடவுளைப் பார்த்து நீங்க “”நல்லா இருக்க வேண்டும் சாமி” என்று உள்ளம் குளிரச் சொல்கிறான்,
- கடவுளின் கழுத்தில் நவாப்பழம் மாதிரி கருப்பாக இருப்பதைக் கந்தசாமிப் பிள்ளையின் மகள் வள்ளி (கருவேப்பிலைக் கொளுந்து) பார்த்து ஆச்சரியப்படுகிறாள்.
பின் குறிப்பு: இந்தப் பதிவைப் படித்துவிட்டு நண்பர், எழுத்தாளர் திரு மாலன் அவரின் ஓர் கதையைப் பரிந்துரைத்தார், தலைப்பு: புதுமைப்பித்தனின் எக்ஸ்ரே. மாலன் அவர்களைப் பார்க்க மறைந்த திரு புதுமைப்பித்தனே சென்னைக்கு மீண்டும் வருவது. மூலக் கதைக்குத் தகுதியான ஒரு தொடர்ச்சி இது. இன்னும் கொஞ்சம் தொடரலாமே என எண்ண வைக்கும் நடை, ஆனால் சீக்கிரமே முடிந்துவிடுகிறது!

